Friday, February 4, 2011

எயிட்ஸ் தமிழரை, வன்னியை , யாழ்மண்ணை அழிக்குமா….? சாந்தி ரமேஷ் வவுனியன்

எங்கள் இன்றைய கனவு போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மீளவும் அவர்கள் தங்கள் வாழ்விடத்தில் வாழ ஒரு வழி. இதைத்தான் மே2009இன் பின்னர் அதிகம் சிந்திக்கின்றோம். எம்மை வந்தடைகிற செய்திகள் தொடர்புகள் யாவும் வறுமை நசுக்கும் எமது மக்களின் துயரம் நிறைந்த கதைகளையே கொண்டு வருகிறது.

ஆயினும் அண்மையில் சில பரபரப்பான செய்திகள் எம்மை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒருதரம் எரிச்சல்பட அல்லது இப்படியுமா என யோசிக்கவும் வைத்தது. போர் நடந்து முடிந்த ஊர்களில் விபச்சாரம் , பதின்மவயதினரின் பாலியல் நடத்தைப் பிறள்வு , மாணவர்கள் போதைப்போருள் பாவனை, 76பேருடன் பாலியல் உறவுகொண்ட 17வயதுப்பள்ளி மாணவியென எங்களை வந்தடைந்த செய்திகள் சற்று அதிகமாகத்தானிருந்தது.

மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் எமது ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் தொடர்புபட்டவர்களை விமர்சித்து பதின்மவயதினரைக் குற்றம் சுமத்தி கிட்டத்தட்ட ஒரு சினிமாக்கதையை திரையில் பார்த்தது போலவே வெளியிட்டிருந்தது. செய்தியின் சூடு அடங்க அவ்விடயங்களின் தொடர்ந்த தாக்கம் அது தரப்போகிற அழிவு எதிர்காலச் சந்ததியின் பாதிப்பு எதையுமே சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஊடகம் ஊடகர்கள் ஒரு இனத்தின் காவலர்கள் என்ற நிலமை போய் இனத்தின் எதிர்காலம் எப்படியும் போகட்டும் என்ற கணக்கில் பல ஊடகர்கள் பணத்துக்காக எதையும் எப்படியும் எழுதுவோம் என்ற அளவில் எழுதுவதையே அவதானிக்க முடிகிறது.

மேற்படி விடயங்களில் ஒன்றான எயிட்ஸ் உயிர்கொல்லி நோய்பற்றித் தேடியதில் பல திடுக்கிடும் உண்மைகளை அறிய முடிந்தது. இந்நோய் சார்ந்து சிந்திக்கின்ற, எம்மினம் இந்நோயால் அழிந்து போகப்போகிற அபாயம் பற்றிய பயங்கரத்தை , நாங்கள் சிந்திக்க மறந்த உண்மையை , சில சமூக அக்கறை மிக்க மருத்துவர்களை அணுகிய போது அறிய முடிந்தது.
போர் முடிவின் பின்னர் எம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரமாக எயிட்ஸ் தொற்று எங்கள் தாயகத்தையும் மிரட்டிக் கொண்டிருக்கும் உண்மையை பல தொடர்பாடல்கள் ஊடாக உணர முடிந்தது. இந்நோயிலிருந்து எம்மினத்தைக் காக்க என்ன செய்யலாம் என்ற எண்ணமே கடந்த சில வாரங்களாக தலையைக்குடையும் விடயமாக உள்ளது.

பயங்கரம் மிக்க நோய் எமது சந்ததியை நிரந்தர அழிவுக்கு இட்டுச்செல்லவுள்ள உண்மையை மக்கள் பிரதிநிதிகளான சில அரசியல்வாதிகள் வரையும் விளக்கப்பட்டும் எவரும் அக்கறையெடுக்கவில்லை. உலகெங்கும் உள்ள நோய்தானே இதில் என்ன பயம் என்கிற அசமந்தமான பதில்களைத்தான் திரும்பப்பெற முடிந்தது.

இளம் பெண்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றை அதிரடியாக வெள்ளைவேட்டி அரசியல்வாதிகள் கண்டுபிடித்தனர் என்றெல்லாம் செய்தியெழுதும் செயலாளர்களும் ஊடகங்களும் பல வெள்ளைவேட்டிகளும் விபரச்சாரத்தை ஊக்குவிக்கின்ற முகவர்களாக உள்ள உண்மையை ஏன் எழுத மறந்தன ? (இப்ப நீ மட்டுமென்ன அப்பிடியானவர்களை இனங்காட்டுகிறாயா இல்லையே என்றுதான் கேட்கப்படும்)

மக்களுடன் உறவாடும் பல வெள்ளைவேட்டி அரசியலாளர்கள் கூட விதவைகளை நாடுவதும் சலுகைகைளைக் காட்டி அவர்களை தம்மோடு உறவுகொள்ள நிர்ப்பந்திப்பது இம்சிப்பது சத்தமில்லாமல் வன்னிக்குள்ளும் யாழ்மண்ணுக்குள்ளும் நடப்பது வெளிவராத உண்மைகள். சாதாரண கிராமசேவகர் முதல் அரசியல்வாதிகள் வரை நொந்துபோன பெண்களையும் சிறுமிகளையும் அவர்கள் அறியாமல் பாலியல் தொழிலாளர்களாக்கியுள்ளார்கள்.

இப்போதைய யாழ், வன்னிப் பகுதியில் நிலவரம்:-
தனது சொந்தக்காணியை திரும்பப்பெற , காணாமல் போன கணவனைத்தேட , வறுமையைத் தாங்க முடியாத நிலமையில் வாழ்வாதார உதவியைத் தேட , குடும்பத்தில் ஆண்துணையை இழந்த பாரம் அழுத்தும் சகல சமூக அக்கிரமங்களை எதிர்கொள்ள , அல்லது குறைந்த பட்ச நிவாரணச் சலுகையைப்பெறுவதற்கே அரசியல்வாதியையும் அரச உத்தியோகத்திலுள்ள ஆண்களையும் நாட வேண்டியுள்ள நிலமையில் பெண்கள் சிறுவர்கள் இளைஞர்களின் நிலமை இருக்கிறது.

நல்லவர்களென சமூகம் உலவ அனுமதித்துள்ள வெள்ளைவேட்டிகளை அல்லது காற்சட்டைகளை நம்பி சொல்ல முடியாதளவு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பிள்ளைகள் பெண்கள் இன்னும் தமிழ் கலாசாரப்பற்றைக் கடந்து வெளியில் வர முடியாதுள்ளார்கள். ஆனால் எயிட்ஸ் எனும் கொல்லி இத்தகைய பலரை துணிச்சலுடன் தின்று கொண்டிருக்கிறது.

பரபரப்பாகப் பேசப்பட்ட 17வயது மாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாள் என எழுதிய ஊடகங்கள் அவளை முதலில் உடலுறவில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியவன் ஒரு ஆசிரியன் என்ற உண்மையை ஏன் எழுத மறந்தது ? கடவுளுக்கு அடுத்ததாய் நேசிக்கப்படுகிற ஆசிரிய சமூகம் ஏன் இத்தகையவர்களைக் கவனிக்க மறந்தது ? தன்னால் பாலியல் உறவில் ஈடுபடுத்தப்பட்ட சிறுமியை மீதி 75ஆண்களுக்கும் முகவராக இருந்து பதின்மவயதுச் சிறுமியை நிரந்தர பழியாக்கிய ஆசிரியனை யார் தண்டிப்பார்கள் ?

தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்கள் ,நெற்கபேகளில் காலம் கடத்தும் இளையோரிடம் போதைப்பொருள் பாவனை மலிந்துள்ளதை அதனை விநியோகிப்பவர்கள் யாரென அறிந்தும் பேசாமல் இருக்கிற ஆசிரிய சமூகத்தை யார் தட்டிக்கேட்பார்கள் ?
இந்த மாணவர்களை நாசம் செய்கிற முகவர்களில் நாம் நம்புகிற அரசியல் தலைகளும் உண்டென்ற உண்மையை எங்குபோய் உரைத்தாலும் யாரும் நம்பப்போவதில்லை. பல விடயங்களில் இது பட்டறிந்த உண்மை.

போலிவெள்ளை வேட்டிகளை அம்பலப்படுத்துவதில் கவனத்தைச் செலுத்தி சத்தியசோதனையில் இறங்குகிற முட்டாள்தனத்தை விடவும் , எம்மினத்தை அழிக்க உள்நுளைக்கப்பட்ட எயிட்சின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என முன் வந்துள்ள அக்கறைமிக்கவர்களுடன் கைகோர்த்துக் கொள்வதே இன்றைய அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிற நேரம், இம்முயற்சியில் இறங்கியுள்ள மருத்துவர் குழுவினருடன் இணைந்து எயிட்ஸ் கொல்லிபற்றி கல்வியறிவு ஊடகஅறிதல் குறைந்த இடங்களுக்குள்ளும் கொண்டு செல்ல என்னையும் இணைத்துக் கொள்கிறேன். இம்முயற்சியில் அனைவரையும் வரவேற்றுக் கொள்கிறோம் வாருங்கள்.

தமிழ் மருத்துவசமூகமே உங்களிடமும் ஒரு வேண்டுகோள் :-
ஒரு நோயாளியை கடவுளின் மறுபிறப்பாக காக்கும் வல்லமை மிக்கவர்கள் நீங்கள். காசுக்காக உயிர்களை விலையெடுக்கும் பலியெடுப்பை விட்டு எங்கள் இனத்தைக் காக்க முன்வாருங்கள்.

எயிட்சால் பாதிக்கப்பட்ட 17வயதுச் சிறுமியை பலருக்கு முன்னால் அவமானப்படுத்தி அந்த நோயாளிப் பெண்ணை மனரீதியாகவும் பாதிக்க வைத்த மருத்துவர் போல் நோயாளிகளை நிரந்தரமாய் மனநலப்பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள். அப் 17வயதுச்சிறுமியை ‘எயிட்ஸ் நோய் வந்த பெண் நீயா‘ என சம்பந்தப்பட்ட மருத்துவர் அழைத்து அவளை அவமரியாதைப்படுத்தி வார்த்தைகளால் வதைத்த சம்பவத்தை நேரில் கண்டு வந்து சொன்னவளின் பெயரை இங்கு தவிர்க்கிறேன். அன்றைய தினம் அந்த மருத்துவமனையில் அச்சம்பவத்தை கேட்ட பார்த்த பலர் தம்மை இனங்காட்டி தலையை இழக்க விரும்பவில்லை.

ஒருத்திக்கு எயிட்ஸ் அவளோடு இது முடிந்து போகப்போவதில்லை இன்னும் எத்தனையோ பேரை இந்நோய் கொல்லப்போகிறது. இரண்டாம் பெருங்குடித் தமிழினம் இலங்கையில் 3ம்குடி நிலமைக்கு வரப்போகிற அபாயத்தை கட்டுப்படுத்த அல்லது காப்பாற்ற வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு மருத்தவருக்கும் உள்ளது. உங்களை சாமிகளாக நம்பியே மனிதர்கள் உங்களிடம் வருகிறார்கள். அவர்களைக் காக்கும் கடவுள்கள் நீங்களே இப்படி நடந்து கொள்ளலாமா ?

தமிழர்களைக் குறிவைத்துள்ள எயிட்ஸ் இன்னும் சில வருடங்களில் சிங்களவர்களையும் அழிக்கப்போகிறது. யுத்தம் முடிந்து முகாம்களிலும் ஊர்களிலும் நடமாடும் இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலர் எயிட்சை வாங்கிக் காவத்தொடங்கிவிட்டார்கள். அவர்களாலும் எமது அறியாமையினாலும் லட்சக்கணக்கில் அழிந்து ஒரு சந்ததியின் வெற்றிடம் நிறைக்கப்படாத எங்கள் இனம் எயிட்சால் அழிந்து போக வேண்டுமா ?

இனி என்ன செய்யலாம்:-
அதிகம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வாய்ப்புகளும் நிறைந்து கிடக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரும் நமது ஊர்களுக்கு ஊரில் உள்ள கல்விமான்களுக்கு மாணவர்களுக்கு பெண்களுக்கு எயிட்ஸ் உயிர்கொல்லி பற்றி தெரிவிப்போம். அது அன்றாட தொலைபேசி உரையாடல் ஊடாக அல்லது பேஸ்புக் போன்ற சமூகத்தளங்கள் ஊடாக , கிடைக்கிற சகல வழிகளாலும் தெரிவிப்போம்.

எப்போதாவது ஒரு கருத்தரங்கு அல்லது எயிட்ஸ் தினத்தில் அதுபற்றி நினைக்காமல் ஒவ்வொரு நாளும் எங்கள் இனத்திற்கு நினைவுபடுத்திக் கொண்டிருப்போம். யுத்தத்தால் அழிந்த சந்ததியின் மிச்சம் எயிட்சால் அழிந்து போகப்போகிற அபாயத்தை அறிவிப்போம். அழிவு தமிழரை இப்போது எயிட்ஸ் வடிவில் கொன்று போடும் உண்மையை உணர வைப்போம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாங்கள் அல்லது எங்கள் பிள்ளைகள் தாயகத்துக்குத் திரும்பி அந்த மண்ணை ஆழப்போகிறவர்கள் அல்ல. அந்த மண்ணில் வாழ்கின்றவர்களே அம்மண்ணின் அனைத்தையும் தாங்கி ஆழப்போகிறவர்கள். அவர்களது சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எங்களுக்கானது.

தனது பிள்ளைகளுக்காக விபச்சாரியான அம்மாக்களை , தனது வாழ்வுக்கான பாதுகாப்பாக விபச்சாரியாக்கப்பட்ட தங்கைகளை , தனது உயிரைக் காத்துக் கொள்ள தடுப்பரண்களில் ஓரினச்சேர்க்கையில் சகிப்போடு சாகும் தம்பிகளை , பதின்ம வயதுக் குணங்களுக்குரிய மிடுக்கோடு தனது எதிர்காலம் அழிக்கப்படுவதை உணராத எங்கள் இளையோரை எயிட்சிலிருந்து காப்பாற்றுவோம்.

பிற்குறிப்பு :- எயிட்ஸ் பற்றி தமிழ் யாழ் வன்னி மருத்துவ சமூகத்திடமிருந்து ஏதாவது குறிப்புகள் செய்திகள் உள்ளனவா என கூகிழில் தேடியதில் கிடைத்தது கீழ் வரும் இணைப்பு. http://sivaajihealthwings.blogspot.com பல விடயங்கள் எயிட்ஸ் பற்றி சமகாலத்தில் சிந்திக்கின்ற ஒரு மருத்துவரின் எழுத்துக்கள் மேற்படி இணைப்பில் உள்ளதை அறிய முடிந்தது. இன்னும் மனிதம் சாகவில்லை என்பதற்கு அடையாளமாக இத்தகைய மருத்துவர்களும் உள்ளார்கள் என்பதை இந்தத்தளம் சொல்கிறது. சென்று பாருங்கள். எயிட்ஸ் கொல்லியை இப்போதே உணர்விப்போம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com