Tuesday, March 8, 2011

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுக்கும் வேண்டுகோள்.

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் தாய்மார்களான நாங்கள் மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்வது!.
காலங்கள் பல கடந்தும் கவனிப்பார் யாரும் இன்றி பயங்கரவாதம் மற்றும் அவசரகால சட்ட விதிகளின் கீழ் எவ்வித தீர்வும் இல்லாமல் எப்போது விடுதலை என்றுகூட அறியமுடியாமல் சிறைகளில் தினம் தினம் கண்ணீரும் கவலைகளுமே சொந்தமாகிப் போன நிலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோம்.

எங்களைப் போன்ற பல பெண்கள் இலங்கையில் பல சிறைச் சாலைகளிலும் கண்ணீருடன் தங்கள் எதிர்காலத்தை இழந்து அடுத்தது என்ன என தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். எம்மில் பலர் தங்கள் குழந்தைகளுடன் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிய நிலையில் வாழ்கின்றனர் இவர்களில் சிலர் கருவிலேயே குழந்தையை சுமக்கும்போது கைதுசெய்யப்பட்டவர்கள் சிறையிலேயே தங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள். பல பெண்கள் பல சிறைச்சாலைகளில் தங்கள் குழந்தைகளுடன் துன்புற்று வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இன்னும் ஒருசில பெண்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் மனநோயாளியானார்கள்.

எமது விவகாரம் தொடர்பாக பலரும் பல வாக்குறுதிகளை மாத்திரமே தருகின்றவர்களாய் உள்ளனர். கடந்த காலங்களில் அவ்வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாற்றமடைந்து விரக்தியான மனநிலையில் உள்ளோம் யாவரும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. எல்லாம் பேச்சளவிலேயே உள்ளன. நாம் எமது குழந்தைகளை சிறையில் வைத்துக்கொண்டு வேறு குற்றச்செயல்களுடன் ஈடுபட்டவர்களுடன் ஒன்றாக சிறை வைக்கப்பட்டிருப்பதனால் பிள்ளைகளின் மனநிலையும் மிகவும் பாதிக்கப்படுகின்றது. அம்மா அப்பாவை நாம் எப்போது பார்ப்போம்? அப்பா எங்கே? என என் பிள்ளைகளின் ஏக்கங்களை எல்லாம் தாங்க முடியவில்லை அவர்களுக்கு ஆரம்ப கல்வியைக் கூட வழங்க முடியவில்லை ஆரோக்கியமாக ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கூட கொடுக்கமுடியவில்லை.

சில குழந்தைகள் தங்கள் தகப்பனாரை இறுதி யுத்தத்தில் இழந்து உள்ளனர். தகப்பன் யுத்தத்தில் கை கால்களை இழந்து அங்கவீனராகவும் காணாமல் போயும் உள்ளனர். நடந்த பிரச்சினைகளுக்கு ஒரு தரப்பினரை குற்றம் கூறுபவர்கள் ஏன் எங்களை அடைத்து வைத்துள்ளார்கள் இருந்தவைகள் எல்லாம் இழந்து போயுள்ள எங்களுக்கு இனி இழப்பதற்கு எதுவும் இல்லை எம்மில் பெரும்பாலான பெண்கள் திருமணமானவர்கள் சிலருக்கு கணவரும் கூட சிறையில் உள்ளார். இருவரும் வேறு வேறு இடமாக சந்திக்கவே முடியாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல பெண்கள் திருமணமாகாமல் இளவயதிலுள்ளவர்கள் இவர்களின் நிலமைகளை எண்ணிப்பாருங்கள்.

இவ்வயதில் நாம் எமது இளமையை தொலைத்தவர்களாகவும் ஆற்றல்கள் ஆழுமைகள் எல்லாம் முளையியே கருகி விடுவதுமான வாழ்க்கையை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம். எப்போது நாம் விடுதலையாகி எம்வாழ்வில் எப்போது வசந்தம் மலரும் என்ற அங்கலாய்ப்புக்களுக்கும் ஏக்கங்களும் எம்மைச் சூழ்கின்றன. நாம் விடுதலையாகி வீடு போகையிலும் ஒரு பெண் என்ற வகையில் இச்சமூகத்தில் எமக்கு என்ன பெயர் கிடைக்குமென எண்ணிப் பாருங்கள்.

இது தவிர வாலிபம் கடந்தும் வயோதிபம் தள்ளாடும் வயதினிலும் சிலர் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். எங்களை அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்ன? குற்றத்தை எம்மீது சுமத்தி எங்களுக்கு தண்டனையைத்தர எண்ணுபவர்கள் எமக்கு வாழ்க்கையைத்தர எண்ணியதுண்டா? ஓவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பெற்றோருடன் ஓடி விளையாடி சந்தோசமாக இருக்கவேண்டிய குழந்தைகள் அந்த சந்தோசமும் இல்லாமல் ஒரு சமூகத்தின் அரவணைப்பு கூட இல்லாமல் சமூகத்தில் இருந்து புறந்தள்ளப்பட்டவர்களாக எந்தவொரு தொடர்பும் இல்லாமல் வாடும் அவர்களின் மனநிலை பாதிக்கப்படுகின்றது.
கடந்தகால யுத்தத்தில் நாம் பாதிக்கப்பட்டு எமது வாழ்க்கையை எப்படி மீளக் கட்டியெழுப்புவதென்று தெரியாமல் தவிர்த்துக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றோம் எமக்கு ஏன் இந்த வாழ்க்கை இந்த இருள்மயமான சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கு உள்நாட்டு வெளிநாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் முன்வருவார்களா? சர்வதேச மகளிர் தினத்தில் எங்களது கோரிக்கையை முன் வைக்கின்றோம்.

அரசியல் கைதிகள் குழந்தைகளுடன் உள்ள தாய்மார்
அரசியல் கைதிகள் மகளிர் பிரிவு
வெலிக்கடை
கொழும்பு

1 comments :

Anonymous ,  March 9, 2011 at 6:52 AM  

How long they can stage such dramas?

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com