Saturday, September 24, 2011

த.தே.கூ டையே பெருகிவரும் குடும்ப அரசியல் கலாச்சாரம். கல்முனை கீரன்

யாழ்பாணத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வருகைதரும் ஒவ்வொரு தடவையும் தங்களுக்கு உணவு, உறையுள், பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்கும் சந்தர்ப்பவாத வள்ளல்களை தங்கள் கட்சி தூண்களாக கருதுகின்றனர்.

தலைமையை தக்க வைத்துக்கொள்வதற்காக புத்திஜீவிகளை ஒதுக்கி காவாலி கடப்புளிகளை உள்வாங்குகிறது.


ஈழப்போரின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுக்கும் செயற்பாடுகள் அனைத்தும் அதனை மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதாகவே உள்ளன. இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் நேசிக்கக்காரணம் அதன் கொள்கைகளோ அதில் அங்கம் வகிக்கும் தலைவர்களது தகுதிகளோ அல்ல என்பதும், ஏதோ ஒரு சக்தி கடிவாழத்தை கையில் எடுத்து அவர்களை கட்டுப்பாட்டுடன் வாழ வைத்ததே உண்மை என்பதும் புலனாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்குள் ஏற்கனவே புதைந்து கிடந்த எஜமான சிந்தனையும் ஆசாபாசம்களும் அடாவடித்தனங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. கிழக்கில் இது உச்ச நிலையிலுள்ளதென்றால் மிகையாகாது 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தமி;ழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி
பெற்ற மக்கள் பிரதிநிதி கொரவ. பியசேனவின் தெரிவில் தொடங்கி , நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளமை வரை அவர்களது தூரநோக்கற்ற செயற்பாடு தொடர்கிறது.

நூறு வீதம் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற இப்பிரதிநிதி தற்போது இப்பிரதிநிதி தற்போது தமிழ் மக்களின் பக்கம் திரும்பிப் பார்பதேயில்லையாம். ஏனெனில் தமிழ் மக்கள் தன்னை அழைத்து மாலை அணிவித்து கௌரவப்படுத்தியதில்லையாம் அதனால் தன்னை நாடி வந்து தனக்கு கௌரவமளிக்கும் முஸ்லிம் சகோதர இனத்துக்கே உதவப்போவதாக கூறுவதுடன் உதவியும் வருகிறாராம்.

அம்பாரை மாவட்ட தமிழ்பிரதேசங்களின் அபிவிருத்தி நிலை என்ன? இதற்கு ஒரு தீர்க்கமான முடிவுகளை தெரியாத தமிழ்தேசிய கூட்டமைப்பினர், ஒட்டுமொத்தமாக தமிழினத்துக்கு எவ்வாறு தலைமை தாங்க முடியும்? யாழ்பாணத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வருகைதரும் ஒவ்வொரு தடவையும் தங்களுக்கு உணவு, உறையுள், பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்கும் சந்தர்ப்பவாத வள்ளல்களை தங்கள் கட்சி தூண்களாக கருதும் இவர்கள், தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக புத்திஜீவிகள் மட்டத்திலுள்ளோரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்து விடுவதில்லை.

கட்சி கொள்கை பற்றிய சிந்தனை கட்சி தலைமைகளிடமே இல்லாத நிலையில் கல்வியறிவில் இடைநிலையிலுள்ள இத்தரகர்களிடம் இருக்குமென நினைப்பது தவறல்லவா? அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் தமது வியாபாரத்தையோ ஒப்பந்த தரத்தையோ உயர்த்துவதற்காக கட்சியையும் மக்களையும் விற்கலாம்தானே. ஆதலால் கட்சி தலைமைகள் தமது சட்டைப்பைகளையும், அரைகுறை வயிற்றையும் அவ்வப்போது நிரப்பக்கூடியவர்களையும் தங்களது பிழைப்புக்காக அதிகாரிகளின் கால்களைப்பிடித்து குறுக்கு வழியில் உளைப்போரென சமுகத்தால் இனம்காணப்பட்டோரையும் வேட்பாளராக்கி மக்களிடம் ஆணைகேட்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்.

தவறினால் மக்களின் ஆணை மாறாக அமைந்துவிடும் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றவனும் , குறிப்பறிய மாட்டாதவனுமாகிய நன்மரங்கள் மக்கள் சபைக்கு சென்று மக்களுக்காக எதுவும் செய்ய முடியமா? இந்த மரம்கள் பற்றிய அறிவு கட்சித் தலைமைகளுக்கு உண்டோ என்னவோ? ஆனால் மக்களுக்கு நிறையவேஉண்டு. ஏனெனில் இம்மரங்கள் மக்களிடையேதான் போலியாக வாழ்கின்றனர். மக்கள் இப்போது தாராளமாக சிந்திக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகளிடையே குடும்ப அரசியல் கலாசாரமும் பெருகத் தொடங்கிவிட்டது. பாராளுமன்றத்துக்கு தன்பெயரையும், மாகாண சபைக்கு தன் சகோதரன் பெயரையும் உள்ளூராட்சி சபைக்கு மக்களது பெபயரையும் முன்மொழிவதன் மூலம் வாக்களிக்கும் தமிழர்களை இழிச்சவாயர்களென நினைக்கின்றார்கள்.

இன்று புதிய கட்சிகளின் உதயத்துக்கும், சுயேட்சைகளின் தோற்றத்துக்கும் இதுவே காரணம் என்பதை உணரக்கூடிய அறிவு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடம் இல்லாமையால்தான் இந்நிலை தொடர்கிறது. ஆசாபாச போதை அவர்களது அறிவுக்கனிகளை மறைக்கிறது. இந்தப்போதைக்கும் பதிலடி கொடுக்க ஓர் இளந்தலைமுறை உதயமாகியுள்ளமை காலத்தின் தேவையே. ஆனால் அதன் விளைவு நிச்சயம் தமிழ்தேசியத்துக்கு சாவு மணியாகிவிடும் என்பதே கவலை தருவதேயாயுள்ளது.

வேட்பாளர்கள் எவரும் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது அவர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம்களின் மூலம் வெளியாகிறது. தீர்த்தக்கரையில் கடைவைத்திருக்கும் பொம்மை வியாபாரி தன் பொருளை விற்பதற்காக சொல்லும் விளம்பரம் போல், கூட்டமைப்பு வேட்பாளர் ஒவ்வொருவரும் கட்சியின் இயலுமையை கடந்து தனித்தனி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடத் தொடங்கி விட்டனர். மகுடிக்கு மூடும் பாம்பு போல் தம்மை நினைத்து விட்டார்களென மக்கள் நமட்டு சிரிப்புடன் அவற்றை வாசிப்பது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு கட்டியம்
கூறுகிறது.

ஆதலால் புத்திஜீவிகளால் இனம்காணப்பட்ட பின்வரும் விடயங்களில் அவர்கள் தீர்க்கமான முடிவெடுத்து செயற்படவேண்டும்

1. மக்களது உரிமைக்காகவும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய புத்திஜீவிகளை வேட்பாளர்களாக முன்மொழிய வேண்டும்

2. படிப்பு வாசனையற்ற வியாபாரிகளையும் அரைகுறை ஒப்பந்த காரர்களையும், உறவினர்களையும் கட்சியின் நிரந்தர உறுப்பினாராக மாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும்

3. நிறைவேற்ற முடியாத திட்டங்களை தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிடும் வேட்பாளர்களை கண்டித்து மக்கள் மத்தியில் உண்மையின்படி நடக்கக்கூடியவவர்களை முன்நிறுத்த வேண்டும்.

மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிப்பர் எனும் தவறான புரிதல் இன்னும் கூட்டமைப்பு தலைமைகளிடம் இருக்குமாயின் அவர்கள் யதார்த்தத்தை புரியவில்லை என்றே கொள்ளவேண்டும். VIII


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com