லிபியா மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் தடை.
பதவி விலக மறுக்கும் லிபியா தலைவர் மும்மர் கடாபி மீதான நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் விதத்தில், ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் வெளிநாடு செல்லத் தடை, சொத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் அடங்கிய இந்த அமைப்பு இந்த தடைக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. ஆயுத விற்பனைக்குத் தடை, கடாபி வெளிநாட்டுப்பயணத்துக்கு தடை, அவரது சொத்துகளை முடக்குவது உள்ளிட்டவை இந்த தடையில் அடங்கும்
லிபிய அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து 2 வாரமாக போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்களின் எழுச்சியை தனது ஆதரவு படைகள் மூலமாக ஒடுக்கி வருகிறது கடாபி அரசு. அரசின் அடக்குமுறையில் சுமார் 1000 ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்.
கடாபியின் ஆட்சிக்கு முடிவு காணும் நோக்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்காவின் தூதர்கள் லிபியாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது பற்றி சனிக்கிழமை தீவிர ஆலோசனையில் இறங்கினர். ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்மானம் மீது பொதுக்கருத்து எட்டப்பட்டு அது ஏற்கப்பட்டது.
68 வயது கடாபி மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துகளை முடக்குவது, அவர்களும் அவரது ஆட்சித்தலைவர்களும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள தடை விதிப்பது, ஆயுதத்தடை விதிப்பது, மனித குல அழிவில் ஈடுபட்டதாக கடாபி மீது ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க கோருவது உள்ளிட்டவை இந்த தீர்மானம் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் சிங் புரி இது பற்றிக் கூறுகையில், "மக்களுக்கு எதிராக ராணுவம் பயன்படுத்தப்படுவது இந்தியாவுக்கு வருத்தம் அளிக்கிறது. அதோடு, லிபியாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பு குறித்தும் இந்தியா கவலைப்படுகிறது. ஐ.சி.சி.,யில் இந்தியா உறுப்பினராக இல்லை என்றாலும், இந்த நடவடிக்கையால் லிபியாவில் வன்முறை கட்டுப்படும் என்ற பிற நாடுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டது' என்றார்.
போராட்டக்காரர்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை லிபியா உடனடியாக நிறுத்தவேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனது சொந்த மக்களையே படைகளை பயன்படுத்தி கொன்று குவிக்கும் கடாபி, ஆட்சியில் நீடிக்கத் தகுதியற்றவர் என அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கலை தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, 27 நாடுகள் அமைப்பான ஐரோப்பிய யூனியன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை வரவேற்றுள்ளது.
கடாபிக்கு எதிரான இந்த தீர்மானத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவருவது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment