Friday, September 30, 2011

பழிவாங்குவோம்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மிரட்டல்

அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ.,தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹக்கானி குழுவை "வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாதக் குழு' என அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கல் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க, இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்கின்றன சந்திப்புகள்: பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டர், நேற்று மீண்டும் பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீரையும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியையும் சந்தித்தார். அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேசினார். இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக இருவரும் விவாதித்தாக அதிபர் மாளிகை கூறியது. பாக்., மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் மார்க் கிராஸ்மேன், அமெரிக்காவுக்கான பாக்., தூதர் உசேன் ஹக்கானியிடம் தொலைபேசியில் பேசினார்.

மிரட்டல் விடுத்த பாஷா: பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பதட்டத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் மறுபுறம் அரங்கேறி வருகின்றன. இரு தரப்பிலும் மீண்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்பட்டு வருகின்றன. இதன் மையமாக, சமீபத்தில், வாஷிங்டனுக்குச் சென்ற ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, "பாக்.,ன் பழங்குடியினப் பகுதிகளில் இனி ஒரு முறை, அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துமானால், அதற்குப் பழிவாங்கும் சூழலுக்கு பாக்., தள்ளப்படும்' என, சி.ஐ.ஏ., தலைவர் டேவிட் பீட்ரசிடம் நேரில் எச்சரித்துள்ளதாக ஐ.எஸ்.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதிலடிக்குத் தயார்: நேற்று முன்தினம் நடந்த பாக்., பார்லிமென்ட் நிலைக் குழுக் கூட்டத்தில், பாக்., பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியுள்ள ஹக்கானி குழு மீது அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள முடியாது என, எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். அப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கவும் பாக்., தயாராக இருப்பதாக, நிலைக் குழுத் தலைவர் ஜாவேத் அஷ்ரப் காஜி தெரிவித்தார். பெஷாவர் ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாக்., பிரதமர் கிலானி,"ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை மிக்க பாக்., என்ற நோக்கத்தின் கீழ், நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அதன் மூலம் தான் நாடு தற்போதைய சிக்கல்களை சமாளிக்க முடியும்' என்றார்.

"எதிரிக்கு நிதியா?' : பாகிஸ்தான் தனது நிலையில் பிடிவாதத்துடன் இருப்பதைப் போலவே அமெரிக்காவும் தனது நிலையை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லன், ஐ.எஸ்.ஐ., மற்றும் ஹக்கானி குழு இடையிலான தொடர்பு பற்றி குற்றம்சாட்டிய 22ம் தேதி மாலை, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், டெக்சாஸ் மாகாண ஜனநாயகக் கட்சி உறுப்பினர் டெட் போ, பாக்.,னுக்கான அமெரிக்க நிதி முழுவதையும் தடை செய்யும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சபையில் பேசிய டெட் போ,"நாம் வழங்கும் நிதியை பாக்., நமக்கு எதிராக போர் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு அள்ளி விடுகிறது. நாம் தொடர்ந்து நமது எதிரிக்கு நிதி வழங்குகிறோம். நம்மை வெறுக்கவும் நமக்கு குண்டு வைக்கவும் நாம் அந்நாட்டிற்கு நிதி வழங்கி வருகிறோம்' என்று காட்டமாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா உறுதி: "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகைக்குப் பேட்டியளித்த மைக் முல்லன்,"நான் பாகிஸ்தானின் நண்பன். ஆனால், அவர்கள், ஹக்கானி குழுவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதனால் தான் நான் அவர்களின் மீது குற்றம்சாட்ட வேண்டி வந்தது' என்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று அளித்த பேட்டியில்,"அமெரிக்கா தனது பார்வையில் தெளிவாக உள்ளது. காபூல் தாக்குதலுக்கு ஹக்கானி குழுதான் பொறுப்பு. அதனால் அக்குழு மீது பாக்., விரைந்து நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்' என்று கூறினார்.

மூன்றாவது நாடு தலையீடா? : அமெரிக்கா, பாக்., உறவுச் சிக்கலை சமாதானப்படுத்த சவுதி அரேபியா தலையிட்டு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்டு,"இரு நாடுகளும் தெளிவான நேரடித் தொடர்பில் உள்ளன. அதனால் மூன்றாவது நாடு ஒன்றின் தலையீடு அவசியமில்லை' என்றார்.

வெளிப்படையாக குற்றம்சாட்டியது ஏன்? : பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், "ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, ஆளுதவி என அனைத்தையும் வழங்குகிறது. துவக்க காலம் முதல் இன்று வரையிலான அதற்குரிய ஆதாரங்களை ஏற்கனவே பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். ஆனால், காபூல் தாக்குதலால் பாக்., தனது அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. அதனால்தான் வேறு வழியின்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியது' என்றனர்.

நன்றி தினமலர்

1 comments :

Anonymous ,  September 30, 2011 at 3:40 AM  

IAS dont delay gives ur ATOM power to ur groups.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com