Tuesday, August 30, 2011

எய்தவன் இருக்க அம்பை நோவதா? கருத்துராவின் கண்ணீருக்கு யார் பொறுப்பு? பீமன்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலைவழக்கில் குற்றவாளிகள் என இந்திய நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கான தூக்குத்தண்டனை ஊர்ஜிதம் செய்யப்பட்டதுடன், அதற்கான நேரமும் குறித்தாகி, அவர்கள் நொடிகளை எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில், 8 வாரங்களுக்கான தடை உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்களான நளினி - முருகன் தம்பதியினரின் புதல்வியின் அழு ஓசை, கருணையுள்ளம் கொண்ட அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.

ஜெயிலிலே பிறந்து தாய் தந்தைப் பாசம் கிடையாமல் அங்குமிங்குமாக வளர்ந்த இவ்யுவதியின் இந்த அவலத்திற்கு காரணகர்த்தாக்கள் இந்திய நீதிமன்றும் இந்திய அரசும் என கதை சொல்லப்படுவதை அவதானிக்கின்றபோது, யுவதியும் தன் தாய்போல் கயவர்களின் வலையில் வீழ்ந்துவிட்டாரா அல்லது வீழ்ந்து விடுவாரா என்றதோர் ஏக்கம் ஏற்படுகின்றது.

இந்தியாவிலே புலிகளின் பணத்தைவைத்து நடாத்தப்படுகின்ற பித்தலாட்ட ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள் இவர்களின் உயிரை நிச்சயமாக காப்பாற்றபோவதில்லை. இது புலிகளின் பினாமிகள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும் அனுதாபம் தேடுவதற்கும் மேற்கொள்ளுகின்ற விடயங்களே ஆகும். ஆயிரக்கணக்கான உயிர்கள் இறுதி யுத்தத்தில் மடிந்து கொண்டிருந்தபோதும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இந்நியாவில் மாத்திரமல்ல உலகம்பூராகவும் இடம்பெற்றது. ஆனால ராஜிவ் காந்தியின் படுகொலைக்காக பிரபாகரனின் உயிருக்கு இந்தியா கொடுத்தவிலையே அது காத்த மௌனம். அதற்கும் அப்பால் பிரபாகரனை உயிருடன் பிடிக்கும்வரை அல்லது அவன் உடலை கைப்பற்றும்வரை யுத்தத்தை ஊக்குவித்தது இந்தியா என்பது யாவரும் அறிந்த ரகசியம்.

இந்நிலையில் ராஜிவ் கொலை குற்றவாளிகளான புலிகளுடன் அல்லது புலம்பெயர் பினாமிகளுடன் நளினியின் மகள் இணைந்து கொள்வதானது எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுகின்றவிடயமாகவும் இந்திய அரசை ஆத்திரப்படுத்துகின்ற விடயமாகவும் அமையப்போகின்றது.

இன்றும் இவர்களை பாதுகாக்க இருக்கக்கூடிய ஒரே ஒரு உபாயம் புலிகள் தமது தவறுக்காக ஒட்டுமொத்த இந்தியதேசத்திடமும் மன்னிப்பு கோருவதாகும். மூன்று உயிர்கள் தமது உயிர்களை விடுவதற்கு நொடிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றன. புலிகளின் தலைமை முற்றோடு அழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் தலைமை தாங்களே என உள்ளே அடிபட்டுக்கொண்டு பல குழுக்கள் உள்ளன. இக்குழுக்களால் தலைமை செய்த தவறுக்காக மன்னிப்புக்கோர முடியுமா?

இந்தியதேசம் இதை பல தடவைகளில் எதிர்பார்த்ததுடன் இதற்கான பல சந்தர்ப்பங்களை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்திற்கு வழங்கினர். ஆனால், தெருவால் போன நாய் ஒன்றை தமது உறுப்பினர்கள் தவறாக சுட்டுவிட்டனர் என்ற பாணியில் துன்பியல் சம்பவம் என்று அன்ரன் பாலசிங்கம் விடயத்தை முடித்தார். பிரபாகரனால் இறுதியாக பேசப்பட்ட மாவீரர் உரையில் பிரபாகரன் இந்திய தேசத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரப்போகின்றார் எனவும், நேசக்கரம் நீட்டப்போகின்றார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆம் நேசக்கரம் நீட்டினார். ஆனால் அவரது வரட்டுக்கௌரவம் மன்னிப்புக்கோர இடமளிக்கவில்லை. அவர் மன்னிப்புக்கோராதவரை அவர் கையைப் பற்ற இந்தியா தயாராக இருக்கவுமில்லை, மேலும் ஆத்திரம் அதிகமானது.

எனவே தற்போது புலிகள் எனும் பெயரால் மூலை முடுக்குகளிலிருந்துகொண்டு அறிக்கைப் போர் செய்துகொண்டிருக்கும் காகிதப்புலிகளால் இவ்யுவதியின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களது உயிரைக் காப்பாற்றவும் முயற்சிக்க முடியும்.

தமது தலைமை செய்திருந்த இக்கொலையில் நியாயமிருக்குமாக இருந்தால் அதை நியாயப்படுத்த வேண்டும். அன்றில் தவறுக்காக மன்னிப்பு கோர வேண்டும்.

புலிகளின் பாசையில் இவ்வாறான பலிகொடுப்புக்கு பெயர் தற்கொடை. இவ்வாறுதான் தற்கொலைதாரிகளாக வெடித்து சிதறியவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள். எனவே ராஜிவ் கொலையில் நியாயம் உண்டாயின் புலிகள் தமது தரப்பில் நியாயமிருப்பதாக கூறி தற்போது தூக்குமேடையில் நிற்கின்றவர்களை காப்பாற்ற முன்வரவேண்டும்.

அதாவது மேற்படி குற்றவாளிகள் எந்த குற்றத்தையும் புரியாதவர்கள் எனவும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் தமது தலைமையால் இடப்பட்ட கட்டளையையே அவர்கள் நிறைவேற்றினார்கள் எனவும், அவர்கள் நிரபராதிகள் எனவும், இதற்;கான சகல பொறுப்பையும் நாம் ஏற்கின்றோம் எனவும் இவ்யுவதியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டேனும் புலிகளின் தலைமை என தம்மை கூறிக்கொள்வோர் இந்தியதேசத்திடம் கருணை மனு விடுக்க முடியுமா?

மாறாக யுவதியை தமது சில்லுக்கழன்றுபோயிருக்கும் பிரச்சாரத் தேரிலேற்றி இழுக்க முற்றபடுகின்றனர். வன்னியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற வீடியோக்கள் சிலவற்றை தளத்தினில் தரவேற்றி வீடியோவினை பரிசோதனைசெய்வதற்கான நிபுணர்களுக்கு பணம்வேண்டுமென பிச்சைகேட்கின்ற இணையத்தளமான அதிர்வின் வங்குரோத்தை அறிந்திராத இவ்யுவதி அவ்விணையத்திற்கு பேட்டிவேறு வழங்கியுள்ளார்.

எதுவாக இருந்தாலும் இப்பேட்டியினூடாக புலிகளின் கொடுமையினை சிறுமி வெளிப்படுத்தியுள்ளார். அப்பேட்டியில் இவ்வாறு கூறுகின்றார் "நான் 12 வயதாக இருந்தபோது சிறைக்கு சென்று எனது பெற்றோரை பார்த்தபோது இவர்கள் இவ்வாறான ஒருவிடயத்தை செய்துவிட்டு, என்னை தவிக்கவிட்டுவிட்டு இந்தமாதிரி வந்திருக்கிறார்களே என்ற ஒரு வெறுப்பும் என்னிடம் தோன்றியிருந்தது. என்னுடைய அந்த சிறுவயதிலே அதை வெளிப்படையாக கேட்டுவிட்டேன் அப்போது எனது அப்பா அழுவிட்டார். அத்துடன் என்னுடைய அப்பா கேட்டார், இந்ந குண்டு வெடிப்பு 91 ம் ஆண்டு இடம்பெற்ற நேரத்தில் உன்னுடைய அம்மா ஒருமாத கர்பிணியாக இருந்தார், அப்படி இருக்கிறபோது அந்த குண்டுவெடிப்பினால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சுத்தாக்கங்கள் குழந்தையை பாதிக்கும் என யாவருக்கும் விளங்கும். எனவே எந்த ஒருதாய்க்கும் தனது முதற்குழந்தை மிக முக்கியமானது என்பதுவும் யாவருக்கும் விளங்கும் எனவே அதை அறிந்து கொண்டு உன்தாய் அந்த இடத்திற்கு போயிருப்பாள் என நீ நம்பிறயா, இல்ல உன் அப்பா நான்தான் இதை அறிந்து கொண்டு மனைவியும் குழந்தையும் இறக்கபோகுது என தெரிந்திருந்து கொண்டு அவர்களை அனுப்பிவிட்டு சும்மா வீட்டில் உட்காந்து இருந்திருப்பேன் எனவும் நம்பிறயா எனக் கேட்டார்.'" அந்தவகையில் நான் தெளிவாக கூறுகின்றேன் அவர்கள் இந்த விடயத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை என யுவதி கூறுகின்றார்.

சிறையில் உள்ள தந்தையை பன்னிரண்டு வருடங்களின் பின்பு ஒரு சில மணித்தியாலயங்கள் அல்லது நிமிடங்கள் பேசிய அவ்யுவதிக்கு தந்தையின் வாக்கியங்கள் மந்திங்களாக பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கும் என்பதில் சந்தேகங்கள் இல்லை.

மேலும் முருகன் தெரிவித்திருந்தது உண்மையாக இருந்திருந்தால்

இவ்விடயத்தை தெரிந்து கொண்டு மனைவியையும் குழந்தையையும் அனுப்பிவிட்டு நான் வீட்டில் சும்மா உட்காந்து இருந்திருப்பேனா?

என்கின்ற கேள்வியினூடாக முருகன் நளினியை அவ்விடத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றார் என்பதை ஒத்துக்கொண்டுள்ளார். ஏன் அனுப்பினார் தான் சுயமாக அனுப்பியிராவிட்டால் ஏதோ ஒருசக்கியின் வேண்டுகோளின் அடிப்படையில்தானே அனுப்பியிருக்கின்றார். யார் அந்த சக்தி ஒற்றைக்கண் சிவராஜனாக இருக்கலாம் அல்லது அவனுக்கும் மேலான ஒரு சக்கியாக இருந்திருக்கலாம். ஏதோ மனைவியும் பிள்ளையும் தெய்வாதீனமாக உயிர்தப்பி வந்துள்ளார்கள். முருகன் அவர்களை அனுப்பி வைத்திருக்காவிட்டால் தனது மனைவியையும் பிள்ளையையும் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கசொன்ன அந்த சக்திமீது ஆத்திரப்பட்டாரா? மாறாக அவர்களை இன்றும் காப்பாற்றி வருகின்றார்.

அதாவது முருகன் வன்முறைமீது அதீத பற்றுக்கொண்ட புலி. புலிகள் தமது இலக்குகளை அடைவதற்காக ஒருமாத கர்ப்பிணியை குண்டுவெடிக்கும் இடமொன்றுக்கு பக்கவாத்தியத்திற்காக அனுப்பி வைப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் நிறைமாத கர்ப்பிணியின் உடலில் குண்டினை பொருத்தி தற்கொலைதாரியாக அனுப்பிய கொடியவர்கள். எனவே ஒருமாத கர்ப்பிணியை அவ்விடத்திற்கு அனுப்பியிருப்பேனா என்ற கேள்விக்கெல்லாம் இடமே இல்லை.

இதில் உண்மையில் பாதிக்கப்பட்டது நளினி என்கின்ற அப்பாவிப்பெண். இந்தியாவிலே ராஜிவ் காந்தி கொலைசெய்யப்படும்வரை இலங்கைப்போராளிகள் என்றால் அப்படி ஒரு மதிப்பு இருந்தது. அந்த மக்கள் காட்டுமிராண்டிகளை போராளிகளாகவே பார்த்தார்கள். அவ்வாறுதான் நளினியும் ஏமாந்திருக்கவேண்டும் தனது இலக்கினை அடைவதற்காகவே முருகன் காதலித்திருக்காலம். அதுவும் அவள் இந்த குண்டுவெடிப்பில் குண்டு தாரியுடன் இணைந்து போகும்போது அங்கு உயிரிழக்க நேரிடலாம் என்ற கணிப்பில் நளினியை எமாற்றி கருத்தரிக்ககூட வைத்திருக்கலாம். இவ்வாறு இந்தவிடயம் தொடர்பாக எத்தனையோ கோணங்களில் ஆராயலாம.; ஆனால் அவை நளினிக்கோ கருத்துராவுக்கோ எந்த பயனையும் தரப்போவதில்லை. ஆனால் தந்தையாக இருந்தாலும் முரு கன் தனது தாயை எவ்வாறு அடைந்தான் அவனது நோக்கம் என்னவாக இருந்தது என்பது பற்றியெல்லாம் கருத்துரா நன்கு சிந்திப்பதுடன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புலிகளுடன் இணைவது சிறந்தாக அமையாது.

புலிகளிடம் ஏராளமான பணம் உண்டு, தமது பிரச்சாரத்திற்காக கருத்திராவை பயன்படுத்துவதற்கு அவர்கள் கோடிகளை செலவழிக்கலாம் ஆனால் அது நிரந்தராமானது அல்ல முற்று முழுதாக சுயலாபநோக்கு கொண்டது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.

கருத்துராவிற்கு நல்லதோர் எதிர்காலம் அமையவேண்மென பிரார்த்திக்கும் அதேநேரம் கருத்துரா புலிப்பினாமிகளின் சில்லுடைந்த பிரச்சாரதேர்மீது ஏறி இந்திய அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்குவதை தவிர்த்து உங்களையும் உங்களை தாயையும் இன்று அனாதைகளாக்கிய புலித்தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதே சாலச் சிறந்தாககும்.

உலகிலே இருந்திருக்கக்கூடிய போராட்ட இயக்க தலைமைகள் சகல தவறுகளினதும் பொறுப்புக்களை தாமே சுமந்து தக்க தருணத்தில் அதன் ஆதரவாளர்கள், தொண்டர்கள், போராளிகளை காப்பாற்றி வந்திருக்கின்றது. ஆனால் புலித்தலைமையோ தமது இருப்பை தக்கவைத்து கொள்வதற்காக போராளிகளை காட்டிக்கொடுத்திருக்கின்றது, நடுத்தெருவில் விட்டிருக்கின்றது. அவ்வாறு புலித்லைமையால் காட்டிக்கொடுக்கப்பட்ட நடுத்தெருவில் விடப்பட்டவர்களில் ஒருவரே கருத்துராவின் தந்தையும்.

VIII

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com