சரத் பொன்சேகாவின் சிறைப் படம் வெளியானதால் தடுமாறும் இலங்கை அரசு.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வரும் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறை உடையுடன் காணப்படும் படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருப்பது அரசாங்கத்தைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் காரணமாக இந்தப் படங்கள் வெளியானது குறித்து உயர் மட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலங்கையின் சுதந்திர தினமான நேற்று முன்தினம் வெலிக்கடைச் சிறையில் இருந்த பெருந்தொகையான கைதிகள் பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இந்த நிகழவை படம்பிடிப்பதற்காக சிறைக்குள் ஊடகவிலாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு அரைக் காற்சட்டை, வெண்ணிற மேற்சட்டையுடன் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்கள் முன் தோன்றினார். அவரைப் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் படம்பிடித்து வெளியிட்டனர். இந்தப் படங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகியதால் அரசாங்கம் கடுப்பாகியுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் நெருக்கும் நேரத்தில்- சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரும் போராட்டங்களை எதிரணியினர் நடத்தும் நேரத்தில் இந்தப் படங்கள் வெளியாகியிருப்பது அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சிறைச்சாலை விதிமுறைகளை மீறி கைதி ஒருவரைப் படம் பிடிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் மூலம் அதிகாரிகள் பலர் தண்டனைக்குள்ளாக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.
0 comments :
Post a Comment