Sunday, March 13, 2011

அரபுலகில் கிளர்ச்சி அந்நிய சக்திகளின் சூழ்ச்சி - இனியவன் இஸயாறுதீன் -

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தூனீஷியாவில் ஆரம்பித்த ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி அங்கே வெற்றிவாகை சூடி, எகிப்தையும் வெற்றிகொண்டு அதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடான ஈரான் வட ஆப்ரிக்க நாடான லிபியா, அரபு தீபகற்ப நாடான ஏமன், வளைகுடா நாடான பக்ரைன் ஆகியவற்றில் அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீவிரம் அடைந்துள்ளது.

பொதுவாக மக்கள், ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவார்கள். ஆனால் ஆட்சியாளரையே மாற்றவேண்டும் என்ற போராட்டம் நடத்தப்பட காரணம் இரண்டுதான் இருக்கமுடியும். ஒன்று அந்த ஆட்சியாளர் மக்களின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்தவராக இருக்கவேண்டும். அல்லது அந்த ஆட்சியாளருக்கு இருக்கும் சொற்பமான எதிர்ப்பை பயன்படுத்தி, அந்நிய சக்திகளின் தூண்டுதலில் நடக்கவேண்டும்.
அரபு நாடுகளை பொறுத்தவரையில் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருப்பதை எவரும் மறுக்க முடியாது. வேலைவாய்ய்பு குறைபாடுகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆடம்பர வாழ்க்கை எல்லா நாட்டிலும் இருப்பதைப் போல் இங்கேயும் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்காக மட்டும் தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சி என்பதை ஏற்கமுடியாத நிலையில் நடுநிலையாளர்கள் உள்ளனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக இயல்பாக ஏற்பட்ட சிறிய அளவிலான எதிர்ப்புணர்வு தூண்டப்பட்டதோ என்ற சந்தேகமும் ஏற்படாமலில்லை.

நடுநிலை சிந்தனையாளர்களின் இந்த சந்தேகப்பொறிக்கு ஒபாமாவின் கருத்து வலுவூட்டுவதாக உள்ளது. ஈரானின் அரசுக்கெதிரான போராட்டத்தை அமெரிக்கா பாராட்டியுள்ளது. ஈரான் போராட்டம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா,"மக்கள் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்வதற்கு உரிமையுடையவர்கள். எகிப்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனால் ஈரானில் மக்கள் தங்கள் குறைகளைச் சொன்னால் அரசு அவர்களைச் சுடுகிறது. எகிப்து மற்றும் ஈரானைப் பாருங்கள் என்பதுதான் மத்திய கிழக்கில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுக்கு நாங்கள் தரும் செய்தி. ஈரான் மக்கள் தங்கள் விடுதலைக்காகத் தொடர்ந்து துணிவுடன் போராடுவர் என நான் நம்புகிறேன்' என்று பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒபாமாவின் நெருங்கிய நண்பரான ஹோஸ்னி முபாரக்கை கைவிட்டதும், ஈரான் அரசுக்கெதிரான மக்களின் கிளர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்த ஒபாமாவின் கருத்தும், லிபியாவை நோக்கிய காய் நகர்த்தலும் சற்றே நெருடலை ஏற்படுத்துவதை மக்கள் அவதானிக்கிறார்கள். மேலும் எகிப்தில் தொடங்கிய கிளர்ச்சி தொடர்ந்து முஸ்லிம் நாடுகளை மட்டும் மையம் கொள்வதும் கவனிக்கத் தக்கது. முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் கிளர்ச்சிகள் உண்மையில் மக்களின் உணர்வுகளின் எழுச்சியா? அல்லது முஸ்லிம் உலகின் ஸ்திரத்தனமையைக் குலைக்க அந்நிய சக்திகளின் சதியா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

இதுபோக, ஆட்சி அமைக்கிற முறையை இஸ்லாம் பார்க்காது; ஆனால் ஆட்சி இப்படித்தான் நடக்கணும் என்று இஸ்லாம் சொல்கிறது. அதுனால மன்னராட்சியா? மக்களாட்சியா? என்பதல்ல முக்கியம். அது நல்லாட்சியா இருக்கணும்கிறதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு' என்று பேசியவர்கள் இன்று, முஸ்லிம் நாடுகளில் மன்னராட்சி ஒழிந்து இஸ்லாமிய ஆட்சி மலருமா.? என்று எழுத்தோவியம் படைக்கிறார்கள். ஏன் மன்னராட்சி ஒழிந்தால்தான் இஸ்லாமிய ஆட்சி மலருமா? மன்னராட்சியில் இஸ்லாமிய ஆட்சிமுறையை கொண்டுவர முடியாதா? நபியவர்கள் நடத்திய மன்னராட்சியில் இஸ்லாம் இல்லையா? அத்தகைய மன்னராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமிய ஆட்சி மலருமா என்று கேட்க வேண்டியது தானே! மேலும் மன்னராட்சி இல்லாத முஸ்லிம் நாடுகளில் எத்தனை நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடைமுறையில் உள்ளது..? இன்னும் சொல்லப்போனால் மன்னராட்சியில்தான் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதற்கான அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக திகழ்பவர்களில் லிபியா அதிபர் கடாபியும் ஒருவர். இவருக்கு எதிராக காய் நகர்த்த சமயம் பார்த்து காத்திருந்த அமெரிக்காவுக்கு, லிபிய மக்களின் கிளர்ச்சி அருமையான வாய்ப்பாக அமைந்தது. இதன் மூலம் கடாபிக்கு நெருக்கடியை உண்டாக்க தீர்மானித்த அமெரிக்கா, அந்த நாட்டு அரசாங்கம் மீது பொருளாதார தடையை விதித்து உள்ளதோடு, ராணுவத் தாக்குதலும் நடத்த முன்னேற்பாடுகளும் செய்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடாபி மீது விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார் ஒபாமா.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 28 அன்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமெரிக்காவின் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ''அமைதியாக போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடாபியின் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள். கடுமையான ஆயுதங்கள் மூலம் பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். எனவே கடாபி உடனடியாக பதவி விலகவேண்டும் என்று பேசியுள்ளார்.

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி அரசு நடந்து கொள்ளும் முறை தவறென்றே வைத்துக் கொள்வோம். ஆனாலும் கூட இதை சொல்லும் தார்மீக உரிமை அமெரிக்காவிற்கு உண்டா என்றால் நிச்சயமாக இல்லை.ஏனெனில், அமெரிக்காவின் நேசநாட்டுப் படைகள் ஆப்கானிலும், ஈராக்கிலும் நாச நாட்டுப் படைகளாக மாற்றி, அப்பாவிகளை கொன்று குவிக்கிறதே! அமெரிக்காவின் கள்ளக் குழந்தையான இஸ்ரேல் காஸாவை கருகிய மலராக ஆக்கியபோது இதே அமெரிக்கா கண்மூடி சயனித்ததே! அப்போதெல்லாம் அப்பாவிகள் மீது அமெரிக்காவிற்கு வராத அக்கறை, தெரியாத மனித உரிமைகள் இப்போது மட்டும் பாய்ந்து வருவதேன்?

இன்னும் சொல்லப்போனால் மனித உரிமை மீறல்களின் மறு பதிப்பாக விளங்கும் அமெரிக்காவிற்கு, ஐநாவின் மனித உரிமை கவுன்சிலில் கருத்துரையாற்ற கூட தகுதியுண்டா என்பதே கேள்விக்குரியதாகும். எனவே, ஆப்கானிலும், ஈராக்கிலும் மனித உரிமை மீறல்களை செய்துகொண்டு, மறுபுறம் மனித உரிமை பேசித்திரிவது, 'யோக்கியன் வருகிறான்; சொம்பை எடுத்து உள்ளே வை' என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாக உள்ளது.

குறிப்பு : ஐநா மனித உரிமைக் கவுன்ஸிலில் இருந்து லிபியா நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com