Tuesday, February 22, 2011

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் 65 பேர் பலி; நூற்றுக்கணக்கில் காயம்.

நியூசிலாந்து நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 65 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர். ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி உள்ளதால் சாவு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

நியூலாந்தின் தென்பகுதியில் உள்ள கிறைஸ்ட்சர்ச் நகரம் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு பல அடுக்கு மாடிக் கட்டடங்கள் அப்பளம் போல் நொறுக்கிக் கிடக்கின்றன. திரும்பிய திசை எல்லாம் மரண ஓலமும் இடிபாடுகளுமாக அந்த நகரமே உருக்குலைந்து காணப்படுகிறது.

தங்களது உறவுகளையும் உடமைகளையும் இழந்த அதிர்ச்சியில் மக்கள் பலர் சாலைகளில் கண்ணீரும் கம்பலையுமாக அலைந்து திரிந்தது கொண்டிருந்தனர்.

"இது நியூசிலாந்தின் கறுப்பு தினம்; மிகவும் மோசமான நாள்' என்று நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் ஜான் லீ, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பகல் 12.51 மணிக்கு உணரப்பட்டது. இது 6.3 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் ஒரு நிமிஷம் வரை நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கிறைஸ்ட்சர்ச் நகரை மையம் கொண்டிருந்த இந்த நடுக்கத்தின் தாக்கம் பல மைல் தொலைவுக்கு விரிந்திருந்தது. பூமிக்குள் 4 கி.மீ. ஆழத்துக்கு இதன் வீச்சு இருந்தது. தலைநகர் வெலிங்டனிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.

மதிய உணவு இடைவேளை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பலர் பீதியில் அலறி அடித்துக்கொண்டு கட்டடங்களில் இருந்து வெளியேறினர். ஆனால் அதற்குள் பல கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல் பொல பொலவென்று இடிந்து விழுந்தன.

இடுபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின்போது சாலையில் நின்றிருந்த 2 பஸ்கள் மீது அருகில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இரு பஸ்களும் நசுங்கி அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். 6 மாடி டிவி கட்டடம் சில நிமிஷங்களில் இடிந்து தரைமட்டமானது.

ரத்தம் சொட்ட சொட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள தங்கள் உறவுகளை மீட்க பலர் முயன்றுகொண்டிருந்ததும் தங்கள் உறவினர்களையும் நண்பர்களை பார்த்து ஆரத்தழுவிக் கொண்டதும் பார்ப்பவரின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

கடந்த செப்டம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 பதிவாகி இருந்தது. அப்போது பெரிய சேதம் ஏற்படவில்லை. ஆனால் பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டு பலவீனமடைந்திருந்தன. இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

200-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கிறைஸ்ட்சர்ச் நகர மேயர் பாப் பார்க்கர் தெரிவித்தார். அந்த நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்புப்பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கிறைஸ்ட்சர்ச் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com