Thursday, March 24, 2011

நக்ஸ்லைட்டுக்கள் பிரச்சினைக்கு இந்தியா தீர்வு வழங்கும் எந்த அறிகுறியும் இல்லை. அமெரிக்கா

அரசியலி்ல ஈடுபடும் நக்சலைட்டுகள் மீது தாக்குதல் நடத்துவதுவதை நிறுத்துவது, நிலச் சீர்த்திருந்தத்தை செய்து ஏழை, எளிய பழங்குடியின மக்களுக்கு நிலங்களை வழங்குவது, ஊரகப் பகுதிகளில் நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது ஆகியவற்றின் மூலம் மட்டுமே நக்சல் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பிய இரகசிய அறிக்கையில் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட் இந்தத் தீர்வைத் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழியில் சென்று நக்சல் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணும் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

டேவிட் மல்ஃபோர்ட் அனுப்பியுள்ள இந்த இரகசிய ஆவணத்தை (ஆவண எண் 47006) விக்கிலீக்ஸ் இணையத் தளத்திடம் இருந்து பெற்று தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

“ஊரகப் பகுதிகளில் தற்போது நிலவும் பழங்குடியினருக்கு எதிரான நிலவுடமையாளர்களின் நலனைக் காப்பாற்ற இந்தியாவின் அரசில் கட்சிகளும், படித்தவர்களும் நினைக்கும் வரை நக்சலைட் பிரச்சனையும், வன்முறையும் தொடரும்” என்று அந்த அறிக்கையில் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

‘இந்தியாவின் தொலைத் தூர ஊரகப் பகுதிகளில் வாழும் பட்டியல் குடிமக்களும், பழங்குடியினரும் சராசரி வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். நிலவுடமையாளர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் நக்சலைட்டுகளை நாடுவதைத் தவிர வேறு வழியற்றவர்களாக இருக்கிறார்கள். இந்திய அரசிற்கு நக்சலைட்டுகள் அச்சுறுத்தலாக முடியாது, அதே நேரத்தில் காவல் துறை நடவடிக்கைகளின் மூலம் நக்சலைட்டுகளை இந்தியாவால் ஒடுக்கிவிடவும் முடியாது. எனவே இந்த இரத்த முட்டுக்கட்டை தொடர்வதற்கான சாத்தியமே அதிகம் உள்ளது” என்று டேவிட் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

இந்தியாவின் நக்சலைட்டுகள் நேபாளத்தில் தங்களுடைய தோழர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். அவர்கள் ஆயுத வழிப் போராட்டத்தைக் கைவிட்டால் இந்தியாவிலும் நக்சலைட்டுகள் ஆயுதப் போராட்டத்தை கைவிடும் சாத்தியத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

நக்சலைட்டுகளுக்கு நகரங்களில் வாழும் படித்தவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்றும், இவர்களின் ஆதரவின்றி, அவர்கள் இந்த அளவிற்கு பரவலாக வளர்ந்திருக்க முடியாது என்றும் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

அதே ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக விவகார பொறுப்பாளரான இராபர்ட் பிளேக், “காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், பழங்குடியின மக்கள் நிலவுடமையாளர்களால் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடுமையான முடிவுகளை எடுக்க இந்திய அரசு தயங்குகிறது, அதனால்தான் பழங்குடியின மக்கள் நக்சலைட்டுகளை நாடுகின்றனர். பழங்குடியினரில் பெரும்பாலானோர் இந்திய அரசின் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் பக்கம் போவதைத் தவிர வேறு வழியற்றவர்களாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com