Sunday, November 13, 2011

இலங்கைக்கான ஒன்லைன் விசா கட்டணங்கள் குறைப்பு

இலங்கைக்கான ஒன்லைன் விசா கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு கட்டணக் குறைப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்படி இலங்கை வரும் சார்க் நாட்டுப் பிரஜைகளுக்கு 10 அமெரிக்க டொலர்களும் ஏனைய நாட்டு பிரஜைகளுக்கு 20 அமெரிக்க டொலர்களும் அறவிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் ஒன்லைன் மூலம் இலங்கை விசா பெறுவதற்கு 50 அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்டன. அதனை குறைக்குமாறு இந்தியா அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த விசா கட்டண நடைமுறை 2012ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விசா கலாவதியாகி அல்லது போலி விசாவின் மூலம் நாட்டினுள் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கான விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இத்தகைய வெளிநாட்டவர்களைக் கைதுசெய்வதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தொடர்பான தகவல்கள் 0094-115 32 90 00 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவர் கேட்டுள்ளார்.

விசா இன்றியும், மோசடி முறைகளைக் கையாண்டும் இலங்கையில் தங்கியுள்ள சில வெளிநாட்டவர்கள் பல்வேறு பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், விசா இன்றியும் விசா சட்டங்களை மீறும் வகையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த மூன்று மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சூலானந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய வெளிநாட்டவர்களுக்கு எமது நாட்டிலுள்ள நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பின் அந்த நிறுவனங்களும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலா வீசா பெற்றுக் கொள்ளும் சிலர் வீசா கலாவதியானதன் பின்னரும் நாட்டில் தங்கியிருப்பதாகக் குறிப்பிபடப்படுகிறது.இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியப் பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் கல்முனை பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com