Monday, November 7, 2011

செவ்வாய் கிரகத்துக்கு செல்ல விண்வெளி வீரர்கள் ஆய்வு.

மாதிரி கிரகத்தில் இருந்து 520 நாட்களுக்கு பின் திரும்பினர்

செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்காக மாதிரி கிரகத்தில் 520 நாட்கள் தங்கி இருந்த விண்வெளி வீரர்கள் ஆய்வு பணியை முடித்து திரும்பினர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதற்கு முன்னோடியாக செவ்வாய் கிரகம் போன்று மாதிரி கிரகம் அமைத்து அதில் வெளியுலக தொடர்பு இன்றி ஆராய்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதற்காக ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள விண்வெளி ஆய்வு கூடத்தில் செவ்வாய் கிரகம் போன்று செயற்கை கிரகம் உருவாக்கப்பட்டது. அதில் 3 ரஷிய விண்வெளி வீரர்கள், ஒரு இத்தாலி வீரர், ஒரு சீன வீரர், ஒரு பிரான்ஸ் வீரர் என 6 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் கடந்த ஆண்டு (2010) ஜூன் 3-ந் தேதி அந்த மாதிரி கிரகத்துக்குள் சென்றனர். 180 சதுர மீட்டர் அளவுள்ள அந்த ஆய்வு கூடத்துக்குள் (மாதிரி கிரகத்துக்குள்) 520 நாட்கள் அதாவது 1 1/2 ஆண்டுகள் தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று குறிப்பிட்டபடி அவர்கள் அனைவரும் மாதிரி கிரகத்தில் இருந்து வெளியேறி மீண்டும் பூமியில் கால் பதித்தனர். அப்போது அவர்கள் விண்வெளி வீரர்களுக்குரிய நீலநிற உடையில் இருந்தனர். சிரித்த முகத்துடன் ஒவ்வொருவராக மாதிரி கிரக ஆய்வு கூடத்தின் ஏணி படிகளில் இருந்து இறங்கி வந்தனர். அவர்களை வெளியே கூடி இருந்த மற்ற விஞ்ஞானிகள் பூங்கொத்துகளை கொடுத்து கைகுலுக்கி வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் மாஸ்கோவில் உள்ள பயோமெடிக்கல் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் உடல்நலம், மனநலம் பூமியில் இருப்பது போன்று சீராக இருந்தது. எனவே செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது குறித்த ஆய்வு பணி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாதிரி செவ்வாய் கிரகத்தில் தங்கி இருந்த விண்வெளி வீரர் ஒருவர் கூறும் போது, செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளக்கூடிய சாத்தியகூறு இருப்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com