சிறுவர்களை படையில் சேர்ப்போர் தொடர்பான ஐ.நா. பட்டியலில் இனிய பாரதி
சிறுவர்களை படையில் சேர்ப்போர் சிறார்களை பயன்படுத்துவோர், கொலை செய்வோர், அங்கவீனமாக்குவோர் வல்லுறவுக்குள்ளாக்குவோர் தொடர்பானபட்டியலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியையும் ஐ.நா. சேர்த்துள்ளது.
சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் 10 ஆவது வருடாந்த அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. சிறார்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரத்திற்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ராதிகா குமாரசுவாமி இவ்வறிக்கையை வெளியிட்டு கருத்துத் தெரிவிக்கையில், ஆயுதக்குழுக்களால் சேர்க்கப்பட்ட பல சிறார்கள் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார். அவர்களில் சிலர் தற்போது வளர்ந்தோர்களாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
'தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை 2010 டிசெம்பர் மாதம் முடிவு வரை விபரங்கள் அற்றிருந்தோரின் எண்ணிக்கை 1373 ஆகும். இவர்களில் 15 பேர் சிறார்கள் ஆவர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பொறுத்தவரை 13 பேர் தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளன. அவர்களில் 5 பேர் 18 வயதுக்குட்பட்டோர் ஆவர்.'
'மேற்படி 13 சிறுவர்களும் 2006 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இறுதியாக காணப்பட்டனர். அதிகபட்சமாக 5 வருடங்களுக்கு முன்னால், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விசாரணைகள் இனிய பாரதி குறித்தோ இந்த ஆட்சேர்ப்பு அல்லது கடத்தலில் அவரின் பங்களிப்பு குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. அறிக்கை எழுதப்படும்போது சிறுவர் ஆட்சேர்ப்புக்கு பொறுப்பாளி எனக் கூறப்படுவோர் எவர்மீது மீதும் வழக்கு தொடுத்தல் நடவடிக்கை எதுவும் ஆரம்பமாகியிருக்கவில்லை.
இனிய பாரதிக்கு எதிராக வழக்கு ஆரம்பிக்குமாறு பல தடவை ஐ.நாவின் இலங்கை நாட்டிலுள்ள குழுவினாலும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் குறித்த எனது விசேட பிரதிநிதியினாலும் பல தடவை கோரிக்கைவிடுக்கப்பட்ட போதிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை' என ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment