Wednesday, July 6, 2011

இன்னும் மரணிக்காத மிருகச்சிந்தனைகள். அஹமட்ஷா.

அண்மையில் கோழிச்சண்டையை முதன்மைப்படுத்தி இலங்கையின் முன்னிலைக் கவிஞராகப்பேசப்படுகிற ஜெயபாலனும் நடித்த படமான ஆடுகளம் பார்த்திருப்பீர்கள். நம்மவர் கமலுக்கு விருமாண்டியினூடு மாட்டுச்சண்டை. எங்களது பாரம்பரியக்கலை, தொன்மையைப் பேணுதல் வரலாறு அழிந்துபோய்விடாது பாதுகாக்கும் கைங்கரியம் இயற்கையுடன் மனிதன் எப்படி ஒன்றித்துப் போய் வாழ்ந்தான் தெரியுமா? என்பதைச் சொல்லப்போறோம்......

இப்படி ஏகப்பட்ட உதாரணங்களுடன், விளம்பரங்களுடன் வெளிவர வெள்ளித்திரையில் நாமும் கண்டுமகிழ்கிறோம். மனிதனை மனிதன் தலையில் கொத்து வாங்கிச் சரிப்பதை விட, தன்னை முழுக்கவாய் ஒரு மிருகத்தில் பிரதிமைபண்ணி, எதிராளியாய் உருவேறி நிற்கிற இன்னொரு மிருகத்தினூடு தன் ஆண்மையைக் காட்ட வெளிக்கிடுவது ஒருவகையில் நல்லதுதான். ஆயினும் இந்தநிகழ்வின்; ஆரம்பம் எதுவாயிருக்கும் எனும் கேள்வி எப்போதும் இருந்து கொண்டே இருந்தது.

மனிதன் முதலில் காடுகளில் கூட்டம் கூட்டமாக அலைந்து திரிந்தான். இருட்டுக்குப் பயந்து திரிந்தான். காலையில் சூரியன் புறப்பட இருள் அகல சூரியனை வணங்கத்துவங்கினான். அப்புறம் மிருகங்களிடமிருந்து பாதுகாப்புக்கு நாய் சிங்கம் புலி யானைகளைப் பழக்கிக்கூடவே கொண்டுசெல்லத் துவங்கினான். அப்புறம் வேதங்களைப்பார்த்தோமானால் பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்குக் காணிக்கையாக தான் பலியிடப்படுவதிலிருந்து பிரதியுபகாரமாக மிருகங்களைப் பலியிடுவதையும் அறிந்துவந்துள்ளோம். ஆக மனித இரத்தம் சிந்தப்படுவதிலிருந்து மிருகங்கள் தம்குருதியை உயிரைத்தந்து மானிடரைக் காத்த வரலாறு தான் பழைய வரலாறு.

அதாவது போட்டி துவங்க முன்னரே' என்ர கோழி தோத்துச்சா, நீ கேட்ட அத்தனையும் உனக்குச் சமர்ப்பணம்' எனும் ஒப்பந்தத்தில் இந்தக் கபடியாட்டம். இதன் பின்னர் உருக்குப்போன்ற திடமுடைய யானையை வசப்படுத்திய போதுதான் மனுவுக்குப் புதுப்பிரச்சினை தோன்றியது. அது தனியனாகத் திரிவது குறைவு. அப்படித் தனியனாகினால் அது விளைவிக்கும் சேதம் அனந்தம்.

மொத்தக் கிழக்குமாகாணமே புலிவாலைப் பிடித்துத் தொங்க, மட்டக்களப்பு இராஜதுரை யு.என்.பி யில்-யானையில் தேர்தலுக்கு வருவது போல அது: முதலுக்கே மோசமாகத்தானிருக்கும். அல்லது யானை தப்பித்துக் கொண்டு ஓடும்போது விளைவித்த சேதங்கள், புலியும் யானையும் சேர்ந்து, அனேகம் பேரைத் தின்று துப்பிய பின்னரும் இன்னும் எஞ்சிநிற்கிற இறந்து போனவர்களின்; கேள்விகள் போல முகத்திலறைந்து கொண்டே இருக்கும்.

கோழி, மாடு, புலி, சிங்கம் இப்படி எல்லாவற்றையும அடக்கிச் சண்டைக்கென்றே வளர்த்த மனிதனுக்கு மனைவியையே பந்தயம் வைக்கிற மென்ராலிடிட்டி எப்படிவந்திச்சி? மன்னனாயிருந்தால் நாட்டையே அடகுவைக்கலாம்: மிருகத்துக்குப் பதிலாக மனைவியையே வைத்து ஆடலாம்.

இது எல்லாத்தையும் அடக்கினாலும் இவள அடக்கி ஆள்றதுதான் பெரிய ஆண்பிள்ளைத்தனம் (நவீனத்துவவாதிகாள் அதுஎன்ன, ஆண்குறித் தியறியா?) எனும் நினைப்பா? அல்லது கொஞ்ச காலம் எதிரியும் நம்மளப் போல, நாம பட்ட கஸ்டத்த அனுபவிக்கட்டுமே எனும் குருர சந்தோசமா?

மிருகத்திடமிருந்து தப்புகிறபோதே மனிதன் மிருகங்களின் வேறுபட்ட தாக்கும் இயல்புகளையும் அவற்றிடமிருந்து கற்றுக்கொண்டே வந்திருக்க்கிறான். அன்றைய திப்புசுல்தான் தேளின் தாக்கும் முறையைக் கண்டே, எதிரியைச் சூழவர நாற்புறமாகச் சூழ்ந்துதாக்கியதாகப் படித்த ஞாபகமுண்டு. கடலில்கூட பருமனில் சிறிய மீன்கள் படையணியாகப் புறப்பட்டு மிகப்பெரும் மீனைத்தாக்குவதை நாம் கண்டுள்ளோம்.

சிங்கம் புலி யானை தவிரபருந்து மீன் என்பனவும் மனிதன் அஞ்சத் தக்கதாக இருந்தன. அதை வெற்றிகொள்ள மிருகங்களுக்குக் கொடுத்த ஐம்புலன் களுக்கும் மேலாக இறைவன் மனிதனுக்குக் கொடுத்த சிந்திக்கும் ஆற்றல், அதனூடான வல்லமை உதவிசெய்தே வந்துள்ளது. ஆயினும் மனிதன் தன் உயிரிலும் மேலாக நேசிக்க தாய் நாட்டுக்கு அதன்தேசியக் கொடிக்கு அவன் உருவாக்குகிற அமைப்புகளுக்கு (உளவு) இன்னும் மிருகங்களையே சின்னங்களாக்கிக் கொண்டிருக்கிறான் என்பது அவைகளுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை: தெரிந்தால் சந்தோசப்படக் கூடும்.

இந்தச்சர்வலோகங்களையும் படைத்து அதைவசியப்படுத்தவும் ஆற்றல் வழங்கி தனது பிரதிநிதியாக இறைவன் மனிதனை அனுப்பி அவன் மிருகச்சிந்தனை யையும், அவற்றின் உருவங்களையும் பூசைசெய்து கொண்டிருக்கிறான் என்பது எத்தனை ஆனந்தமயமானது.

இந்த உலகிலுள்ள அனைத்து உயிருள்ளவற்றையும் நாம் மனிதன், தாவரங்கள், விலங்குகள் நுண் உயிரிகள் என்பவற்றுள் அடக்கிவிட முடியும். நுண்ணங்கிகளை நாம் கணக்கில் கொள்ளாதபோதும் அவை இடையிடையே வீஇஸற் வைரஸ் (அம்மை), பிளேக், மலேரியா, எயிட்ஸ், எஸ்கர்சியா கோலை அல்லது ஈ.கோலை டெங்கு இப்படி எந்த வழியிலாவது தலைகாட்டி 'நானும் இருக்கிறேன் சின்னக் குட்டி' எனப் பெருமெண்ணிக்கையிலான மனித அழிவுகளுடன் தலை காட்டியதும், புதிதாக இப்போது உயிராயுதம் என்பதற்கு அதையும் பயன்படுத்துமளவு நாம் விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கிறோம்.

ஆக தாவரம், விலங்கு நுண்ணங்கி ஏன் புண்ணிய பூமி விண்ணைக்கூட ஆளும் வல்லமைக்காய்ப் பயன்படுத்த வெளிக்கிட இப்போது ஒட்டுமொத்த இயற்கையும்- நியூட்டனின் மூன்றாம் விதிக்கொப்ப மனிதனை 'என்னா நீங்க சுகமா?' எனக்குசலம் விசாரிக்கிற காலமிது.

'மனிதனும் ஒரு மிருகம் தான்ட்டாப்பா?' என்போரும் உள்ளனர். பெரும் பகுதியினர், கடவுள்பாதி மிருகம்பாதி கலந்துசெய்த கலவை நான் என்கின்றனர். அதாகப்பட்டது 'என்னிடமுள்ள, நீங்கள் சொல்கிற நல்ல பண்புகள் எண்ணமும் அதனாலாய செயல் அனைத்தும் எனக்குரிய- என்னிலுள்ள கடவுள் பாதியினாலாயது. அதேபோல தீமைக்குரிய அனைத்தும் மீதிப் பாதியினாலானது' என்பதை வழிமொழிகிறோம். இதனால் நாம் இன்னொன்றையும் வெட்கமற்று பறைசாற்றுகிறோம். ஆகிமுடிந்த காரியத்துக்குப் பொறுப்பெடுக்கிற நேர்மையைத் தொலைத்து விடுகிறோம். அவன் நம்பிக்கொண்டிருக்கும் தான் எனும் முழுச் சிந்தனைக்கும், அவனின் அத்தனை வாழ்வுக்கும் அடிப்படையான அவன்அறிவு யாரையும் அப்படித்தான் பேசச்செய்யும். ஏனெனில் அறிவின்வழி நடப்பவன் மிகச் சுயனலவாதி யாகவே இருக்கமுடியும். நானும் வேலை மெனக்கெட்டு இந்த மிருகங்களின் பின்னால்- காண்கிற சந்தர்ப்பத் திலெல்லாம், நடந்ததை நினைத்து அழுகிறதா? சிரிக்கிறதா? எப்படிப் பேசிக் கொள்கின்றன எனப் பார்ப்பதுண்டு.

பார்க்கிறவங்க லூசுண்டு நினைக்க மாட்டாங்க, என்கிறீர்களா? விளைவின் பெறுதி முக்கியமாயிருந்தால் எதுவும் முக்கியமில்லை, இல்லையா? ஆனால் சத்தியமான, உண்மையாயுள்ள ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். மிருகங்களைவிட புத்தியால் மேம்பட்ட மனிதனைப் போல, ஒருபோதும் இந்த ஐந்தறிவுள்ளதுகள் தன்னினைத்தையே கொன்று தின்பதில்லை.

டிஸ்கவரி செனலில் ஹார்ட் ஒப் த லயன் பார்க்கும்வரை, பெண்சிங்கம் கூடத் தாய்மை இயல்பில் புலிக்குட்டிக்காகக் கண்ணீர்விட்டழும் என்பதை நம்பியவனல்ல. இது எப்படி என்றால் மே19 இல் எல்லாம் முடிந்து, வண்டியிலே சாமான்கட்டிப் புலியோடு வெளிக்கிட்டு சையிக்கிளாகி, பின் பொட்டலமாகி, கடைசியாக கிளிந்த உடலில் நாட்பட்ட பட்டினியில் தோய்ந்த உயிர் மட்டும் தரித்தபடி முள்ளிவாய்க்காலிலிருந்து அரசுபக்கம் வந்து சேர்ந்த மக்களை ரி.விக்களில் ஒலிபரப்பிய காலத்தில, மகிந்தவின் கூட்டமொன்றில் வைத்து ஒரு சிங்கள நடுவயதுமாது தன் உடலிலிருந்த நகைக்கடைகளைவிற்றுப் பணமாக்கிய ஐந்து இலட்சங்களைக் கொடுத்து விட்டு, 'அந்தமக்களுக்குக் கொடுங்கள்' என்றழுததைப்போல இருந்தது.

மனிதனிலுள்ள மிருகப் பண்புகளைக் களைவதுதான் மோட்சத்துக்கு வழி எனும் மதங்கள், அன்பை தெய்வீக இயல்பாகவும் அண்டசராசரமெங்கும் அவனின் அருளே பொழிந்துகிடப்பதாகவும் சொல்கின்றன. உண்மைதான் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் ஒவ்வொருபொழுதையும் அனுபவித்தே வாழ்ந்தன. பறந்தன. சிலிர்த்தன. வளர்ந்தன. கூடின.கூவின ....ஆம், நாளையப் பொழுதை நேற்றைய அனுபவத்தையும் சுமக்காத புண்ணிய ஆட்கள் அவர்கள். நாளைய கற்பனையும், நேற்றைய அனுபவமும் இன்றைக்குப் பயன்படுத்த உதவ வேண்டுமேதவிர இன்றையபொழுதையும் கொன்றுபொட அனுமதிப்பது ஒருபொழுதும் வாழ்கிற அனுபவத்தைத் தராதுதான்.

மனிதனுக்கு வாய்த்த மிகக்கொடுமையான பிணைப்பு, இந்த இறைவன் அரைவாசி கந்தசாமி அரைவாசித்தனமேதான். மனிதன் மட்டுமே கொண்டிருக்கிற ஆன்மாஎன்பது இறைவனுக்குரியதாகவும், உயிர் என்பது அனைத்து ஜீவராசிகளுக்கு முரியதாகையால் மனிதனுக்குமுரியது என்பதுவும் மறைவாக்கு.

இதன்படி பசி, அனைத்து உடலியக்கம் (அனுசேபம், அவசேபம்) , கோபம், பழிவாங்கல், தன்னை முதன் மைப்படுத்தும்தனம், தப்பிப் பிழைக்கும் ஆற்றல், தன் இனத்தை விருத்தி யாக்கல், இதற்குப் பக்கபலமாக குரங்கிலிருந்து வந்தவனே மனிதன் என்பதை உச்சாடனம் பண்ணி வந்திருக்கிறோம்.

தியாகச்செத்துப்போதல் அனைத்தையும் உயிருக்குரியதாகச் சொல்வர். ஏனைய எல்லா உயிர்களையும் விட மனிதனுக்கு பார்வை, பேச்சு, கேள்வி;, ஜீவன், நாட்டம், தத்துவம், அறிவு(இதை ஞானம் என்றே சொல்வது தகும்) என்பவை ஆன்மா வுக்கு உரியவை அல்லது மனிதனுக்குமட்டுமே ஆனவை என்பது மறைவாக்கு.

ஏண்டாம்பி, நாயும் பார்க்குதில்ல என்றால் அதன் மறுபக்கம், நாயின்ர பார்வைதான் என்ர பார்வையும் என்றாகிப் போகும். இதை இன்னும் விபரித்துக் கொண்டு போனால் ஒருமாதம் இணையத்தை இதற்காகவே ஒதுக்க வேண்டி இருக்கும். நம் நோக்கு அதுவல்ல. ஆன்மாவைக் கொண்டாடுதலும் அதனைக் கண்டடைதலும் அதற்காகவே தன் வாழ்வைப் பணயம் வைப்பதுவும் கிழக்கின் வழியாயிருக்க, உடலை முழுமையாக ஏற்றுக்கொள்ளுதலும், அதன் சுதந்திரமும் அறிவுமே மானிட ஏற்றத்துக்கு உரியவழி எனும் மேற்கின் வழியையும் முன்னிறுத்திப் பார்ப்பதேயாகும்.

புத்தரைக் கேட்டால் அனைத்துத் துன்பங்களுக்கும் ஆசையே காரணம் என்கிறார். ஆனமாவைத் தொலைத்தவனுக்கு ஈடேற்றமேயில்லை இழிபிறப்பாகப் பிறந்தழிவான் என்பது இந்துமதக் கூற்று. தன் ஆன்மாவைக் கண்டடைந்தவன் தன் நாயனைக் கண்டடைந்தவனாவான் என்பது மாநபிவாக்கு. ஜீசஸ் (ஈஸா நபி(அலை)) மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் அழிந்து போகாத ஆதாயம் தருவதை வலைவீசிப் பிடிக்கக் கற்றுத்தருகிறேன் என அழைத்துச் செல்கிறார். இது எதுவும் மிருகங்களிடம் செல்லுபடியாகாத விஷயங்கள்.

எனவேதான் மேற்கு மானிட அறிவை முதன்மைப்படுத்த வெளிக்கிட்டது. அதன் முதல் கோசமே அலாதியானது: ரொம்ப சுவராஷ்யமானது. அது முதலில் தந்த அழகுமிகு ஜிகினாக்களுடன் மேளதாளங்களுடன் பிரசவித்த முதல்குழந்தை, கூர்ப்பு.அதாவது 'ஏ, மானிடா, உனக்கும், இந்த உலகிலுள்ள இன்னொரு உயிருக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமுமில்லை' என்பது. இதற்குப் பக்கபலமாக குரங்கிலிருந்து வந்தவனே மனிதன் என்பதை உச்சாடனம் பண்ணி வந்திருக்கிறோம்.

இந்த மிருகத்துக்குரிய பண்பாகச் சொல்லும் ஆசையைத் துறந்த இன்றைய கால ஆசாடபூதிகளைப் பார்த்தால் சங்கராச்சாரியார், சாயிபாபா, போப்புகள், நஜ்துதேச சவுதி ராஜாக்கள் ஆகிய எல்லோருமே முந்திய காலத்தனிக்காட்டு ராஜாத்தனத்துக்கு புதிதாக மதக்கிரீடம் வைத்துக்கொண்டு அனைத்தும் மதத்துக்காக எனச் சொல்லியே மிருகப்பண்பில் திளைத்தகதையையே கண்டுவருகிறோம்.

ஆதாவது, மேற்கு சாதாரண அப்பாவி ஜனங்களை மாத்திரமல்ல, மேன்மையுறு மானிடராக்கவேண்டிய- அறிந்தவர்கள் என அடையாளப்படுத்துகிற மத போசகர்களையே இன்று ஆசை, கொலை, களவு, காமம், வஞ்சகம் அத்தனையிலும் (மிருகப் பண்புகள்) மேலோங்கி நிற்கவைத்தது மன்றி வழிபடத்தகுந்தவர்களாகவும் ஆக்கிவிட்ட கொடுமையை என்னசொல்ல? எனவே சாதாரண அரசியல் வாதிகளையும் நம் தலைவர்களையும் எப்படி நாம் கோபிப்பது? கிழக்கின் தலைவர்களில் பெரும்பகுதியினர் மதநெறி சார்ந்தவர்களாகவும், தங்களுடைய அரசவையில் அவர்களுக்கு மேலதிக செல்வாக்கும், ஏன் அரசனின் தீர்ப்பையே கேள்விக்குட்படுத்தி மானிடநீதிக்காகப் பாடுபடுபவர்களாகவும் நம் வரலாறு இருந்;திருக்கிறது. அல்லது மார்க்கத்தில் பெரியாராக இருப்பவரே தலைவராக(இமாம்) வருவதைக் கொண்டிருந்தோம். அதனால் மதத்தைப் பின்பற்றுகிற ஒருவனாலேயே நீதியுடன் ஆழமுடியும் எனும் நிலைமை இருந்தது. அதாகப்பட்டது ஒருவன் நல்லவனாயிருப்பது, மதத்தன்மை வாய்ந்தவனாலேயே முடியும் எனக்கண்டடையப்பட்டிருந்தது. இது சிதைவுறுகிற காலகட்டம் எதுவெனப்பார்த்தோமானால், மேற்கின் காலனித்துவத்தினாலேயே எனக்கண்டடையலாம்.

நம்மில் யாவருக்கும், நாம் நமது ஐம்புலன்;களினூடு நாம்பெறும் தகவல்களிருந்தே நம் அறிவைக்கட்டமைக்கிறோம் என்பதில் சந்தேகம் வரமுடியாது. அது எத்தனைதூரம் அபத்தமான ஒன்று என்பதை நம் அனைவரின் கண்ணிலுள்ள ஏழுகுறைபாடுகளைச் சொவதன் மூலம் நாம் ஓரளவு விளங்க முயலலாம்;. இந்தக் கண்ணானது -தன்னைப் பார்க்காது, தொலைவில் உள்ளதை, மிகக்கிட்ட உள்ளதைப் பார்க்காது. திரையின் பின்னாலுள்ளதைப் பார்க்காது. பெரிதைச் சிறிதாயும் சிறிதைப் பெரிதாயும் (தூரத்தில் தங்கி நிற்கும்), சுழல்வதை நிலையானதாக(பூமி) நிலையானதைச் சுழல்வதாக (வட்ட மையம்) க் காட்டும். ஒரு சிறுபகுதியைக்கூட முழுமையாகப் பார்க்க முடியாதது (எந்தப் பொருளின் அணுவையோ- அதற்கும் சிறிதாயுள்ளதா என்பதே தெரியா புலனறிவு) , தைப் போல, ஐந்தும் தந்த தகவல்களில் கட்டப்பட்ட புத்தியை நம்புவது திட்டம்போட்டுக் காரியமாற்றச் சரிவராது. அதில் அன்புதெரியாது: ஆதாயம் பார்க்கின்ற சுயநலம் வழிந்து நிற்கும. மிருகத்தை விடக் கீழான நிலைக்கு மனிதனைக் கொண்டுசெல்லும்.

மொனாராகலவிலுள்ள வேடர்களின் தலைவரினுடைய மகன், பேராதனைப் வளாகத்தில், கலைப்ப்பட்டம் பெற்றவர். அவரிடம் ஒருமுறை நிருபர் பேட்டி காண்கிறார்

கேள்வி: உங்கள் சமூகத்தினருக்குக் கல்வியினாலாய பயன் எதுவென நினைக்கிறீர்கள்?

பதில்: முன்னர் மிருகங்களுக்குப் பயந்து எம்வீடுகளின் வெளிக்கதவுகளை மட்டும் அடைத்து விட்டுச் செல்வோம். இப்போது ஒவ்வொரு அலுமாரிக்கும், அறைக்கதவுகளுக்கு, வீட்டின்வெளிக்கதவுக்கு வளவின் கேற்றுக்கு எனஅதிகம் பூட்டுகளும் மனிதர் மீதான அவநம்பிக்கைகளையும் விதைத்திருக்கிறது என்றார்.

முன்பும் அரசர்கள் இருந்தார்கள்: யுத்தங்களும் இருந்ததுதான். ஆனால் இத்தனை சிறுவர்களும், பெண்களும், குடியிருப்புகளும் அழிந்து போனதில்லை. யுத்தத்தின் முழு விளைவும் மன்னனைச் சார்ந்திருந்தது. இருபடைகளும் வெட்டவெளிமைதானத்தில் தம்பராக்கிரமங்களைக் காட்டியதையே வாசித்தறிந்தோம். வெற்றிகொண்டு ஊர் கொளுத்திய படைகளை அராஜகம் வாய்ந்தோராக, மானிடதர்மமற்ற மன்னனாகக் கணித்து மக்களுக்காகவே மன்னன் எனக்கொண்ட அமைப்பு இருந்திருக்கிறது. வீரம் என்பது சரிக்குச் சமனானதாக இருப்பதுவும் மதிக்கத்தக்கதாகவும் போற்றிப் பாடப்பட்ட காலம் அது.

அந்த வீரம் பெண்களை, குழந்தைகளை, வயதுமுதிர்ந்தோரை, தம் பொருட்களைப் பாதுகாக்கும் பொருட்டாகவே நிகழ்ந்து வந்திருக்கிறது. இன்றைக்கு ஜனனாயகம் என்பதைச் சிருஷ்டித்த மானிட அறிவு எந்தவித போர்த் தர்மமுமற்று நாட்டுமக்களுள்ள பகுதியிலேயே யுத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனையும் எந்தக்கணப்பொழுதிலும் யாராலும் கொல்லப்பட்டுப் போய்விடசாத்தியமுள்ளவன் எனும் அச்சசூழ்நிலையில் வாழவைக்கச் செய்திருக்கிறது. யாரும் பொறுப்புக்கூறவேண்டிய கடமை இல்லாதபடி சூழ்ச்சிகளும் கொலை முயற்சிகளுமாக வல்லமையுள்ளவர்கள் என்பதைப் பறையறிவித்து அடக்குமுறையில் மொத்த மானிடத்தையும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

அதாவது அரசனுக்குப் பதிலாக -மக்களால் ஜனனாயக முறைப்படி நாமுருவாக்கிய அரசு-அல்லது குழு இயக்கங்கள் மன்னர்களைவிட மோசமாக மக்களை அடிமையாக, கேள்விகேட்க உரிமையின்றிச் செத்துப்போகவைக்குமளவு வல்லமைவாய்ந்த தாக்கிவிட்டிருக்கிறது.

இதற்கு அவர்களை விட நம் மக்களையும் அவர் தம் மயக்கங்களையுமே குற்றம் காண வேண்டியுள்ளது. இதைத் திறந்து சொன்னால் இதயம் வாய்ந்த தலைவர்களைவிட இங்கிலீசுல படிச்ச அறிவு சுமந்த அப்புக்காத்துக்களை நாம் தலைவர்களாக்க முனைந்தமையே முழுமுதல் காரணமாகும். இன்றைக்கு நாம் காண்கிற அவாள்வீட்டு அப்புக்காத்து சிதம்பரத்தை விட, நேற்றைய படிக்காத காமராஜர் மிகமேலான தலைவர் என்பதனை நாம் விளங்கினால் ஏற்றுக்கொண்டால் நம்மக்களை நாம் இந்தச் சகதியிலிருந்து மீட்டு விட முடியும்.

இந்திய உதாரணம் இங்கு பயன்படுத்தப்படுவதே ஒரு முக்கிய காரணமாகத்தான். சுதந்திரம் ஆங்கிலேயரிடமிருந்து கேட்டுப்போராடியதன் பின்னர் ஆட்சியதிகாரத்துக்கு, ஆங்கிலய நாகரீகம் சுமந்த ஜனனாயகம் பற்றிப் பிரித்தானியாவில் கல்வி கற்றுப்படித்த நேருமாமாதான் தேவைப்படுகிறது. அதேபோல இலங்கைக்கும் மூவினத் திலும் சேர்பட்டம் வாங்கிய துரைமாரைக் குடியரசில் அமர்த்தி வைக்கிறோம். அதாவது இந்தியாவிடமிருந்து இலங்கை எப்போதும் பின்;தொடரும் ஒருவரலாற்றை அல்லது கடன்வாங்கிக் கரைசேரும் கட்டமைப்பையே பின்பற்றிவந்திருக்கிறது. அது மூன்று மதங்களையும் அங்கிருந்துதான் பெற்றது. கலாச்சாரத்துக்கு, நாகரீகத்துக்கு, தன் அரசியல் முன்னெடுப்புகளுக்கு உதாரணங்களில் பெரும்பகுதியை அங்கேயே பெற்று வந்திருக்கிறது.

அனால் அங்குதோற்றுப் போன ஒன்றை-தமிழகத்தைத் தனிநாடாக்கும் செயற்பாட்டையும் அதுகாவிக்கொண்டு வந்ததன் விளைவு மிகப் பெருமளவுசேதத்தை முழுஇலங்கைக்கும் விளைவித்திருக்கிறது. அண்ணாத்துரை அப்போதே உணர்ந்து கையொப்பமிட்ட ஒன்றை இலங்கையில் பரீட்சித்துப் பார்க்க அண்ணர் அமிர் முயன்றதன் விழைவுக்கு என்னகாரணம்? அவரின் அதீத அறிவா? அல்லது தமிழ் மக்களிடம் தன் இதயத்தை பறிகொடுத்ததனாலா தலைவனுக்குரிய பண்பா? 1983 ஜுலைகலவரத்தின் போது அபயம் கேட்டு இந்திராவிடம் மாறுவேசம் போட்டுப்போய் உதவிகேட்டது உண்மையான அக்கறையினால்தானா?

அமெரிக்க சார்பு நிலையிலிருந்த யு.என்.பியின் அபரிதகொட்டத்தை யடக்கவும் இரஷ்ய சார்பு விஸ்தரிப்புக்காகவும் தனக்கு விசுவாசமிக்க ஏவல்படைகளை உருவாக்கி நாட்டின் இஸ்திரத்தன்மையைக் குழப்புவதன்மூலம் இலங்கையை தன்பிடியில் வைத்துக்கொள்ள இந்தியாதிட்டமிட்டதை இன்றைக்கு ரோ உளவாளி பி.ராமன் நிழல்வீரர்களில் பதிவிட்டதன் பின்னரும்- மேனன் இலங்கைப் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் எனச் சொன்னபின்னரும், தலையிலிருந்து, வாயால்தான் பேசுவேன் என்றால் என்ன அர்த்தம்?

இன்றைக்கு இலங்கையைவிட மிகநெருக்கமாக அமெரிக்காவுக்கு கள்ளக்கூத்தியாளாகி (வாஜ்பேயி பிரதமராகிய தனாலாய பயன்) நிற்கும் இந்திய அரசும் இரஸ்யா சீனா ஆதரவிலான இலங்கைய ரசியலுமாக நிலைமை மாறிக்கொழிக்கிற காலத்தில் இலங்கையில் உயிரழிவு-ஆயுத வன்முறையிலான கொலை குறைந்திருப்பதற்கு வேறு என்னதான் காரணமிருக்க முடியும்?

உண்மையிலேயே புலியும், யானையுமாக இரண்டையுமே போசித்து வளர்த்ததுமன்றி, அழிந்துபோய்விடாதபடி சமனிலையில் பேணிக்கொள்ளவுமாக நாட்களைக் கடத்தியது- முதலாளித்துவமும் அவர் நலங்களுமே என்பதை இனியுமா நாம் நம்பமறுப்பது?

நம் சிறுபான்மை மக்களை(ப்) பின்பற்றுபவர்களாகத் தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருப்பதிலேயே நம் மூளைசாலி அரசியல்வாதிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். பாடம் கற்றுக்கொள்ள அனுமதிக்கவே விடமாட்டார்கள் போலிருக்கிறது. காலிஸ்தான் கேட்டுப் போராடிய டாக்குத்தர் ஜெக்ஜீத் சிங்கை அடக்க இந்திரா, பிந்திரன் வாலேயை மாற்றாய் அனுப்ப, இதுவும் அதனுடன் சேர்ந்து பொற்கோவிலில் மையம்கொண்டு போராட, பொற்கோவிலும் ஒருமுள்ளிவாய்க்காலானது அன்று: ஆனால் விளைவு இந்திராவின் மரணம்வரை வந்தடைந்தது. இலங்கையின் விபரீத எடுகோளுக்கு அன்னைக்குப் பதிலாக மகன் ராஜீவ் தன்னுயிரை விலையாகச் செலுத்த வேண்டியிருந்தது. கடைசியில் நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் எனும் உபதேசம் வேறு. இதுவும் கடந்து போகும். ஆனால் அண்மைய புலன்பெயர் புலிகளின் நடவடிக்கைகளையும் -வடக்கின் செய்திகளையும் பார்க்கிறபோது நாம் இன்னும் இதயத்தால் கற்றுக்கொள்ளவே மாட்டோம் என்பதைப் பறையறிவித்துக் கொண்டே இருக்கிறோம்.

மக்களால் தெர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு அரசுக்குச் சரிசமனாக ஆயுதங்களை ரகசியமாக(?) வாங்கியதுமட்டுமன்றி அதைவிட கிழக்குமட்டுமன்றி -இலங்கையின் எந்தப்பகுதிக்கும் கொண்டுசெல்லும் மாற்றுச் சக்தியாக நின்றதுமன்றி ஜே-ஆர் முதல் இன்றைய மகிந்தா வரை ஒப்பந்தங்களும், பேச்சுவார்த்தைகளுமாகத் தனியரசு எனபிம்பம் வளர்த்துத் தலைநிமிர்த்தித் தெரிந்தோரெல்லாம் இன்று இலங்கையரசுக்கு மட்டுமே அவர்கள் இருவருமாகச் சீரழித்த இலங்கை மக்களை மீழக்கட்டுமாணம் செய்வதில் பங்கு என்பது, இன்னும் தலையைவிட்டும் மிருகச் சிந்தனை இறங்கவில்லை என்பதையே காட்டுகிறது. அண்மையில், நோயல் நடேசன் அவர்களின் கட்டுரையில் வரும் யாருடைய அனுமதியுமின்றிப் பாடசாலை சென்ற பிள்ளைகள் காணாது போய்ப் பின் உளத்தாலும் உடலாலும் சிதைந்து மீண்ட நம் போரளிப் பெண்ணின் தந்தை, தன் மகளுக்கே- 'மாமா' வாகிய சம்பவம் போதும் போரின் பின்னான நீண்டு செல்லும் அழுத்தும் நாட்களின் நகர்வைச் சொல்ல.

சித்தப்பிரமையும் இதன்னை வேறொன்றில் தொலைத்து மறக்கமுயலும் சுய அழித்தல்களும் ....நாம் போற்றுகிற பெறுமானங்களே அலங்காரங்களுடன் கூவிவிற்கும் மேற்;கின் பாணியிலான ஜனனாயகக் கடைச்சரக்காகிவிடும்;. கொலைசெய்யக் கோடிகோடியாகக் கொடுத்த புத்திகள், நீங்கள் சொல்லும் அதியுயர் கல்வியும், அதனாலாய பணத்தேட்டமும் ஆகிப்போய் மூன்றாம் தேவியையும் காணப்போய் (புத்தியும் அறிவும் வந்தாலே வீரமும் நேர்மையும் இல்லாதுபோய்விடுவதால்) பணமற்ற பிந்தங்கிவிட்ட பாமரர்களின் உயிரும், வாழ்வும, உங்களின் வீரத்தைப் பறைசாற்றும் (எவ்வித தன் முனைப்புமற்ற) போர்ப் பண்டங்களாகிப்போனது மிகக் கொடுமையானவிசயம்.

ஆளில்லா விமானத்தைக் கீழிருந்தபடியே இயக்கி, வறுமையான மூன்றாமுலக நாட்டுமக்களை மேற்கு கொன்றொழிப்பதற்கும் இதற்கும் ஏதாவது வித்தியாசம் சொல்லமுடியுமா உங்களால்? விமானத்துக்குப் பதிலாக மிக மலிவான தலை சலவை செய்யப்பட்ட ஏழை இளைஞர்கள் உங்களுக்கு, அவ்வளவுதான். இன்று எஞ்ஞியிருப்பவையின் இதயங்களில் வழிகிற இரத்தங்கள் இன்னொரு இதயத்தைதான் கரையச் செய்யும். வாழ்வு எதுவென அனுபவித்து வாழ்பவரால்தான் இன்னொருத்தரையும் தானாகக் காணமுடியும்.

நம் மக்களிடம் உதாரண புருஷர்களாக எதை வைக்கிறோமோ அதுவாகவே நம் பயன் அறுவடையும் இருக்கும.; தனியாகத் தமிழர் என்றில்லாது இலங்கைவாழ் அனைத்து இன நடுத்தர, ஏழைமக்களினதும் வாழ்க்கையை இளமையைச், சிந்தனையை, அவர்களுக்கு சுதந்திரம்-ஜனனாயக வாழ்வு வேண்டி, பயங்கரவாத அடக்கும் பொறிமுறை என உயரிய கோசங்களுடன் அடக்குமுறையிலான பாசிசத்தை நமதனுமதியுடன் (தேர்தல்) அல்லது பலவந்தமாக நடாத்த நமக்கு வாய்த்த ஆழ வந்தான்கள் ஆகிப்போனது நாம் கடன்வாங்கிப் பெற்ற அறிவினால் மட்டுமானதல்ல. அந்த அறிவின் வழிவந்த சுயநலமும் பேராசையும் இதயத்தைச் சுருங்கச் செய்துவிட்டமையேயாகும்.. ஒரு பிரச்சினையைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல, இன்னொருத்தரின் வலியையும், வேதனையையும் புரிவதற்;குக்கூட மற்றவரின் இதயம் தன்னில் உள்நுளையத் திறந்துவைத்த இதயநிலை வேண்டும்.

இலங்கை அல்லது மூன்று மாநில (மூவினமாமே) ஆட்சிவந்த போதிலும் -இந்தப் புத்திசாலித்தலைகள்; இன்னுமேதாவது கனவுகளைக் காண எண்ணத்தில் விதை தருவார்களே தவிர கைதூக்கிவிட மாட்டார்கள். ஒவ்வொரு மாதமும் யாருக்குப் போகின்றது என்பது தெரியாமலேயே ஒருபிள்ளைக்கு 20பவுண்கொடுப்பதன் மூலம் மருத்துவத்துறைக்கே தெரிவாகுமாப்போல் தனிஒருநபரால் உதவ முடியுமெனில்-வாழ்விழந்துநிற்கும் நம்விதவைகளைக், குடும்பங்களை வாழ்விப்பது பெரிய விடயமாயிருக்க முடியாது. இன்னும் நம்மிடையே வாழ்கிறகற்பனைக் கோமாளி களான சீமான், வைகோ, நெடுமாறன், ஜெயா-கருணாக்களின் சந்தர்ப்பவாத புத்தி பிறழ்ந்தவன் கூடப் பேசமுடியாக் கோசங்களின் பின்னால் அள்ளுப்படாது போகச் செய்ய முடியும். அல்லாது போயின் இலங்கையராயிருப்பதை விரோதிக்கிறோம் என்பதற்காகவே, எங்களுக்கு வாழ்வின் அடிவேரையே ஆட்டம் காணச்செய்த வல்லூறுக்கு இரையாகிய இரையாக்கிய தலைமுறை நாம் எனும் பட்டத்தைச் சுமந்தவர்களாவோம்.

இதை இன்னும் திறந்து சொன்னால், புலிகளின்(மிருகம்) தேவை வேறு: தமிழர்களின் (மனிதன்) தேவை வேறு என்பதை விளங்காதவர்களாகவே ஆகிப்போவோம்.

கடைசியாக, இருகேள்விகளை மட்டும் நாம் நமக்குள்ளேயே கேட்பதற்காக இங்கு பதிவிடுகிறேன்.

1. இலங்கையைத் தவிர்த்து மற்றைய நாடுகளிலுள்ள இலங்கை மக்களாகிய வர்கள், இலங்கைத் தமிழர்களைவிட சுதந்திரமாக, விடுதலை உணர்வுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையானதுதானா? மேற்குலகு தந்திருப்பதாகச் சொல்லும் பணவருவாயும், வசதிவாய்ப்புக்களும் மேம்பட்ட வாழ்வை அனுபவிக்க- குறிப்பாக மனதுக்கு சந்தோசத்தையே எப்போதும் தந்து கொண்டிருக்கிறது என்பது உண்மையானதுதானா?

2. எந்தப் பக்கம் நீங்கள் நின்று பேசினாலும், அதன் அடிப்படை உண்மையாகவே சமூகத்துக்கான சேவை, சுதந்திரவாழ்வை உறுதிபடுத்தல் என்பதற்காகத்தானா? நீங்கள் அமெரிக்க-ரஷ்ய சீன சார்பு பேசினாலும் சரி, சிங்கள அரசு - புலிகள் என்று பேசினாலும் சரியே.;

அதுசரி இப்போதாவது நீங்கள் உங்களைப்பற்றி வரையறை செய்யுங்கள்.
நீங்கள்

1. மிருகத்தைப் போல-அல்லது அதற்கும் கீழான புத்திகொண்ட மனித உருவில் அலைபவர்

2. என் ஆன்மா அறிய, இன்னொருத்தரைக் காயப்படுத்தாதபடி வாழ்வதற்காக- சோதனைக்காக வாழவந்தவர்.

3.பாதி-பாதி (மிருகம், தெய்வாம்சம்) வாய்த்துப் போனதால் தப்பும் திருத்தமுமாக- வேடிக்கையும், விளையாட்டுமாகவே காலம் கழிப்பவர்.
தெரிவுக்கு யார்மீதும் திணிப்பில்லை. நம் வாழ்வை நாம்தான் வாழ்ந்தாக வேண்டும். அதற்கு வல்லமை இனித்தான் வரவேண்டுமென்பதில்லை. நாம் குருடராக, செவிடராக, இதயமற்றவராக சாகும்வரை தேடலேயின்றி இருக்கப்போகிறோம் என்றால், விளைவுக்கு இன்னொருத்தரைக் குற்றம் சொல்லும் தகுதியுமற்றவர் நாம்.

2 comments :

Anonymous ,  July 7, 2011 at 12:03 PM  

///தன் ஆன்மாவைக் கண்டடைந்தவன் தன் நாயனைக் கண்டடைந்தவனாவான் என்பது மாநபிவாக்கு.///


ஆன்மாவை யாரும் கண்டிலர். நாயனையும் யாரும் கண்டிலர். நாயனை இந்த துனியாவில் யாரும் காண முடியாது என்பதுதானே உண்மை. மாநபி சொன்னதை, சொல்லவில்லை என சொல்லுவதும் சொல்லாததை சொன்னார்கள் என்று கூறுவதும் நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை தாங்கள் அறிவீர்கள்தானே!

Anonymous ,  July 7, 2011 at 6:17 PM  

to the previous person,

'"He who knows himself, knows his Lord"'

"Be mindful of Allah, and YOU'LL FIND HIM BEFORE YOU." [Tirmidhi, and others]

The saying you quoted may not be in hadith, but i dont think it was intentional.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com