Friday, July 8, 2011

உலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி.. வி. ரி. இளங்கோவன்.

உலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவுச் செய்தி, தமிழியல் ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், கலை இலக்கியவாதிகள் அனைவர்க்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துவிட்டது.

கடந்த நூற்றாண்டின் தமிழ்த்திறனாய்வு உலகில் இலங்கையின் இரட்டையர்கள் எனப்பெயர்பெற்ற கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரையும் தமிழக ஆய்வாளர்கள்,கலை இலக்கியவாதிகள் நிமிர்ந்து பார்க்கவேண்டிய நிலைவந்தது. மார்க்ஸிச நெறிவழி இவர்களது திறனாய்வுப் போக்குகள், உருவமா? உள்ளடக்கமா? - வாதப்பிரதிவாதங்கள், தேசிய இலக்கியம், இழிசனர் இலக்கியம், முற்போக்குவாதம் முதலியன குறித்த வாதப்பிரதிவாதங்கள் போன்றவற்றில் இருவரும் தீவிர பங்குகொண்டு இலக்கிய உலகினை வியப்புடன் பார்க்கவைத்தனர். பண்டித மரபுவாதிகளின் கடுந்தாக்குதல்களை எதிர்கொண்டனர். இவர்கள் காட்டிய புதியபாதை வரலாறாகித் தொடர்கிறது.

பேராசான் கைலாசபதியோடு உறுதுணையாக நின்று, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினை வழிநடத்திச்சென்றார் பேராசிரியர் சிவத்தம்பி.

தமிழ் அவைகளில், எந்த ஆய்வாளருக்கும், புலமையாளருக்கும் பதில் சொல்லும் ஆற்றல்,
ஆளுமையுள்ளவராக, நிகரற்ற பெருமனிதனாக அவர் விளங்கினார்.

அவரது அறிவுத்திறன், ஆற்றல், ஆளுமையை, 1981-ம் ஆண்டு தை மாதம் சென்னையில் 'சி.எல். எஸ்' நடத்திய இலக்கிய மாநாட்டின்போது என்னால் உணரமுடிந்தது. தமிழக முன்னணி எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் நிறைந்திருந்த அவையிலே, அவர் தலைமைதாங்கி நடாத்திய கருத்தரங்கில், மக்கள் எழுத்தாளர் கே. டானியலுடன் மேடையிலிருந்து கவனித்தது இன்றும் எனக்கு ஞாபகம்.

தோழமையைப் பெரிதாக மதித்த பெருமகன் அவர்..

கே. டானியல் காலமாகியபோது, 'வரலாற்றைப் படைத்த நீ வரலாறாகிவிட்டாய். உன் மறைவால் நாங்கள் படும்வேதனை உனக்குத் தெரியும். தோழமையுணர்ந்த உனக்கு எங்கள் உணர்ச்சி புரியாதுவிடாது' என்றவாறு கண்ணீர் சிந்த எழுதியிருந்தார்.

அந்த உணர்வுதான், இன்று அவரை இழந்துள்ள கலை இலக்கியத் தோழர்கள் அனைவர்க்கும் உள்ளது.

தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் அவர் சிறப்புப் பேராசிரியராகக் கடமையாற்றினார். அக்காலத்தில் தஞ்சையில் வாழ்ந்த பேராசிரியர் அ. மார்க்ஸ், பேராசிரியர் இராமசுந்தரம் போன்ற பலருடன் அவர் நெருங்கிப் பழகியமையை அறியமுடிந்தது.

இன்று புகழ்பெற்ற ஆய்வாளராகவும், சிறந்த விமர்சகராகவும் பேராசிரியர் அ.மார்க்ஸ் விளங்குவதற்குப் பேரறிஞர் சிவத்தம்பியின் வழிகாட்டுதல்களும் உதவியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலும் இன்று புகழ்பெற்று விளங்கும் ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் பலரும் அவரினதும், பேராசான் கைலாசபதி அவர்களினதும் வழிகாட்டுதல்கள் வழிவந்தவர்களாவர்.

அறுபதுகளின் நடுப்பகுதியில் அரசியல் கோட்பாட்டுவழி கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தது. பின்னர் அதன் தாக்கத்தால் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் பிளவுற்றது. அரசியல்வழி பேராசிரியர் கைலாசபதி சீனச் சார்பினரானார். பேராசிரியர் சிவத்தம்பி ரஸ்ய சார்பினராகவே விளங்கினார். கே. டானியல், சில்லையூர் செல்வராசன், என். கே. ரகுநாதன் உட்படப் பலர் சீனச் சார்பினராக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் வெளியேறினர். பேராசிரியர் சிவத்தம்பி தொடர்ந்தும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு உறுதுணையாக விளங்கினார். இறுதிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுக்கு வலுச்சேர்ப்பவராக எழுதியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.

ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு சார்ந்து பேராசிரியர் சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை.

இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி.

கடந்த தை மாதம் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சிறப்புரையாற்றியபோது அவரை இறுதியாகக் காணமுடிந்தது.

அவரது இழப்பு தமிழ் ஆய்வுத்துறைக்கும், கலை இலக்கியத்துறைக்கும் பேரிழப்பாகி எல்லோரையும் கலங்கவைத்துவிட்டது.

பேரறிஞர் சிவத்தம்பி அவர்கட்கு எமது அஞ்சலிகள்... ...!



பேராசிரியர் சிவத்தம்பியின் நூல்கள் சில.... ...

1. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்.

2. இலக்கியமும் கருத்துநிலையும்.

3. பண்டைத் தமிழ்ச் சமூகம்... .. வரலாற்றுப் புரிதலை நோக்கி... ..

4. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி..

5. யாழ்ப்பாணம் : சமூகம் பண்பாடு கருத்துநிலை...

6. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்

7. ஈழத்தில் தமிழ் இலக்கியம்

8. அரங்கு ஓர் அறிமுகம்

9. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா

10. தமிழ்ச் சமூகமும் பண்பாட்டில் மீள் கண்டுபிடிப்பும்.

11. இலக்கியமும் வாழ்க்கையும்

12. இலக்கணமும் சமூக உறவுகளும்

13. நாவலும் வாழ்க்கையும்

14. தமிழில் இலக்கிய வரலாறு.

15. கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்...



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com