Tuesday, August 23, 2011

நம்மை ஆளும் நெருப்பு பிரான் அல்லது நம் காலம் சென்ற தத்துவம். எஸ். நஸீறுதீன்.

நாம் பேசுகிற அல்லது எழுதுகிற வார்த்தைகளை இரு பிரிவிற்குள் அடக்கிவிட முடியும்.

1 . நம் புலனுக்குப் புலப்படுகிற (இதில் கண்ணின் பங்கு மிகப்பெரியது) பொருட்களைச் சுட்டும் சொற்கள் நீளம், குறித்த பொருள் அல்லது ஆள்,ஆக்கக்கூறு , அழிவின் மீதி இப்படியாகப்பட்ட பெயரீடுகளினால் ஆன வார்த்தைகள் அணு துவங்கி அண்டசராசரமனைத்தையும் படம்போட்டுத் தந்ததும் புலன்கள் அதைப் பார்த்து அறிவில் வாங்கிப் பேசுகிறோம். இதில் விஞ்ஞானம் எனும் அசுரனின் பங்கு அனந்தம் அதாவது, நம் புலன்களுக்கு அனைத்தையும் தந்து நம்மை அதன்பால் இழுத்துக் கொண்டு நம்மை ஓட்டிக் கொண்டுருப்பது இதுதான்., சாதாரண மனிதர் அத்தனை பேரிடமும் குடிகொண்டிருக்கிற இரக்கம், கோபம், ஆசை, மகிழ்ச்சி, உறவின், பிரிவின் சந்தர்ப்பங்கள், தன்னைத் தூசியிலும் கேவலமாயுணர்ந்து தலைபணிவது எல்லாவற்றையுமே அது தன்வசங் கொண்டுள்ளது.

இல்லாமலா, காசில்லாதவன் கடவுளானாலும் கதவைச் சாத்தடி என்று நம் பெண்களிடம் காதலைக் காதலிக்க வைக்காமல் பணமெனும் பொருளைக் காதலிக்க இன்னமும் நாம்தூண்டுவோம். நம்மிடம் வீரம் இல்லை: அதேபோல்,யார்மீதும் அன்பு கூட இல்லை.

பணம் பத்தையும் மட்டுமல்ல , கொல்ல ஆயுதமும் செய்வோம் என்கிற பொருளையும் தன பணம்கொண்டே வாங்கியதுமன்றி வாய்ச்சொல்லில் தணிக்கைப் பொருளாகவும்ஆக்கிவிட்டு, கேள்வி கேட்பதுவே,பழைய தன்மை உடைத்தவனாய்ப் பார்க்கப்படாத தன்மையாயமைய வேண்டுமே எனும் நிலைப்பாடு ஏற்பட்டது.

பொருளின் மீதான வணக்கத்தால் வந்துவாய்த்ததுவே தவிரவேறேதனாலுமல்ல.எம் வாய்களுக்கு அப்போதைக்குப போட்ட பூட்டுகளின் ,சாவிகளின் மீதான அச்சத்தில், உணர்வுகளைப் புதைத்து, என் ஏழைச்சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் தாய்மார் தங்களின் இரத்தம் ஊட்டி வளர்த்த பிள்ளைகளை இனத்தின் " வாழ்வு” எனும் பொருளற்ற ஒன்றுக்காக, கையில் பொருள் கொடுத்தனுப்ப ஏகினார்கள்.

ஆம், வாய்ப்பாடும் வைத்திருக்கிறோம். ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் பணம் பண்ணி எனக்கேட்ட தாயென்று.

2 . இந்த வகையை ஒருபோதும் புலனால், குறிப்பாகக் கண்ணினால் அறியக் கூடியதாயிராது மனிதப் புத்தியானது. அவரவர் கண்ட, கேட்ட அல்லது உணர்ந்ததை, அவரவர் பெற்றதைக் கொண்டு வடிவமைக்கிற சொற்களுக்கு எல்லோரும் ஒரேவகை அளவீட்டைக் கொண்டிருப்பர் என்பது சாத்தியமில்லாதது.

இதை அவனவன் சமத்து எனச் சொல்வது தகும். கோபம், சூடு சொரணை, இஸங்கள், ....வாதங்கள், தத்துவங்கள்,......சுருக்கிப் பார்த்தால், மலர் முதலாம் வகைஎனில் அதன் வாசம் இதற்குரியது தீச் சுவாலை பொருளெனில் நாமுணர்ந்த வெம்மை மற்றையது. அத்துடன் முக்கியமாக எண்ணக் கருத்துள்ள, எண்கணிதத்தில் ஒன்று தவிர்ந்த அத்தனையும் இது சார்ந்ததுதான். விளங்கிக் கொள்வதற்காக. பகுத்தறிவு' என்கிற பொருளற்ற நிலையை ஞாபகம் கொள்ளலாம். என் செல்ல நாயைக கூப்பிட்டு 'ஐந்திலே மூன்று போனால் என்னடா?' எனக் கேட்டேன்: அது 'லொள்..லொள்'என்றே கத்துகிறது. காது வைத்துக் கேட்க முடியவில்லை.

முந்தி ஒருகாலத்தில் விஞ்ஞானம், என்பதை தாவர, இரசாயன, உயிரியல் , பௌதிக என்று மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சமூகவியல், தத்துவம், சமய இறையியல் எதுவுமே விஞ்ஞானமில்லை. பின்னர்தான் இந்தப் படித்துப் பட்டம் வாங்கின பிள்ளைகள் அனைத்தும் அணுவின் மயமெனப் பாடம் பண்ணி, அரசியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம், விஞ்ஞான ஒளியில் மதம் எனப் பாடம் படிப்பிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இஸ்லாத்தில், பிஈ, ஜே யும் சாகிர் நாயக்கும் இந்த ரகம்தான்.

அதேமுந்திய காலத்தில், மனிதர்களை மட்டிட, பொருட்களல்ல அவர்தம் உணர்வுகள், பண்புகளே கணக்கிடும் பொருட்களாக இருந்தன. குணத்தைக் கும்பிடும் காலம்போய் இன்றைக்கு, ஒரு வெற்றிபெற்ற மனிதன், சிறந்த மாப்பிள்ளை, எம்.பிக்குரிய அபேட்சகன், திறமையான வைத்தியன், கெட்டிக்கார ஆசிரியன் , நல்ல வக்கீல் இப்படி எல்லாமே பணம் பண்ணும் ஒன்றைவைத்தே அளவீடாகிப் போன,பணம் பந்திக்கு வந்த காலமிது. எனவேதான், நம் ஆட்சிக்குரிய அத்தனை பேரும் உதிர்க்கிற தத்துவங்களிலும், உபதேசங்களிலும் பணத்தின்/ பிணத்தின் வாடையே முதலில் வெளித் தெரிகிறது. அதாவது ஆயுதம் செய்வோம், அதன் வழிபேசுவோம் என்பதையே அமெரிக்க ஜனநாயகம் பேசுகிற நாடுதுவங்கி இயக்கங்களிலும் நாம் காண்கிறோம்.

நாம் காண்கிற அத்தனை அரசுகளும், தத்தமது ஆட்சி முறைக்கு ஜனநாயகம், முதலாளித்துவம், கம்யுனிசம், கலப்பு, சர்வாதிகாரம், மதம், அல்லது இது அத்தனையும் சாம பேதம், தானம், தண்டம் ஆகியவழி கொண்டு எதிர்ப்பரசியலாகக் காலம் தள்ளுவது..... எல்லாமே நமக்குப் பொருளாக, அல்லது காணும்படியாக இன்னும் காட்டப்படவில்லை..

ஆனால்,நம் அனைவரிடமும் இவர்கள் பேசுகிற தத்துவார்த்தங்கள் பற்றி ஒரு கருத்து ரீதியான மதிப்பீடு இல்லாமலில்லை. ஆனால்,இவற்றைப் பேசுகிற அத்தனை பேருமே ஒருவிசயத்தில் மட்டும் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். இந்த உலகத்தில் அவர் சார்ந்த மக்களை சுதந்திரமாக, சந்தோசமாக அது/அவை வாழ வைக்கும் என்றே சொல்கிறார்கள்.

மதவாதிகளும்கூட, இந்த உலகிலும், மறு உலகிலும் சந்தோசமான, கவலையற்ற வாழ்வை பரிசளிப்பதாகவே வாக்குத் தந்துகொண்டிருக்கிறார்கள். எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து, நாம் உணர்வு ரீதியில் அடைகிற உணர்வுகளுக்கு ( அச்சம், கவலை, கோபம், கழிவிரக்கம், வன்மம், இச்சை அல்லது இவைஅத்தனைக்கும் எதிருணர்வுகள் மட்டுமே கிடைக்கும்படியாக (பேராசை) )வழிகாட்டுவதாகச் சொல்கிறவர்களே நம்மை ஆண்டுகொண்டிருக்கிறார்கள். எல்லா ஒலி,ஒளி பரப்புகளிலும் வார்த்தைகளாக, படங்களாக மக்கள் நம்பும்வரை, இடைவெளி யின்றி தந்துகொண்டே இருக்கிறார்கள்.

அதாவது புலனுக்குத் தெரிகிற பொருட்களைவிட்டு, நாம் அகத்தே வேண்டிநிற்கிற யாசிக்கிற உரிமை, சுதந்திரம் இனவாழ்வு, மன நிறைவு........ கடைசியாகப் பார்த்தால் சுவர்க்கத்தில் வாழவைப்பதாக சொல்லிசசொல்லியே ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால்,இன்றைய உலகின் ராஜாங்கங்களுக்கும், பெரிய மதங்களைத் தந்தவர்களுக்கும்இடையே, இந்த இரு வார்த்தைக் கோலங்களிலும் மிகப்பெரிய தலைகீழ மாறுபாட்டை நாம்காணலாம்.

இன்றைய அரசுகளும், ராஜாக்களும், மானிடர் ஏங்கும் அத்தனைவசதி, வாய்ப்புக்களையும் கொண்டிருப்பதுடன், பெரும்பகுதி மக்கள் கனவுகாணும் வாழ்க்கை முறையையும் ‘வாழ்வுஎன்றால் இதுதான்’ எனும் முன்மாதிரிக் கதாநாயகர்களாகவும் எந்தவித எதிர்ப்பும் அற்ற படை படைபட்டாளங்கள் பாதுகாப்பை எப்போதும் தருகிற திமிரான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்க- மதத்தைத் தந்த அத்தனைபேரும், தாங்கள் சுவர்க்கத்திலிருப்பதாகக் கூறிக்கொண்டு, பக்கிரிக் கோலத்தில் நாளைக்கென்று எதுவும் வைத்திராதவர்களாகவே வாழ்ந்த வாழ்வைக் காண்கிறோம்.

இன்றைக்கு புலிக்கோ, அல்லது அரச ராணுவத்துக்கோ பயந்து மேல் நாட்டுக்கு வந்திருக்கிற அத்தனைபேரைக் கேட்டாலும், அமெரிக்க ஐரோப்பிய மக்கள்தான் உலகிலேயே ஓரளவு சுதந்திர, வசதியான வாழ்க்கை வாழ்வதாகக் கூறிக் கொண்ருக்கிறார்கள். எதையும் பேச. எழுத, இஸ்டப்படி வாழ்ந்து பார்க்கக் கிடைத்திருப்பதாகக் கிலாகிக்கிறார்கள்.

இலங்கைக் காகங்கள், தம் காலில் நடந்து நாட்டை சுவர்க்கபுரி ஆக்கினாலும், அன்ன நடை பழகப்போன இந்தப்பழைய காகங்களின் வித்தியாசப்பட்ட நடையழகை வைத்துப் பார்த்தால், புலனும், புலமும் இழந்தஅவர்கள், சுதந்திர வாழ்வெனும் பெயரில் தானும் கெட்டதுமன்றி, இங்குள்ள மக்களையும் தொடர்ந்து சூடு பண்ணியே வைத்திருக்கப் பார்க்கின்றனர். பகுத்தறிவு, அல்லது உணர்வு ரீதியாக நம்மில் பொருளின்றி கருக்கொண்ட ஒன்றுக்காக, அதன் நிறைவுக்காகப் பொருளை உபயோகிக்கிற,நமது புத்தியின் அடிப்படையில் வந்ததுதான் இந்தப் பணமும், ஆயுதமும் என்று கொள்ளலாம்.

அமெரிக்கா, ஐரோப்பா என்பவை உலகின் அதிகாரமிக்க, மற்றைய நாடுகளிலும் ஜனநாயகம் வளர்வதற்காக ஆட்சி மாற்றங்களை(ரெஜிம் சேன்ஞ்) ஏற்படுத்தும் உதாரணமிக்க ஜனநாயக நாடுகள் என்பது சுத்தப் பொய்யானது அது சாத்தியமானது போன்ற மயக்க நிலை தெரியக்காரணம், மனிதனிடம் குடிகொண்டிருக்கிற ஆசை, அச்ச உணர்வுகளினாலும், அவர்களிடம் உள்ள நவீன விஞ்ஞான உபகரணக் கொல்லும் ஆயுதங்களாலும், வார்த்தைகளால் விளையாடுகிற மீடியாக்களினாலுமேயாகும். தமது உள்ளத்தின் மன நிறைவு, கண்ணால் பார்க்கிற பொருளினால் வந்துவிடுமென்று நம்பவைத்து, மக்களைப் பொருட்களின் பின்னே ஓட்டம் காட்டவைத்து, அதன்மூலமே (ஆயுதம்), உள்ளத்தேடுதலை இல்லாமலாக்கி படம் பார்க்கும் நிலைக்கு மக்களை ஆக்கி விட்டுள்ளார்கள்.

அரபியில், மனிதனைக் குறிக்க 'இன்சான்'என்று சொல்வர். இதற்கு 'கண் பிள்ளை' என்றொரு அர்த்தமுமுண்டு. கண்ணைப் பிறப்பிலேயே இழந்த ஒருத்தனின் இந்த உலகு பற்றிய புரிதல் எப்படி இருக்கும் என்பதை நாம் யோசிக்கிறபோதுதான், நாம் கட்டமைத்து வழிபடுகிற உலகமே கண்மயமானது என்பதைக் கண்டடைய முடியும். கண் இருப்பதால் மட்டும் இந்தக் கண்பிள்ளை எல்லாவற்றையும் பார்க்க முடியும் என்று ஆகாது. இருட்டுக்குக் கருப்பு நிறத்தைக் காட்டுவார்கள். ஒளி இல்லாததால் பார்க்கமுடியவில்லை. எனவே ஒளியும், பார்க்கிற பொருளும் இருந்தால்தான் பார்த்தல் நிகழ்ந்து போகிறது. இதை இன்னும் பார்த்தால், பொருளுக்கு நிறம் என்று ஒன்றே இல்லை, சூரிய ஒளியின் குறித்த நிறப்பொருளை உறுஞ்சுவதால், அந்த நிறம் கொள்கிறது என்போம். இன்னமும் யாரடாஅது, இலையின் நிறம் பச்சை என்பது? ஆயினும் மனிதனுக்குப் பொருட்களின் பட்டம், பதவி, பணம், நாலுபேர் கும்பிடுபோடும் அதிகாரம்,,,,,)மீதான ஆர்வம் தொடர்ந்தும் கூடிக் கொண்டே வந்திருப்பதை நாம் கண்கொண்டு பார்த்து , வாசித்தறிந்தே காலம் கடத்தி வந்திருக்கிறோம்.

புறத்தேயுள்ள பொருட்களினூடே நம் அனைத்து சாந்திகளையும், மரியாதைகளையும், தகுதிகளையும் அடைந்துவிட முடியும் என்று நம்புகிறோம்: இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதுதான் மேற்கின் பலம். மனித கண்ணின் மூலம் பிறப்பெடுக்கிற ஆசையை மூலதனமாக்கி ' நீ உன்னையோ, நீ தங்கும் தலத்தினைப் பற்றியோ எந்த வகையிலும் தனியாக யோசியாமல் நாளைய சுகவாழ்வுக்கென்று நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பது. கூட்டத்தோட கோவிந்தா.

நம்மை ஆண்டு கொண்டிருக்கிற தத்துவங்களும், மதங்களும்தான், மக்களுக்கு சுதந்திர, அச்சமற்ற, சந்தோசகரமான வாழ்வை, சுருக்கமாக சுவர்க்கத்தைத் தருமென்றால், அந்த சுவர்க்கம் எனக்குப் பொருட்களால் மன நிறைவாய்ப் பெறுவதா, அல்லது மனம் நிறைவதற்கு இதன்(பொருளின்) பங்கு மிகக் குறைவு என்றறிவதா என்பதை நாம், தனித்தனியாக முடிவு செய்ய வேண்டும். இதற்குக் கூட்டம் சரிவராது. மன நிறைவு என்பது உள்ளத்தின் உணர்வுகளுக்கு வடிகால் தருவதாயின், நல்லவனாயிருப்பவனும், கெட்டவனாயிருப்பவனும் உள்ளத்தின், தனது எண்ணத்தின்படி வாழ்வதால், அதுவே செயலாக வந்ததென்று நம்பி, இயல்புக்குத் தக்கதாய் ' குணக்குன்று' அல்லது 'கெட்டது கிட்டே நெருங்காதே' என்கிறோம்.

இன்றைய காலத்தில், நிகழ்ந்துகொண்டிருக்கிற சோமாலிய பட்டினி அழிவு, ஈராக், பாலஸ்தீன், ஆப்கான், பாகிஸ்தான், ஏன் நேற்றைய இலங்கையின் அழிவும் கூட மனித ஆசைகளினால் உருவாகிய பந்தங்களின் நெருப்புகளேயாகும். இந்த ஆசை உள்ளத்தை மட்டுமல்ல, அவனைத் தீ மூட்டி அழிப்பது மட்டுமன்றி அருகில் உள்ளோரையும் பரவி அழிக்க வல்லது. இதன் சுவாலை மேற்கின் புறமிருந்து வருகிற காற்றால் தூண்டப்படுவது. ஏனெனில் அங்கு உள்ளம் பார்க்கப்படுவதில்லை. செயலின் இயக்கமே அதன் மூலம். காமமானாலும், கொலையானாலும் வண்ணமிட்டு சப்த ஒளியில் வாழ்வது. அது விழி துருத்திய பச்சைப் பாலகன் பசியின் அகோரத்தில் எலும்புகள் வெளித்துருத்திய அட்டைப்படப் புத்தகத்தை கமுக்கட்டிலே வைத்துக் கொண்டு, தன் செல்ல நாய்க்குட்டிக்கு சுப்பர் மார்க்கெற்றில் தேடி உணவு வாங்கும் நவீன நியண்டதால் மனிதனை அதன் பொருட்களே ஆக்கி விட்டுள்ளது.

அதே நேரம் கிழக்கின் தத்துவங்கள 'உள்ளத்தைப் பார், அதை வெற்றி கொள்ளப்பார்' என்றே மானிடரைக் கெஞ்சின. அதை வெல்ல 'அன்பு தவிர வேறேதும் வேண்டாம்' என்று வேதம் தந்தன. ஆம், புத்தன் , ஆசையே எல்லாத் துன்பங்களுக்கும் மூலம் எனச்சொல்லிவிட்டு, 99 கொலை செய்தவனையே மன்னித்து விடுகிறார். அம்பின் கீழ் துடித்த தவளைகண்டு துடித்த ராமன், தாய்ப்பாலுக்காகத் துடித்த மான்குட்டிக்குப் பிணை நின்ற நபிகள் நாயகம் எல்லோரும் மனத்தை வென்றோராயின், வழிதவறிய, விழியில் நம்பிக்கை கொண்டு முயன்று தவறிய நம் மானிடம், மீளவும், வாழ்வு காண, பரணில் போட்டுவைத்த தத்துவங்களைக் கண்டடைவதில்தவறில்லை.

இதையும், நமக்கு வாழ்பவர்கள் எனப் பீலா காட்டிக்கொண்டிருக்கிற மேற்கினர்தான் எப்போதும் போல பிரேரித்துச் சொன்னபின்னர் வழிமொழியக் காத்திருக்கிறோமென்றால்,, நமக்கு இப்போதும் கண் திறக்கவில்லை, பிறகும் கண்திறக்கப் போவதில்லை என்றே அர்த்தம்.

இறைவன் அருளிய இத்தனை வளமும், அழகும் பொருந்திய இந்த உலகைக் காணவிடாதபடி, நம் கண் எங்கிலும், காதுகள் பூராகவும் மானிடர் அழிவுகளே நாளாந்தச் செய்தியானமைக்கு, மேற்கின் கண்வழியே வந்த மானிட அவா தவிர வேறேதும் காரணமல்ல வெளியே நெருப்பிட்டு அதன் வெம்மையில் குளிர் காய்ந்தே இதுவரை வாழ்ந்து வந்தது.

இப்போது போராட்டம் எனும் பெயரில் அதுவாகவே தீயில் எரிய ஆரம்பித்திருக்கிறது. அழிந்தது போதுமானால், அதற்கு நம் பணமும் காரணமானது உண்மையானால், அழிக்கப்பட்டவர்களின் உள்ளம் சாந்திபெற ஒருமுறை நம் இந்தப் பொருட்கள் மீண்டெழ துணை போவதே ஓரளவு பாவம் தீர வழி தர வழி செய்ய வல்லது. எழுந்த நெருப்பை அணைக்க இட்ட நீரும் உள்ளத்திலிருந்து வருவதே.

மலையயிருந்தாலும், கண்ணாயிருந்தாலும் நீர் தராதவரை அதற்குச் சிறப்பில்லை.

1 comments :

Anonymous ,  August 23, 2011 at 4:00 PM  

Thank you Mr.Nazurudeen.Your article is really a great philosophy.The study of nature and meaning of the universe and of human life.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com