Sunday, April 3, 2011

86% தமிழர் உள்ள பிரதேசத்தில் 85% அரச ஊழியர்கள் சிங்களவர்.

இனிவரும் காலங்களிலாவது தெமழ என்ற சொற்பதத்திற்கு பதிலாக தமிழ் என்ற சொல்லை பயன்படுத்துங்கள். நல்லிணக்க ஆணைக்குழு முன் பேராதனை பல்கலைக்கழக பதுளை மாவட்டத்தினைச் சேர்ந்த மாணவன் சாட்சியம்.

அன்மைக்காலங்களில் தமிழ்பேசும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டாலும்எல்லாப் பிரதேசங்களுக்கும் சென்றடையவில்லை.உதாரணமாக அம்பகமுவ கோரளைப்பிரதேசத்தில் 86% ஆன தமிழ் பேசுவோர்கள் இருக்கின்றப் போதும் 85 % மான அரசாங்க ஊழியர்கள் சிங்களவர்களேயாவர். பதுளை மாநகரசபை அலுவலகத்தில் மொத்த உறுப்பினர்கள் 450 பேர் இருக்கின்றப் போது தமிழ் பேசுவோர் ஒருவர் மட்டுமே
இருக்கின்றார்.

இவ்வாறு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு(LLRC) முன்னிலையில் பேராதனைப் பல்கலைக்கழக அரசறிவியல் துறை இறுதியாண்டு மாணவன் அருணாசலம் மோகனதாஸ் சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார்.

இவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் - இலங்கையில் கடந்த 30 வருட காலமாக நிலவிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னரான சூழ்நிலையில் மக்களின் மனக்குறைகளை கேட்டறிந்து ஒரு சுபீட்சமான வாழ்வை பெற்றுக்கொடுப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டிருக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) முன்னிலையில் மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் இரு பிரச்சினைகள் தொடர்பான விபரங்களைத் தெரியப்படுத்த விரும்புகின்றறேன்.

வீடு மற்றும் காணியுரிமைத் தொடர்பான பிரச்சினைகள், மொழித் தொடர்பான பிரச்சினைகள் என்பவையே அவை இரண்டுமாகும். எனது பெயர் அருணாசலம் மோகனதாஸ், நான் பதுளை மாவட்டத்தினைச் சேர்ந்தவன், தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறை இறுதியாண்டு மாணவனாவேன்.

01. வீடு மற்றும் காணியுரிமைத் தொடர்பான பிரச்சினைகள் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது குடும்பத்தவரும் சொந்த நிலம் மற்றும் வீட்டினைக் கொண்டிருக்க உரித்துடையவர்கள் உறுப்புரை- 25). ஏனெனில் காணி மற்றும் வீடு ஒரு தனிமனிதனின் அடிப்படை தேவையாக இருப்பதுடன் அது அபிவிருத்தியை நிர்ணயிக்கும் காரணியாக காணப்படுகின்றது. இதன்படி சொந்தக் காணி, வீடு இல்லாதோர் சுதந்திரமற்றவர்களாகவும், எந்நேரமும் அடுத்தவரில் தங்கியிருப்போராகவும் காணப்படுவர். வீட்டுரிமை என்பது 'ஒரு மனிதன் தனது வாழ்வை கௌரவமாக மேற்கொள்வதற்கு தேவையான கௌரவமான, பாதுகாப்பான இருப்பிடத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உரித்தாகும்'.

காணியுரிமையானது வீட்டரிமையுடன் நெருங்கியத் தொடர்புபட்டதாகும். அதாவது வீடு சொந்தமாக வேண்டுமென்றால் அது சொந்த காணியில் கட்டப்பட வேண்டும். எனவே மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உறையுளை அமைத்துக்கொள்ளவும், அன்றாட தேவைக்கான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவும், கௌரவமான, பாதுகாப்பான நிலத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான உரித்தே காணியுரிமை' எனப்படும்.

மிகவும் அடிப்படையான இவ்விரு உரிமைகளும் மலையக மக்களைப் பொருத்தவரையில் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது.

பெருந்தோட்டப்புறங்களில் காணி மற்றும் வீடமைப்பு முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகள் நூறாண்டுகள் கடந்த நிலையிலும் தரங்குறைந்ததாகவும் கவனிப்பற்றும், காணப்படுகின்றது. இவர்கள் 100 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளிலேயே இன்றும் நிர்பந்தத்தின் மத்தியில் வாழ்கின்றனர். பெருந்தோட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் தொழிலாளர் தங்குவதற்காக தற்காலிக குடிசைகளே அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் தேயிலைத்தொழில் சுபீட்சம் பெற்றதையிட்டு 1927ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கட்டப்பட்ட லயன் வீடுகளே இன்றும் உள்ளது. மொத்த வீடுகளில் 89 வீதமான வீடுகள் லயன் வகையான வாழிடங்களேயாகும். (மூக்கையா. மா. செ, 1995: 55)

நடைமுறையிலிருக்கும் வீடமைப்பு முறையை பின்வரும் அட்டவணையில் காணலாம்.

அட்டவணை 01-

நடைமுறையில் இருக்கும் வீடமைப்பு முறைகள்.

வீடமைப்பு முறைகள். -- மொத்த அலகுகள்.
இரட்டை லயன் அறைகள் -- 104556
ஒற்றை லயன் அறைகள் -- 108825
தற்காலிகக் குடிசைகள், -- 22410
தற்காலிக வீடுகள், -- 35100
தோட்டத்தில் வசிப்பவர்களின் மொத்த அலகுகள். -- 311491

மூலம் : தோட்ட வீடமைப்பில் புதிய சகாப்தம், வீடமைப்பு நிர்மானத்துறை பொது வசதிகள் அமைச்சு 1996.

மேற்படி அட்டவணையின்படி பெருந்தோட்ட எல்லைக்குள் கிட்டத்தட்ட 213321 பழைய லயன் முறையை அடிப்படையாகக் கொண்ட வீடுகளும் அதில் 104556 அலகுகள் 49.20 வீதம் இரட்டை லயன் காம்பரா முறையைக் கொண்டதாகவும் 108825 அலகுகள் 51ம% ஒற்றை லயன் காம்பரா முறையைக் கொண்டதாகவும் 70 வருடங்களுக்கு முன்னதாக கட்டப்பட்டதாகவும் காணப்படுகின்றன (லோரன்ஸ்.அ, 2006: 89).

வீடுகளின் அமைப்பு, அளவை நோக்கின் ஒவ்வொரு லயன் காம்ராவும் 10 x 12 அறைகள் கொண்டதாகவும் முன்பகுதி விராந்தாவாகவும், பின்பகுதி சமையலறையாகவும் பாவிக்கப்படுகின்றது. இந்த லயன் அறைகளில் சராசரிக் குடும்பத்தில் 5 பேர் வாழ வேண்டிய துரதிஷ்ட நிலைக் காணப்படுகின்றது. இந்த அளவு தேசிய ரீதியில் மிக குறைவானதாகும். அதாவது தேசிய ரீதியிற் சராசரியாக தனியொருவனுக்கு சுமார் 100 சதுர அடி வாழ்விட வசதி காணப்படுகின்றது. ஆனால் தோட்டங்களில் வாழ்வோருக்கு 46 சதுர அடி வாழ்விட வசதியே காணப்படுகின்றது. இவ்வாறு மிகச் சிறிய வாழ்விட வசதியே காணப்படுவதுடன் அவற்றில் ஏனைய வசதிகளும் மிக குறைவாகவே காணப்படுகின்றது (மூக்கையா. மா. செ, 1995: 56).

இலங்கையில் மிகவும் பழமையான வீடுகளாக லயன் வீடுகள் காணப்படுகின்றன. ஆரம்பகாலம் தொட்டு அவை எத்தகைய திருத்த வேலைகளும் செய்யப்படாதுள்ளன. அந்த
வீடுகள் இருண்டதாகவும், மிகவும் சிறியதாகவும் (10 x 12) காணப்படுகின்றன. சமூக நாகரிகத்தின் அஸ்திவாரம் இடப்படுகின்ற சமூக நிறுவனமாக திகழ்கின்ற வீடானது குறைந்தபட்சத் தகுதியையாவது கொண்டிருக்க வேண்டும். ஆனால் பெருந்தோட்டப்பகுதிகளில் காற்றோட்டம், வெளிச்சம், கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கேற்ற சூழ்நிலைகள், குடிநீர் மற்றும் கழிவகற்றும் வசதிகள், சுகாதாரமான சமையல் வசதி போன்ற வசதிகள் திருப்திகரமாக காணப்படாது, மனித வாழ்வுக்கு பொருத்தமற்ற, சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது. இந்த நிலை மலையக மக்களுக்கு கட்டமைப்பு ரீதியாக சமநிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றது.

தோட்டப்புறங்களில் லயன் காம்பிராக்களுக்கு இணைக்கப்பட்டுள்ள மின்னிணைப்பில் ஒழுங்கின்மை காரணமாகக் அடிக்கடி பல பெருந்தோட்டங்களில் உள்ள லயன்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. இதனால் இவ்வாறான லயன்களில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய சொத்துக்களையும், உடைமைகளையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு உள்ளான சம்பவங்கள் பல உள்ளன. (பெருந்தோட்டப் பகுதிகளில் 778,000 மக்கள் 178,000 வீடுகளில் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர்களது குடியிருப்புகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பலதரப்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் அவை குறுகிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுவதுடன் மிகவும் குறைந்த பெறுமதியிலேயே அவ்வாறான வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. அதாவது அடுக்குமாடிக் கட்டிடங்கள் குறைந்த செலவில் பெறுமதியற்ற வீடமைப்பாக கட்டியமைக்கப்பட்டுள்ளது. லயன் வீடமைப்புத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் இவ்வீடமைப்புத் திட்டம் ஓரளவு பயனளிக்குமென எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும் இக்குடியிருப்புத் திட்டம் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட பிரச்சினைகளை உண்டுபண்ணியது.

காணியுரிமை என்று பார்க்கும் போது 1972-1975 காணிச்சீர்த்திருத்தமும், காணிப்பகிர்ந்தளிப்பும் முக்கியமான நிகழ்வுகளாகும். இக்காலத்தில் பெருந்தோட்டக் காணிகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டன. சுவீகரிக்கப்பட்ட காணிகள் சுதேசிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் படி 1992 காலப்பகுதியில் 94244 ஹெக்டேயர் தேயிலை காணிகளை 23 கம்பனிகளின் நிர்வாகத்திற்கும், ஜனவசமவின் கீழ் 5172 ஹெக்டேயர் காணிகளும், அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் 7163 ஹெக்டேயரும், சிற்றுடமை
மற்றும் ஏனைய முகவரிடம் 85945 ஹெக்டேயரும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆனால் ஆண்டாண்டு காலமாக வாழும் மலையக மக்கள் வெறும் கூலிக்காக வாழும் தொழிலாளர்களாகவே இதுநாள் மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். சொந்த வீடு மற்றும் காணியினை கொண்டவரது அல்லது அவரது குடும்பத்தின் சமூக அசைவியக்கம், தனிநபர் அல்லது சமூக அபிவிருத்தி, மனித சுதந்திரம் ஆகியன காணப்படுகின்றப் போதும் பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை இன்மையினால் அவை பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ள்து.

தோட்ட காணியுரிமை மற்றும் வாழிடமாகிய லயன் அறைகள் உட்பட அனைத்து காணிகளும் அரசிற்கு சொந்தமானது. சில தோட்டக்கம்பனிகளின் கீழும், சிறு உடமையாளர்களின் கீழும் இருக்கின்றன. உள்ளுராட்சி சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் வழங்கும் போது வீடு காணியினை சொந்தமாகக் கொண்ட கிராமப்புற மக்களுக்கே வழங்கப்படுகின்றது. ஆனால் சொந்த வீடு, காணியற்ற லயன்களில் வாழும் மக்கள் தேசிய நீரோட்டத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்படவில்லை.

எனவே அரசின் பொதுநலச் சேவைகள் பெருந்தோட்ட மக்களை நேரடியாகச்சென்று சேர வேண்டுமானால் அவர்களும் சொந்தக்காணி, வீட்டினைப்பெற்று தேசிய நீரோட்டத்தின் கீழ் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். இத்தகைய உரிமைகள் அவர்களை பொறுப்புள்ள பிரஜைகளாக்குவதுடன் இந்நாட்டு மக்கள் என்ற அந்தஸ்தினை உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பெருந்தோட்டப்புறங்களில் வீடு காணித் தொடர்பான பிரச்சினைகள்

* மலையகத்தில் மேற்கொள்ளப்பட்ட குடியிருப்புத் திட்டங்களில் பெருந்தோட்டத்துறையில் அமைக்கப்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் அதிகளவு உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிராத குடியிருப்புக்களாகவே காணப்படுகின்றது. (மலசலக்கூட வசதி இன்மை, சுத்தமான நீர கிடைக்காமை, சுகாதார வசதியின்மை)

* வீடு மற்றும் காணி தோட்ட முகாமைத்துவத்தின் கீழேயே இருந்து வருவதோடு குறிப்பிட்ட ஊரைவிட்டுப் போகும்போது அல்லது குடும்பத்தில் ஒருவரேனும் தோட்டத்தில் வேலை செய்யாத போது வீட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுகின்றது. வீட்டுரிமை இன்மையால் வங்கிக்கடன், மின்சாரம், வீடு புனரமைப்பு செய்யமுடியாதுள்ளது.

* அந்தரங்கங்களைப் பேணுவது கடினமாக இருக்கின்றது. இது பெண்களின் பெரும்பாலான உரிமை மீறல்கள் ஏற்படக் காரணமாகின்றது.

* போதிய வீட்டுவசதியின்மையால் பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்படுவதுடன் சுகாதாரமும் பாதிக்கப்படுகின்றது.

* அரசாங்கத்தின் தன்மை இப்பகுதி மக்களுக்கு ஒரு குடியிருப்பை அமைத்துக் கொடுத்தால் போதும் என்ற நிலைப்பாட்டை மாத்திரமே கவனத்தில் கொண்டிருக்கின்றதே தவிர, இப்பகுதி மக்களின் எதிர்கால நலன்களை கவனத்தில் கொள்ளவில்லை.

* பிரதான நகரிலிருந்து பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் இக்குடியிருப்புப் பகுதிகள் அமையப்பெற்றிருப்பதால் அவர்களின் அடிப்படைத் தேவைகளையும், ஏனைய தேவைகளையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக உள்ளனர்.

* இவற்றோடு திடீரென ஏற்படுகின்ற வரட்சி, மண்சரிவு, சூறாவளித் தாக்கம் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு தொடர்ச்சியாக முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

பரிந்துரைகள்
* இம்மக்களுக்கான காணியுரிமையையும், வீட்டுரிமையையும் நிலைநாட்ட மலையக மக்களின் வீடு மற்றும் காணியுரிமைத் தொடர்பாக ஒரு தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும்.

* ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்திற்கும் ஆகக்குறைந்தது 10 பேர்ச்சஸ் காணி முறையான உறுதிப்பத்திரங்களுடன் கொடுக்கப்பட வேண்டும். அதில் காலத்திற்கேற்ற வாழ்வதற்கு உகந்த நவீன வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுவது அவசியமாகும். அத்துடன் தண்ணீர் வசதி, மின்சார வசதி. மலசலகூட வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

* தோட்ட மக்களுக்கு தனியான வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளும் போது அது கிராமக் கட்டமைப்புக்களையும் அவசியமான வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாக குடியிருப்புக்கான முறையான பாதை வசதிகள் மற்றும் பாடசாலை, கூட்டுறவுக் கடைகள், வைத்தியசாலை, வாசிகசாலை, தொடர்பாடல் நிலையம், தபால் நிலையம், முன்பள்ளி இவற்றுள் அவசியமான தேவைகள் பூர்த்திச் செய்யப்பட வேண்டும்.

* பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரிச்சினை விடயத்தில் நில மறுசீரமைப்பு ஆணைக்குழு தலையிட்டு காணிப் பகிர்வு மற்றும் காணி உரித்து என்பனவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பயிரிடப்படாத தரிசு நிலங்கள் தொழிலாளர்கள் வீட்டுத்தோட்டம் மற்றும் மேலதிக வருமானம் பெறும் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட வேண்டும். இது வறுமை தனியவும் தனிநபர் வருமான உயர்வில் சாதகமான மாற்றத்தையும் ஏற்டுத்தும்.

* கிராமிய மற்றும் ஏனைய மக்களுக்கு அரசாங்கம் தேசிய ரீதியாக காணி அல்லது வீடமைப்பில் வழங்கி வரும் சலுகைகளை பெருந்தோட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

02. பெருந்தோட்டப் பகுதிகளில் மொழித் தொடர்பான பிரச்சினைகள்.

(I) அறிமுகம்

மொழி என்பது கருத்துப் பரிமாற்ற ஊடகமாகும். ஆனால் இக்கருத்துடன் அதன் வரையறை முற்றுப்பெறுவதில்லை. மாறாக அறிவைப்பெற்றுக்கொள்ளும் சாதனமாகவும் மிக முக்கியமாக ஓர் மனித உரிமையுமாகும். இதன்படி ஒரு தனிமனிதனின் அல்லது ஜனக்குழுவின் இன, கலாசார அடையாளத்தை வெளிப்படுத்தும் மூலாதாரமாகவும் மொழி
விளங்குகின்றது. பல சர்வதேச பிரகடனங்கள் மொழி உரிமை மற்றும் மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கு உட்படாதிருக்கும் உரிமை என்பன பற்றிய ஏற்பாடுகளை
கொண்டுள்ளன.

'இனம் மதம் மற்றும் மொழி சார்ந்த சிறுபான்மையினர் உள்ள நாடுகளில் அச்சிறுபான்மையைச் சேர்ந்த ஆட்களுக்கு தமது பிரிவைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து தமது கலாசாரத்தை அனுபவிப்பதற்கு, தமது சொந்த மதத்தைப் பின்பற்றி அனுபவிப்பதற்கு அல்லது சொந்த மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமை மறுக்கப்படுதல் ஆகாது' (ICCPR- 1966 பகுதி III இ சரத்து 27). 'தேசிய அல்லது இன, மத, மொழிசார் சிறுபான்மையினரைச் சேர்ந்த ஆட்களுக்குத் தனிப்பட்ட வகைளிலும் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் இடைஞ்சல் அல்லது வேறுவிதமாக வேறுபாடு காட்டாமலும் தமது பண்பாட்டு செயற்பாடுகளில ஈடுபடுவதற்கும் தமது மதத்தை பின்பற்றி அனுபவிப்பதற்கும் தமது சொந்த மொழியைப் செயற்படுத்துவதற்கும் உரிமை உண்டு' தேசிய அல்லது இன, மத, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய சமவாயம், 1992, உறுப்புரை 2(I).

தமிழை அரச கருமமொழியாக நடைமுறைப்படுத்துவது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகின்றது. ஒவ்வொரு நான்கு இலங்கையர்களிலும் ஒருவரது தாய்மொழித் தமிழாகும். இதில் இந்திய வம்வாவளித் தமிழர்களும் உள்வாங்கப்படுகின்றனர். 1987 இல் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தின் ஊடாக தமிழ் சிங்களத்துடன் சட்டப்படியானதொரு அரச கருமமொழியாக இணைந்துகொண்டது. இது இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் பேசுவோர்கள் ஏனைய உரிமைகளோடு ஏதேனும் அரசாங்க அலுவல்கள் அல்லது அலுவலகரோடு தங்களது சொந்த மொழியில் தொடர்பாடவும் அதேமொழியில் அவற்றுக்கான பதில் தொடர்பாடலைப் பெற்றுக் கொள்கின்ற தமிழ்மொழிக்கான அந்தஸ்தை உயர்த்தியது.

மேலும் 16 வது திருத்ததின் கீழ் 29 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் இருமொழிப் பாவனைக்கான பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருந்தது. எவ்வாறாயினும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் பேசுவோர்கள் அரசாங்கத் திணைக்களங்கள், பொலிஸ் நிலையம், நீதிமன்றம், பொதுப்போக்குவரத்து மற்றும் சுகாதாரச் சேவைகள் போன்ற பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் மற்றும் அவற்றினுள் கையாளப்படுதல் என்பதை அவதானிக்கும் போது அரச அமைப்புக்கள் அரசகரும மொழிச்சட்டதுடன் இணங்கிக் கொள்ளாமை மூலம் இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்ந்தும் பாரபட்சத்திற்கு உள்ளாகுவதோடு, சமத்துவமும் அவர்களுக்கு மறுத்தளிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பு ஏற்பாடுகள் மற்றும் அவற்றின் பிரயோகங்களுக்கு இடையில் பாரிய இடைவெளி உள்ளது. அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அரசியலமைப்பினால் வேண்டப்படும் அனைத்து மட்டங்களிலுமான ஓர் இரு மொழி நிர்வாகக் கொள்கையை நாடு முழுவதும் அமுல்படுத்துவதற்கு தவறியுள்ளமை கண்கூடு. 1956 இல் எடுக்கப்பட்ட நன்நோக்குடன் அல்லாத துரதிஷ்டமான கொள்கை 1987 இல் சீர்செய்யப்பட்டு திருப்பங்கள் ஏற்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அதனை சரிவர நடைமுறைப் படுத்தாமையினால் தோட்டப்புறப் பகுதிகளில் பாதிப்புக்கள் தொடர்கின்றன.

இரு மொழி நிர்வாகப் பகுதிகளில் உண்மையிலேயே இரு மொழிகளும் பயன்படுத்தப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றனவா என்பது பெரியதொரு கேள்வியாகும். அப்பிரிவுகளிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகம் மட்டுமே இரு மொழியில் செயற்பட வேண்டுமென்றில்லை. சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு ஏற்பாட்டிக்கிணங்க இப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள், கல்வி அலுவலகங்கள், நீர்பாசன அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள் போன்ற அனைத்து அரசாங்க அலுவலகங்களுமே சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலுமே செயற்படுதல் வேண்டும்.

நடைமுறை இதிலிருந்து பாரியளவில் வேறுபட்டு செல்வதோடு தோட்டப்புறங்களில் தமிழ் மொழிப்பேசுவோருக்கு இதுவரைத் திருப்திகரமான சேவை வழங்கத் தவறியுள்ளமை
நியாயமானதா?

(II) பெருந்தோட்டங்களில் மொழித் தொடர்பான பிரச்சினைகள் அறிமுகப் பகுதியில் குறிப்பிட்ட ஒரு பின்னணியிலிருந்து கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் பின்வரும் துறைகளில் மொழியுரிமைத் தொடர்பான பிரச்சினைகள் எவ்வாறு காணப்படுகின்றதென்பது தெளிவாக விளக்கப்படுகின்றது.

* பொது நிர்வாக நிறுவனங்கள் (மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர்
அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம், ஓய்வூதியத் திணைக்களம், பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் திணைக்களம், மின்சாரசபை, அரச வங்கிகள்)

* பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள்
* சுகாதாரம்
* போக்குவரத்து
* கல்வி

பொது நிர்வாக நிறுவனங்கள்:- அரச காரியாலயங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். குறிப்பிடத்தக்களவான பிரதேசங்களில் ஒருவரேனும் காணப்படுவதில்லை, விண்ணப்பங்கள் தமிழில் கிடைக்கப்பெறுவதில்லை, பெயர்கள் பிழையாக எழுதப்படுகின்றன. இதனால் அடிப்படை ஆவணங்களில் வெவ்வேறான பெயர்களையே இம் மக்கள் கொண்டிருப்பதோடு அடிப்படை ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதமும் ஏற்படுகின்றது, அரச ஊழியர்களுக்கும் தமிழ் பேசுவோருக்கும் இடையிலான சிறந்த தொடர்பாடல் இடம்பெறுவதில்லை, தமிழ்மொழியில் சேவைகள் கிடைக்கப் பெறாத இடங்களில் சிங்கள மொழி தெரியாத பொது மக்கள் சிங்கள மொழித்தேர்ச்சி கொண்ட மூன்றாம் நபர் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை நிரப்புதல் மற்றும் கடிதங்களை எழுதுவதுடன் உரைப்பெயர்த்து உதவக்கூடிய ஒருவருடன் காரியாலயங்களுக்கு செல்ல வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.

அன்மைக்காலங்களில் தமிழ்பேசும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டாலும் எல்லாப் பிரதேசங்களுக்கும் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உ-ம்:- அம்பகமுவ கோரளைப் பிரதேசத்தில் 86% ஆன தமிழ் பேசுவோர்கள் இருக்கின்றப் போதும் 85 % மான அரசாங்க ஊழியர்கள் சிங்களவர்களேயாவர். பதுளை மாநகரசபை அலுவலகத்தில் மொத்த உறுப்பினர்கள் 450 பேர் இருக்கின்றப் போது தமிழ் பேசுவோர் ஒருவர் மட்டுமே இருக்கின்றார்.

பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள்:- பதவிநிலைப் பெயர்பலகைகள், அறிவிப்புக்கள், அறிவுறுத்தல்கள் தமிழில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்காணப்படுகின்றது. விசாரணைகள் நடத்துதல், முறைப்பாடுகளைப் பெற்றுப்பதிவு செய்தல் போன்றவற்றுக்கு பெருந்தோட்டப் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் பேசும் உத்தியோகஸ்தர்கள் இல்லை. மொழி ரீதியான சிறுபான்மையினர் கணிசமாக வாழும் பகுதிகளில் ஒரு அவசரமான தேவையாக இருக்கும் இவ்விடயம் நடைமுறையில் மறுத்தளிக்கப்படுகின்றது.

உதாரணமாக பதுளை மாவட்டத்தில் மடுல்சீம (Madulsima) பொலிஸ் நிலையத்தில் 70-80 உத்தியோகத்தர்கள் கடமையாற்றும் அதேவேளை தமிழ் உத்தியோகத்தர்கள் இருவர் மட்டுமே (நிரோசன், தமிழோவியன்) அதுவும் ஊர்காவற் படையினராகவே கடமையாற்றுகின்றனர். வர்கள் விசாரணைகள் நடத்துதல், முறைப்பாடுகளைப் பதிவு செய்வதில் ஈடுப்படுவதில்லை.
ஆனால் பொலிஸ் நிலையத்திற்கு வரும் இப்பிரதேச மக்களின் 75 வீதத்திறகு மேற்பட்டோர் பெருந்தோட்டப்புற தமிழர்களேயாவர்.

மேலும் குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் ஒரு பெண் தமிழ் உத்தியோகத்தர்களேனும் இல்லாது இருப்பதனால் இங்குவரும் பெண்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். (மூலம் - கள ஆய்வு, நேரடி அவதானிப்பு- 20.03.2010) இது ஓர் உதாரணம் மட்டுமே இன்னும் எத்தனையோ பொலிஸ் நிலையங்களில் இத்தகைய பிரச்சினை உள்ளது. இவற்றோடு சில அதிகாரிகளின் தவறான உணர்வுகளினால் தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமிழில் பேச விரும்பாத பல சந்தர்பங்களும் உள்ளன.

நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதோடு எழுத்து மூலமான ஆவணங்கள் சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றன.

சுகாதாரத் துறை- நோயாளி பேசுகின்ற மொழியிலேயே அவருடன் தொடர்பாடுவதற்கான வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றது. அதாவது வைத்தியர் அல்லது தாதி மற்றும் நோயாளி ஆகியோருக்கு இடையிலான தொடர்புகள் விடயத்தில் பிரச்சினைகளை
எதிர்கொள்கின்றனர். மலையகத்தில் இருக்கின்ற அரசாங்க வைத்தியசாலைகளில் தமிழ் பேசும் அதிகாரிகள் போதியளவு இன்மையால் மக்கள பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். உதாரணமாக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் 450 மொத்த
உறுப்பினர்களில் 85 பேர் மட்டுமே தமிழ் பேசுவோராக இருக்கின்றனர் (ஸ்கந்தக்குமார், 2009: 72). அலுவலர்களும் சிங்களமொழிப் பேசுபவர்களாகவே இருக்கின்றார்கள். சில வைத்தியசாலைகளில் அறிவுறுத்தல் பலகைகள், பதவிநிலைப் பெயர்பலகைகள் இரு மொழிகளிலும் காணப்படுவதில்லை.

போக்குவரத்து:- அரச போக்குவரத்துச் சேவைகளில் திருப்திகரமான சேவைகள் வழங்கப்படுவதில்லை. சேருமிட பெயர் பலகைகள், அறிவிப்புக்கள், ஒலிப்பெருக்கி சாதனங்கள் மூலமான அறிவிப்புக்கள் என்பவற்றை பிரயாணிகளுக்கு தமது சொந்த மொழியில் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. அரச பஸ் வண்டி நடத்துனர் தமிழில் உரையாடக் கூடிய தேர்ச்சி இல்லாது இருக்கும் போது குறிப்பிடத்தக்களவு பாதிப்பு ஏற்படுகின்றது.

கல்வி:- கல்வித்துறையிலும் பாடசாலைத் தொடக்கம் பல்கலைக்கழகம் வரையிலும் பல பிரச்சினைகளையே எதிர்நோக்குகின்றனர். பாடசாலைக்கு அனுப்பப்படும் சுற்று நிருபங்கள் சிங்கள மொழியில் மட்டுமே அனுப்பப்படுவதால் ஆசிரியர்கள் இதனை வாசிக்க முடியாத சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற பல சேமலத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களும் விண்ணப்படிவங்களும் சிங்கள மொழியில் மாத்திரம் காணப்படுவதால் அவைப் பெருந்தோட்டங்களுக்கு சென்றடைவதில்லை. இது அம் மக்களின் அபிவிருத்திக்கு தடையாகவே உள்ளது. மேலும் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற முன்மொழிவுகள் தமிழ்மொழியில் குறிப்பிட்ட திணைக்களங்களுக்கு சமர்ப்பிக்கின்ற போது அவைத் தொடர்பாக கரிசனைக்காட்டாது தொடர்ந்து கிடப்பிலேயே போடப்படுகின்றன. மாறாக சிங்கள மொழியில் வழங்கப்படுகின்றப் போது உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

இன்னும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் போதியளவான ஆசிரியர்கள் இல்லாதிருப்பதோடு தேவைக்கு அதிகமான பெருபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தோர்கள் நியமிக்கப்படுகின்றனர். (உ-ம்:- கரண்டுபனை தமிழ் வித்தியாலய அதிபர் சிங்களமாக இருப்பதுடன் நான்கு தமிழ் ஆசிரியர்கள் மாத்திரமே கடமையில் இருக்கும் அதேவேலை நான்கு சிங்கள ஆசிரியர்கள் கடமைபுரிகின்றனர்). இவ்வாறே பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டால் அலுவலக வேலைகளை சிங்கள மொழியின் ஊடாகவே செய்யவேண்டியுள்ளதோடு, வரலாறு, உளவியல், சமூகவியல் போன்ற துறைகள்
தமிழ்மொழி மூலம் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

முடிவுரை

ஜனநாயக நாடொன்றில் ஒரு பகுதியினர் உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்க
பிரிதொருப் பகுதியினர் பாரபட்சத்திற்கு உள்ளாகுவது உசிதமானதாக அமையாதென்பதால் நல்லாட்சி, மனித உரிமை, நாட்டின் அபிவிருத்தி மற்றும் தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என அனைத்தையும் கவனத்தில் எடுத்து பெருந்தோட்டப்புற மக்களின் மொழி, வீடு மற்றும் காணி உரிமை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுப்பது சிறந்ததொரு அம்சமாக அமையும் அவ்வாறான தீர்வுகள் கிட்டுமென நம்புகின்றோம்.

மொழித் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சில ஆலோசனைகள்

* மலையக பிரதேசங்களில் காணப்படும் அரசாங்கத் திணைக்களங்களில் (மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம், ஓய்வூதியத் திணைக்களம், பிறப்பு, இறப்பு, விவாக பதிவாளர் திணைக்களம், பொலிஸ் நிலையம்....) அதிகளவான தழிழ் அதிகாரிகளை நியமித்தல் வேண்டும்.

* பெருந்தோட்டப்பகுதிகளில் காணப்படுகின்ற மொழிசம்பந்தமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான குழுவொன்றினை உருவாக்குவதோடு அதன் நடைமுறைத்தன்மையை உறுதிபடுத்தப்பட வேண்டும்.

* பொது நிர்வாகச் சேவைத் திணைக்களங்களால் வெளியிடப்படுகின்ற உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இரு மொழியிலும் அச்சிடப்படுதலும் விநியோகிக்கப்படுதலும் கட்டாயமானதாகும்.

* அரசியலமைப்புக்கான 13, 16 ஆவது சீர்த்திருத்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ்மொழி அமுலாக்கத்தினை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

* இரு மொழிக் கொள்கைக்கான அரசின் முயற்சிகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

* அரச தொழில் வாய்ப்பில் இன மற்றும் மொழிரீதியான விகிதாசாரத்திற்கு முன்னுரிமை அளித்தல்.

* அரசாங்கத் உத்தியோகஸ்தர்களில் தமிழ்மொழித் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுவதினால் தமிழ்மொழி அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை விட அதிகமான தூண்டுதல் செயற்பாடுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.

* மொழி ஒருமைப்பாட்டை வளர்க்கும் வகையில் மனப்பாங்கில் மாற்றத்தினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

* இனிவரும் காலங்களில் தெமள என்ற சொல்லுக்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லை எல்லா அரச கருமங்களிலும் உபயோகப்படுத்தப்படல் வேண்டும்.

(காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா)

1 comments :

சபா. ,  April 3, 2011 at 3:17 PM  

இது மலையகத் தமிழ் மாணவனால் வழங்கப்பட்ட சாட்சியமா? என்னவோர் அரசியல் ஞானம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com