பிறேமதாஸவைப் போன்று மகிந்தவையும் அழிக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. சம்பிக்க
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்ததுபோன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பாத்திரத்தை கொலை செய்து அவரை அழிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக மின் வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும் பேசுகையில், புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட 47 முக்கிய தலைவர்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பிச் செல்லவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
'1970 மற்றும் 80களில் காணப்பட்ட சூழ்நிலைகளை வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் ஏற்படுத்தும் முயற்சியாகவே கிறீஸ் பூதத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
அன்று நந்திக்கடல் களப்பில் செயற்பட்ட பிரிவினைவாத கொடூர தீவிரவாத குழுவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பிரபாகரன் தோற்கடிக்க முடியாதவர், பிரபாகரன் ஒருபோதும் அடிபணியாதவர், பிரபாகரனுடைய இராணுவம் உயிர் தியாகம் செய்யும் குழு என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி எம்மை அச்சமூட்ட அடிபணியச் செய்தனர்.
ஆனால் அவர்களுடைய வெட்கமற்ற செயல் இறுதிக் கட்ட யுத்தத்தில் அம்பலமானது.
இறுதிக் கட்ட யுத்தின் போது மேற்குலக நாடுகளின் உதவியுடன் கிழக்கு ஐரோப்பிய இராணுவ முகாம் ஒன்றுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னுடைய 47 தளபதிகளுடனும் குடும்பத்தினருடனும் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். இதுதான் உண்மை.
கிறீஸ் பூதம் தொடர்பில் ஏற்படுத்தியுள்ள பீதியை அன்று பிரபாகரன் தொடர்பிலும் ஏற்படுத்தினர். எனினும் அந்த மாயையை எமது தேசிய அரசியல் செயற்பாடுகளின் மூலம் இராணுவத்தினரும் இரண்டு துண்டாக்கினர்.
அதேபோன்று இந்த வதந்தி பரப்புபவர்கள் அன்று ரணசிங்க பிரேமதாஸவிற்கு செய்தது பேன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் பாத்திரத்தை அல்லது சுபாவத்தை கொலை செய்து அவரை அழிக்கப் பார்க்கின்றனர்.' என்றார் ஜாதிக ஹெல உறுமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க.
0 comments :
Post a Comment