Thursday, May 19, 2011

அமைச்சர்களுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை!

வேகமான பணிகளுடன் களம் இறங்கியது புது அரசு.
தமிழக அரசின் ஒவ்வொரு துறையின் நிலைமை குறித்தும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா, இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பெரிய திரையில், ஒவ்வொரு துறை பற்றிய விவரங்கள் காண்பிக்கப்பட்டு, அதைபற்றி அமைச்சர்களுக்கு ஜெயலலிதா வகுப்பு நடத்தினார். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின், நேற்று முன்தினம், கோட்டைக்கு வந்த அவர், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதன்பின், நேற்று காலை, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலரை மாற்றம் செய்வது குறித்து, உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான பட்டியலையும் அவர் தயார் செய்தார். அமைச்சர்கள் அனைவரும், தங்களது துறை சார்ந்த உயரதிகாரிகளுடன், நேற்று காலை ஆலோசனை நடத்த வேண்டுமென அவர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, ஒவ்வொரு அமைச்சரது அலுவலகத்திலும், அந்தந்த துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, துறை சார்பாக தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், திட்டங்களின் நிலவரம், துறையின் தற்போதைய நிலை போன்றவை குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று மதியம் அனைத்து அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டினார்.

கூட்டத்தில், தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் முதல்வரின் தனிச்செயலர்கள் இருந்தனர். நேற்று பிற்பகல், 2.30 மணிக்கு இந்த ஆய்வுக் கூட்டம் துவங்கியது. ஒவ்வொரு அமைச்சரிடமும், துறை பற்றிய விவரங்களை ஜெயலலிதா கேட்டறிந்தார். அத்துடன், அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், கோப்புகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும், துறை சார்ந்த பணிகளில் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பது பற்றி அறிவுரைகளை அவர் வழங்கினார். தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும்படியும் அறிவுரை வழங்கினார்.

அத்துடன், கூட்ட அரங்கில் பெரிய திரை போடப்பட்டிருந்தது. அதில், "புரொஜக்டர்' மூலம், ஒவ்வொரு துறை பற்றிய புள்ளி விவரங்கள், "பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' செய்யப்பட்டது. இதை வைத்து, துறைகளின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர்களுக்கு ஜெயலலிதா வகுப்பு எடுத்தார். முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா கேட்டறிந்தார். ஒவ்வொரு துறையும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகளை முதல்வர் வழங்கினார். புதிய அமைச்சரவையில், 24 பேர் புதியவர்கள் என்பதால், அமைச்சர் பதவியில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என, அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

மேலும், அதிகளவு பட்ஜெட் ஒதுக்கீடு கொண்ட முக்கிய துறைகளான, சுகாதாரத் துறை, கல்வித் துறை, வேளாண்மைத் துறை, எரிசக்தித் துறையில், முதல்வர் ஜெயலலிதா இக்கூட்டத்தில் அதிக முக்கியத்துவம் அளித்தார். இக்கூட்டம், மாலை 5 மணிக்கு முடிந்தது. மின்சார நிலைமை குறித்து விவாதித்ததுடன், தனியாக அத்துறை பற்றிய ஆய்வுக் கூட்டத்தையும் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். அமைச்சரவை பொறுப்பேற்றதற்கு அடுத்த நாளே, இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தி, சுறுசுறுப்பாக பணிகளை துவக்கியுள்ள அரசு, பணிகளையும் முடுக்கி விடத் துவங்கியுள்ளது, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com