Monday, November 14, 2011

இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோருக்கு நீரிழிவாம்

இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டளவில், இந்நிலைமை இரண்டு மடங்காக அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் பெரும்பாலானோர், நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சு புதிய விதிகளை வகுத்துள்ளது. நீரிழிவு நோயானது, இந்த நூற்றாண்டின் மிக பயங்கர நோயாக மாறி வருவதே இதற்கு காரணமாகும்.

2050 ஆம் ஆண்டளவில் உலக சனததொகையில் சரி பாதியினர், நீரிழிவு நோயினால் தாக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது உலக சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகில் ஏற்படும் ஒரு சதவீத மரணம், இந்நோய் மூலம் ஏற்படுகிறது.

நாட்டில் நீரிழிவு நோயாளர்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கு, தொற்றா நோய் கொள்கை மூலம் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவு பதார்த்தங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை கட்டுப்படுத்துவதற்காக, புதிய விதிமுறைகளை வகுப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்தார்.

மாப்பொருள் மற்றும் இனிப்பு அடங்கிய உணவு பயன்பாட்டை குறைத்தல், நிறையுணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி செய்தல், உயரத்திற்கு பொருத்தமான பருமனை பேணுதல் போன்றவை, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த முறைகளென அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com