பாக்கிஸ்தானுள் நுழைந்த இந்திய இராணுவ விமானம் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஹெலிகாப்டருடன் காஷ்மீர் பகுதி வான் எல்லைக்குள் வழி தவறி நுழைந்துவிட்ட இந்திய வீரர்கள் 4 பேரை பாகிஸ்தான் கைது செய்துள்ளது. கார்கில் பகுதியில் இருந்து லெக் என்ற இடத்திற்கு இந்திய இராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் காணப்பட்ட மோசமான வானிலை காரணமாக காஷ்மீர் பகுதிக்குள் அந்த ஹெலிகப்டர் வழிதவறி நுழைந்து விட்டதாக இந்திய தரப்பு கூறுகின்றது.
இதனை பார்த்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அந்த ஹெலிகாப்டரை தரை இறக்கி அதில் இருந்த பைலட் மற்றும் உதவி பைலட், 2 வீரர்கள் என 4 பேரையும் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் ஜெனரல் அக்தர் அப்பாஸ், 4 பேரும் பாதுகாப்பாக காவலில் இருப்பதாகவும், இவர்களை விடுவிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்
இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் இது வேண்டும் என்று நடந்த ஊடுருவல் கிடையாது எனக்கூறியுள்ளார்.
இதனிடையே இந்திய வீரர்கள் 4 பேரையும் விடுவிப்பது தொடர்பாக பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர்புகொண்டு பேசி வருவதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேநேரம் காஷ்மீர் பகுதியில் சீனர்கள் அதிக அளவில் குவிந்திருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு கவலை அளிக்கும் விடயமாக உள்ளது என்று இந்திய இராணுவ தளபதி வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் நிலப்பகுதியில் சீனர்களின் ஆக்கிரமிப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
சென்ற வருடம், ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டிய கில்ஜித்-பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவில் 11 ஆயிரம் சீனப் படையினர் முகாமிட்டிருந்தனர். இதுகுறித்து தன் கவலையை சீனாவிடம் இந்தியா தெரிவித்தது.
ஆனால், இதில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று சீனத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 4000 க்கும் அதிகமான சீனர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சீன மக்கள் போர்ப்படையை சேர்ந்த போர்க்குழுவினரும் அடக்கம்.
இது நம் நாட்டின் பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஊடுருவுவதற்கு இது காரணமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment