Wednesday, November 9, 2011

ஓரினச் சேர்க்கைக்கு அழைத்து உல்லாசப் பயணிகளிடம் கொள்ளையிட்டு வந்தோர் கைது.

வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை ஓரினச் சேர்க்கைக்கு (தன்னினச்சேர்க்கை)அழைத்து அல்லது அவர்களின் விருப்பத்துக்கு இணங்குவது போன்று நடித்து வெளிநாட்டவர்களின் பணம் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்களை திருடி வந்த திட்டமிட்ட குழுவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தைச் சேர்ந்த விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு-ஏத்துக்கால, தளுப்பத்தை பிரதேசத்தை சேர்ந்த 20, 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் மூவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சந்தேக நபர்களான இளைஞர்கள் வெளிநாடுகளிலிருந்து தனியாக இலங்கைக்கு வரும் உல்லாசப்பிரயாணிகளை இனங்கண்டு அவர்களுடன் பேசிப் பழகி நட்பு கொண்டு வந்துள்ளனர் பின்னர் அந்த வெளிநாட்டவருடன் உல்லாசமாக இருப்பதற்கு இணக்கம் தெரிவித்து தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று பணம் மற்றும் பெறுமதி வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளனர் .

இதே போன்று நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில் உள்ள பிரசித்தமான ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டவரான விக்டோரியா லூவிஸ் வில்பர்ட் என்பவருடன் சந்தேக நபர்களில் ஒருவர் நட்பு கொண்டுள்ளார். பின்னர் அந்த வெளிநாட்டவருடன் உல்லாசமாக இருப்பதற்கு விருப்பம் தெரிவிப்பது போன்று நடித்து, தனியாக அழைத்து சென்று அந்த இளைஞன் ஏனைய இரு சந்தேக நபர்களுடன் சேர்ந்து பிரான்ஸ் நாட்டவரின் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

கொள்ளையிட்ட பணத்தைக் கொண்டு போதைப்பொருள் உட்கொண்டுள்ளதுடன் கணனி, செல்லிடத் தொலைபேசிகள் ,மற்றும் இலத்திரணியல் உபகரணங்களை சந்தேக நபர்கள் கொள்வனவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர்கள் மூவரையும் பொலிசார் கைது செய்ததுடன் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கொள்ளையிடப்பட்ட பணத்தை கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட இலத்திரணியல் உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் கொள்ளையிடப்பட்ட பணத்தை கொண்டு கொள்வனவு செய்யப்பட்ட இலத்திரணியல் உபகரணங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படுவதையும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் படங்களில் காணலாம்

செய்தியாளர் - எம். இஸட். ஷாஐஹான்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com