Thursday, March 3, 2011

எந்நேரத்திலும் லிபியாவில் மோதல் உக்கிரமாகும்: பிரிட்டன் பிரதமரை கிண்டல் செய்கிறார் கடாபி!

லிபியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாவியா மற்றும் மிஸ்ரட்டா நகரங்களில் நேற்று, கடாபி ராணுவத்துக்கும், எதிர்ப்புப் படைகளுக்கும் இடையில் பயங்கர மோதல் நடந்தது. இதில் 10 பேர் பலியாயினர். இதற்கிடையில், லிபியாவைச் சுற்றியுள்ள தனது படைத் தளங்களில், கப்பல்படை மற்றும் விமானப் படைகளை அமெரிக்கா தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் "நேட்டோ' கூட்டணி நாடுகளுடன் ராணுவ நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.லிபியாவில் அதன் தலைவர் மும்மர் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தற்போது பெரும் மோதலாக வெடித்துள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ராணுவம் பொதுமக்களோடு சேர்ந்துள்ள நிலையில், மேற்குப் பகுதி ராணுவம் மட்டும், கடாபிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.இந்த ராணுவம், கடாபியின் மகன் கமீஸ் என்பவரின் கீழ் இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன ரக ஆயுதங்கள் இதன் வசம் இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்த ராணுவம் கருதப்படுகிறது.இதுதான் தற்போது கடாபிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, டிரிபோலியை தன் வசம் பிடித்து வைத்துள்ளது. நேற்று முன்தினம், டிரிபோலியில் இருந்து 50 கி.மீ., மேற்கில் உள்ள ஜாவியா நகரை, எதிர்ப்புப் படைகள் கைப்பற்றிய நிலையில், அந்நகரை 2,000 கடாபி ராணுவ வீரர்கள் முற்றுகையிட்டனர்.
ஜாவியா நகரில் மோதல்:ஜாவியா நகர் அருகில் உள்ள அஜ்தாபியா என்ற இடத்தில், எதிர்ப்புப் படையினர் கைப்பற்றிய வெடிபொருள் கிடங்கின் மீது கடாபி ராணுவம் குண்டு வீசி அழித்தது. இந்த கிடங்கில் குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் பல்வேறு வெடிபொருட்கள் இருந்தன. குண்டு வீச்சில் கிடங்கின் பாதிப் பகுதி சேதம் அடைந்தது.
ஆனால் லிபிய பாதுகாப்பு அமைச்சகம், இந்தத் தாக்குதல் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது.

தொடர்ந்து இருதரப்புக்கும் கடும் மோதல் வெடித்தது. இதில் எதிர்ப்புப் படைகள் தீவிரமாகப் போரிட்டு கடாபி ராணுவத்தை முறியடித்தன.ஜாவியா நகரைச் சேர்ந்த ஒருவர் இந்த மோதல் பற்றிக் கூறுகையில்,"இந்தப் பகுதியின் செல்வாக்கு மிகுந்த பழங்குடியினத் தலைவர் முகமது அல் மக்துப்பிடம் பேசிய கடாபி, இன்று காலைக்குள் (நேற்று) எதிர்ப்புப் படைகள் ஜாவியாவை விட்டு போகாவிட்டால், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டியுள்ளார். நாங்கள் துணிந்து விட்டோம். அந்தப் போரைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று தெரிவித்தார்.ஜாவியா நகர் போரில், கடாபி ராணுவத்தைச் சேர்ந்த 10 பேர் பலியாயினர். ஆனால் எதிர்ப்புப் படையினரில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இதை லிபிய அரசுத் தரப்பும் உறுதிப்படுத்தியது.

மிஸ்ரட்டாவில் மோதல்:அதேபோல், மிஸ்ரட்டா நகரில் உள்ள ராணுவ விமான தளத்தை கடாபி ராணுவம் கைப்பற்றியது. ஆனால், எதிர்ப்புப் படைகளின் அதிரடி போரால் அந்த விமான தளத்தில் இருந்து கடாபி ராணுவம் பின் வாங்க வேண்டியதாகி விட்டது. விமான தளம், எதிர்ப்புப் படையினர் வசம் வந்தது.டிரிபோலி அருகிலுள்ள சப்ரத்தா நகரை கடாபி ராணுவம் கைப்பற்றியது. ஆனால் அங்கிருந்த மக்கள், போலீஸ் நிலையம் ஒன்றை தீக்கிரையாக்கி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து மக்கள் கூட்டம் போலீசாரால் கலைக்கப்பட்டது.

மக்கள் என்னை நேசிக்கின்றனர்':நேற்று முன்தினம் "ஏ.பி.சி.,' செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மும்மர் கடாபியிடம், அவர் பதவியை விட்டு விலகுவாரா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது பலமாகச் சிரித்துக் கொண்டே கூறியதாவது:லிபியாவின் அனைத்து மக்களும் என்னை நேசிக்கின்றனர்; என்னைக் காப்பதற்காக அவர்கள் தங்களையே பலி கொடுப்பர்; எனக்கு எதிராக யாரும் செயல்படவில்லை;
பதவி விலகுவதற்கு நான் ஒன்றும் மன்னரோ, அதிபரோ அல்ல. நான் இருப்பது ஒரு கவுரவமான பதவி. என்னிடம் அதிகாரம் ஒன்றும் இல்லை. பிரிட்டனில், யாரிடம் அதிகாரம் உள்ளது? ராணி எலிசபெத்திடமா? பிரதமர் டேவிட் கேமரூனிடமா?வெளிநாட்டவரால் லிபியா அரசியலைப் புரிந்து கொள்ள முடியாது. இங்கு அதிகாரம் முழுவதும் மக்களிடம் தான் உள்ளது.மேற்கத்திய நாடுகள், லிபியாவை மீண்டும் காலனி நாடாக்க விரும்புகின்றன. அதனால் தான் அவை லிபியாவைக் கைவிட்டு விட்டன. அல் குவைதாவை எதிர்ப்பதற்காக நான் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்தேன்.இப்போது எங்களை கைவிட்டு விட்ட பயங்கரவாதிகளை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்.

நான் வெளிநாடுகளில் பணம் வைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் கூறுகிறார். அப்படியானால் அவர் ஒரு ஆதாரத்தையாவது காட்டட்டுமே! நான் அவர்களின் கண்களில் விரல்களை விட்டு ஆட்டி விடுவேன்.அல் குவைதா கொடுத்த போதை மருந்துகளை உண்டதால் தான், லிபிய இளைஞர்கள் தெருவில் நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.இவ்வாறு கடாபி தெரிவித்தார்.

அவரது பேட்டி குறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.,வுக்கான அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸ்,"அவரது பேட்டி வெறும் வாய்ச் சவடால்தான். இதில் இருந்தே அவர் உண்மை நிலவரத்தை விட்டு விலகியிருக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது' என்றார்.
ஊடுருவ அமெரிக்கா தயார்:இந்நிலையில் லிபியாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமெரிக்கா தனது கப்பல் மற்றும் விமானப் படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. தேவைப்பட்டால், லிபியா மீது அமெரிக்க விமானங்கள் ரோந்து வரும்.மேலும் "நேட்டோ' கூட்டணியில் உள்ள நாடுகளுடன், லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. லிபியா மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படும் என்றும், மக்களைக் குண்டு வீசிக் கொல்லும் லிபிய ராணுவ விமானங்களை போர் விமானங்கள் மூலம் தாக்க நேரிடும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எச்சரித்துள்ளார்.

நேற்று பி.பி.சி., செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், கடாபி, நாட்டின் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தனது பிடியில் வைத்திருப்பதாகவும், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அமெரிக்காவைத் தடுக்க வெனிசுலா முயற்சி:கடாபிக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தான் அவ்வாறு செய்யப் போவதில்லை என்று வெனிசுலா அதிபர் ஹ்யூகோ சாவேஸ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில்,"நான் அவரைக் கண்டனம் செய்யப் போவதில்லை. ஆனால், இந்த சூழலை சாக்காக வைத்துக் கொண்டு, அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும், லிபியாவுக்குள் ஊடுருவ முயலும் என்று எச்சரிக்க மட்டுமே விரும்புகிறேன்' என்று கூறியுள்ளார். கடாபியுடனான அவரது நெருக்கத்துக்கு வெனிசுலா நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com