பாதாம்பருப்புக்காக சிறுவனைச் சுட்டுக்கொன்ற இராணுவஅதிகாரி. இராணுவம்-பொலிஸ் முறுகல்.
அகிம்சைக்கு பெயர்போன பாரத நாட்டில், பாதாம்பருப்பிற்காக சிறுவன் ஒருவனை அந்நாட்டின் இராணுவ அதிகாரியொருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம்தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியொன்று இவ்வாறு தெரிவிக்கின்றது.
சிறுவன் தில்சனை துப்பாக்கியால் சுட்டது லெப்டினன்ட் கர்னல் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை தீவுத்திடல் எதிரே உள்ள ராணுவ குடியிருப்பு வளாகத்துக்குள் பாதாம் கொட்டை பறிக்கச் சென்ற சிறுவன் தில்சன் நேற்று முன்தினம் மர்மமான முறையில் குண்டு பாய்ந்து இறந்தான். இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லெப்டினன்ட் கர்னல் ஒருவர், ராணுவ குடியிருப்புக்கு நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணிக்கு காரில் வந்துள்ளார். தில்சன் பாதாம் கொட்டை பறிப்பதை பார்த்தவர், துப்பாக்கியால் அவனை சுட்டுள்ளார். பின் அங்கிருந்து காரில் தப்பி விட்டார். சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கர்னலிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். ஆனால், அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மற்ற ராணுவ அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீசார் விசாரணை நடத்துவதில் முட்டுக்கட்டை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கர்னல் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக அவர் சென்னையில் இல்லை என்றும் ராணுவ அதிகாரிகள் போலீசாரிடம் கூறியுள்ளனர். ஆனால், லெப்டினன்ட் கர்னலின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தபோது, அவர் ஸ்ரீபெரும்புதூர் செல்லவில்லை என்பதும், ராணுவ குடியிருப்பு உள்ள தீவுத்திடல் பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணி வரை அவர் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவரை காப்பாற்ற ராணுவ அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனால் லெப்டினன்ட் கர்னலை விசாரிப்பது தொடர்பாக டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
அதேநேரம், சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை தீவுத்திடல் அருகே ராணுவக் கட்டுப்பாட்டு பகுதியையொட்டி அமைந்துள்ள குடியிருப்பைச் சேர்ந்த தில்ஷான் என்கிற 12 வயது சிறுவனை ராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். ராணுவத்தினரின் இந்த கொடூரச் செயலை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது
பல்லாவரம் பகுதியிலும் அவ்வாறே ராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் நடமாடும் பொதுமக்களை அச்சுறுத்துவதோடு விறகு பொறுக்கச் செல்லும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் கொடுமைகளும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
ராணுவத்தினரின் இத்தகைய அத்துமீறிய செயல்கள் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் காவல் துறையினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இத்தகைய புகார்களை பதிவு செய்யவோ, விசாரிக்கவோ காவல் துறை முனைப்புக் காட்டுவதில்லை.
தற்போது தீவுத் திடல் அருகே நிகழ்ந்துள்ள இந்த பயங்கர வன்முறைக்கும் ராணுவத்தினருக்கும் தொடர்பில்லை என்று ராணுவ தரப்பில் கூறுவதாக தெரிகிறது. இக்கொடூரச் செயலில் ராணுவத்தினர் ஈடுபடவில்லையென்றால் அச்சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது யார் என்னும் கேள்வி எழுகின்றது.
எனவே அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் அதே வேளையில் அதன் பின்னணியில் உள்ள சதியினையும் குற்றவாளிகளையும் அடையாளம் காண்பதற்கு இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.
இவ்வாறு நிலைமைகள் இருக்கும்போது சிறுவன் கம்பி வேலியில் வீழ்ந்த தலையில் துவாரம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இது துப்பாக்கிச்சூட்டுக்காயம் அல்லவெனனும் இந்திய இராணுவத்தின் பிரிகேடியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 comments :
indian army must get out from our THAMIZH NADU.
Post a Comment