பான் கீ மூன் - மஹிந்த கடும் வாக்குவதாதம்.
ஐநா வின் 66 வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையே நியூயார்க்கில் நடைபெற்ற சந்திப்பின்போது பரஸ்பரக் குற்றஞ்சாட்டுக்களும், வாக்குவாதமும் இடம்பெற்றதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டபடி, மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமான உள்நாட்டு விசாரணை ஒன்றை மஹிந்த ராஜபக்ச ஏற்படுத்தவில்லை என பான் கீ மூன் தெரிவித்தபோது இலங்கை மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, ஐ.நா. செயலருக்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டது என்று கூறப்பட்டபோதும், அந்த வாக்குறுதி மீறப்பட்டுவிட்டதாக ராஜபக்ச குற்றம் சாட்டி உள்ளார்.
அவசரகாலச்சட்டம் தொடர்பாக பான் கீ மூன் மஹிந்தவிடம் கேட்டபோது பதிலளித்த அவர் அவசரகாலச் சட்டத்தை முற்றாக நீக்கிவிட்டதாகவும், ஆனால் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுப்பதைத் தடுக்க பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாகவும் கூறினார்.
போர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கில் படையினரை அதிகளவில் நிலைநிறுத்தி வைத்திருப்பது தொடர்பாக பேசும்போது 'வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மட்டுமே படையினர் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுவும் அங்கு போதிய சிவில் தொழிலாளர்கள் இல்லாததன் காரணமாகக் கட்டுமானப் பணிகளில் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் காரசாரமான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
வடக்கில் மேற்கொள்ளப்படும் மீள்குடியமர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், தமிழ்க் கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சு ஆகியவை தொடர்பாகவும் பான் கீ மூனிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
இலங்கைக்குத் தெரியாமல் நிபுணர்குழு அறிக்கையை ஜெனீவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது தொடர்பாகவும் மகிந்த ராஜபக்ச, ஐ.நா பொதுச்செயலரிடம் தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியதாகவும், ஐ.நா.வின் வழிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டியதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment