கிறீஸ் மனிதன் தொடர்பாக சங்கரியார் மகிந்தருக்கு மடல்
நாட்டில் பீதியை ஏறிபடுத்தியுள்ள கிறீஸ் மனிதன் விவகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டியவை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஜனாதிபதிக்கு மடல் வரைந்துள்ளார். அவ் மடல் கீழே
2011.09.08
மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ,
இலங்கை ஜனாதிபதி,
அலரி மாளிகை,
கொழும்பு.
கிறீஸ் மனிதனின் நடவடிக்கைகள் ஐனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட வேண்டியவையே
கௌரவ ஐனாதிபதி அவர்களே,
வடமாகாணத்தில் விசேடமாக யாழ்குடாநாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயத்தினாலும் பீதியினாலும் பெண்களும் சிறுவர்களும் பெரும் துன்பகரமாக வாழும் நிலை பற்றி மிகுந்த அக்கறையுடன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்;றேன். யாழ்ப்பாண குடாநாட்டில் கிறீஸ் மனிதனின் நடமாட்டமும் செயற்பாடுகளும் ஒரு விசேட நோக்கோடு சில அதிகாரிகளின் ஆசீர்வாதத்தோடு இயங்கும் ஒரு குழுவால் செயற்படுத்தப்படுவதாகவே அபிப்பிராயப்பட வேண்டியுள்ளது. யாழ் குடாநாடு தழுவிய இராணுவம், பொலிஸ் செயற்பாடுகள் இருக்கும்போது ஏறக்குறைய ஒவ்வொரு முச்சந்தியிலும் அவர்களின் சோதனைச்சாவடி இயங்கும் போது இவ்வளவு சுலபமாக யாராலும் இராணுவத்திற்கு டிமிக்கி கொடுத்து இவ்வாறான துர் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.
குற்றவாளியை பொதுமக்கள் துரத்தும் போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அல்லது குற்றவாளியை பிடிக்கும் சந்தர்ப்பத்திலும் இராணுவமோ, அன்றி பொலிசாரோ அல்லது போனால் இருசாராரும் தலையிட்டு சந்தேக நபரை பொறுப்பேற்பதும்; அல்லது மீட்டு விடுவிப்பதும் வழக்கமாக போய்விட்டது. கோபமடைந்த பொதுமக்கள் இச் செயல்களுக்கு எதிர்ப்பு காட்டும் போது மிருகத்தனமாகத் தாக்கி அவர்களில் அனேகமானோருக்கு படுகாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்களைக் கூட தாக்கியும், ஆபாச வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர். ஓர் பொலிஸ் அதிகாரி அவர்கள் அனைவரையும் அடித்துக் கொல்லுங்கள் என்று கர்ச்சித்துள்ளார். இராணுவத்தின் சில அதிகாரிகள் சம்பவங்களுக்கு வகுப்புவாதம் பூச முயற்சிக்கின்றார்.
தகுந்த காரணமின்றி பலாத்காரமாக ஒருவரின் வீட்டுக்குள் இரவில், நேரம் கெட்ட நேரத்தில் உட்பிரவேசிப்பவரை பிடித்தாலோ பலாத்காரத்தை உபயோகித்தாலோ யாரும் குற்றம் சுமத்த முடியாது. ஏனைய நாடுகளைப் போல் எமது நாட்டில் உள்ள சட்ட அமைப்பிலும் குற்றம் செய்து விட்டு தப்பியோட முயற்சிப்பவனை பிடித்து பொலிசாரிடம் கையளிக்க முடியும். அவ்வாறு பிடித்துக்கொடுக்க உதவியவரை தாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் ஏதுமில்லை. இச்சந்தர்ப்பங்களில் இரவு வேளைகளில் அத்துமீறி போதிய காரணமின்றி வீட்டுக்குள் நுளையும் நபரை மன்னிக்கமாட்டார்கள்.
இராணுவத்தினர் இத்தகைய சம்பவங்கள் நடக்கவில்லையென்றும் இவையாவும் பொது மக்களின் கற்பனையென்றும் பிடிவாதமாக கூறுகின்றனர். ஆனால் பொது மக்களோ தமது குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றும் அவை நாளுக்கு நாள் அதிகரிக்கி;ன்றன என்றும் சத்தியம் செய்கின்றனர். மேலும் பொதுமக்கள் இராணுவத்தினரின் மிருகத்தனமான செயற்பாடுகள் எல்லைகடந்துவிட்டன என கூறுகின்றனர்.
அநாகரிகமான முறையில் சில அப்பாவிகள் சித்திரவதை செய்யப்படுகின்றனர். சிலரின் கைகால்கள் முறிக்கப்பட்டுள்ளன. சில பகுதியில் உள்ள மக்கள் இராணுவத்தினருக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. நானும் அதனை ஏற்றுக்கொள்ளுகி;ன்றேன். ஆனால் வேறு சில இடங்களில் இராணுவத்தினர் மத்தியிலுள்ள சில கறுப்பாடுகள் அப்பாவி மக்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு முழு இராணுவத்தினருக்கும் அபகீர்த்தி ஏற்படுத்துகின்றனர். கடவுளுக்கு பயந்த கண்ணியமான, நாகரீகமடைந்த பல இராணுவத்தினரின் செயற்பாடுகள் போற்றப்படவேண்டியவை. தமக்கு கீழ் பணியாற்றும் படை வீரர்களை சில அதிகாரிகள் மிகக் கட்டடுப்பாட்டுடன் செயற்படவைக்கின்றனர். மிக துரதிருஷ்டமான விடயம் என்னவெனில் தொடர்ந்து இத்தகைய செயற்பாடுகளில் இராணுவத்திற்கு தொடர்பில்லையென கூறிக்கொண்டு மக்களுக்கு பெரும் துன்பத்தை தருகின்ற இச்சம்பவங்களை கண்டிக்காது, அந்த குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக்கொண்டு இருப்பது இராணுவத்தலைமையின் பெருங்குறையாகும். அனேகர் தாம் தினமும் அதிகாலை 4.00 மணிவரை தூங்காது விழித்திருப்பதாகவும் இந்நிலை தெடர்வதால் தம் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைப்படுகின்றனர். அத்துடன் பெண்பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுவதோடு பெண்கள் இருள்வதற்கு முன் வீடுகளுக்குள் முடங்கிவிடுகின்றனர்.
ஐனாதிபதி அவர்களே, இந்நாட்டின் ஐனாதிபதி என்ற முறையில் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், அதைச் செய்யத்தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குமான பாரிய தார்மீகக்கடமை தங்களுக்கு உண்டு. நடந்தேறிய பல சம்பவங்களுள் மூன்று சம்பவங்கள் மிகப்பாரதூரமானவை என்றும், காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவற்றின்போது பல குழந்தைகளின் கதறல்களுக்கு மத்தியில் ஆண்களும் பெண்களும் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். நாவாந்துறை, குருநகர், கொக்குவில் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் மிகப்பாரதூரமானவை. ஒரு ஐனாதிபதி ஆணைக்குழு மூலமாக விசாரிக்கப்பட தகுதியுடையவையாகும். இவ்வாறான நடவடிக்கைகளால்தான் இத்தகைய சம்பவங்கள் மீள நடைபெறாது என, பல காலங்களாக சொல்லொணாத்துன்பங்களை அனுபவித்து வந்த மக்களுக்கு அமைதியான வாழ்விற்கு உத்தரவாதம் அளிப்பதுமாகும். உடனடியாக ஒரு ஐனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து விசாரணை மேற்கொண்டால் தான் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமலும், சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்களின் நோக்கத்தையும் இனம் காணுவதற்கும் முடியும்
அன்புடன்
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
0 comments :
Post a Comment