Tuesday, February 22, 2011

லிபிய வீதிகளில் பிணக் குவியல்: ராணுவம் அட்டூழியம்.

லிபியாவில் அதிபராகக் கடந்த 42ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் சர்வாதிகாரி மம்மர் கடாஃபி (68), எங்கே ஆட்சி தன் கையைவிட்டுப் போய்விடுமோ என்ற பீதியில் வரலாறு காணாத வகையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்.

ராணுவ வீரர்கள் வீதிகளில் ரோந்துவந்து கண்ணில் பட்டவர்களைச் சுடுவதுடன் விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் பறந்துவந்து எதிர்ப்பாளர்களைத் துப்பாக்கிகளால் சுட்டுத்தள்ளுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினரை ஹெலிகாப்டர்களில் ஏற்றிவந்து ஆங்காங்கே இறக்கிவிட்டு ராணுவச் சீருடை அல்லாமல் வேறு யார் கண்ணில்பட்டாலும் சுட்டுத்தள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

8-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் மக்கள் எதிர்ப்பு தொடர்ந்தது. டுனீசியா, எகிப்து போல தங்களுடைய ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சும் கடாஃபியும் அவருடைய மகன் சயீஃப் அல் இஸ்லாம் கடாஃபியும் மூர்க்கத்தனமாக மக்களை ஒடுக்க முற்பட்டுள்ளனர்.

நான் பதவியைவிட்டு ஓடிவிட்டேன், திரிபோலியில் இல்லை வெனிசூலாவுக்கு தப்பி ஓடிவிட்டேன் என்று அந்த நாய்கள் (வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள்) கூறுவதையெல்லாம் நம்பாதீர்கள். நான் திரிபோலியில்தான் உங்களுடன்தான் இருக்கிறேன். அதை நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காகத்தான் இதோ வெளியில் இருக்கிறேன் என்று மழை பெய்துகொண்டிருக்கும்போது குடையுடன் வெளியே வந்து அரசு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார் மம்மர் கடாஃபி. ஆனால் அந்தப் பேட்டி ஒரு நிமிஷ நேரத்துக்கும் மேல் நீடிக்கவில்லை.

நகர வீதிகளில் ராணுவத்தைத் தவிர மக்கள் யாரும் நடமாட முடியாத வகையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்திருந்தாலும் யார், எப்படி உள்ளே வந்து தாக்குவார்களோ என்ற அச்சத்தில் பேட்டியை அவசர கதியில் முடித்துக்கொண்டார் கடாஃபி.

லிபியாவில் இருப்பவர்கள் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்குத் தகவல் தெரிவிக்கக்கூடாது, அவர்களிடமிருந்து உதவி எதையும் கோரி பெறக்கூடாது என்பதற்காக தொலைபேசி இணைப்புகள், செல்போன் தொடர்புகள், இணையதளத் தொடர்புகள் என்று அனைத்தையும் துண்டித்துவிட்டது அரசு.

நெடுஞ்சாலைகளில் போலீஸ், ராணுவ வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. அறிவிக்கப்படாத ஊரடங்கு போல பல நகரங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

இந்த அடக்குமுறைக்கெல்லாம் அஞ்சாத சிங்கங்களான இளைஞர்கள் மட்டும் அரசு அலுவலகங்களுக்கும் கடாஃபியின் ஆதரவாளர்களின் தொழில், வர்த்தக கேந்திரங்களுக்கும் அலுவலகங்களுக்கும் தீ வைத்து ஆங்காங்கே சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கடாபியை எதிர்த்து கோஷமிடுகின்றனர்.

டுனீசியா, எகிப்தைப் போலவே அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துவிட்டதாலும் அரசு அவர்களை அடக்க மூர்க்கத்தனமாக பலத்தைப் பிரயோகிப்பதாலும் தூதர்கள் மனம் வெதும்பி தங்களுடைய பதவிகளை ஒவ்வொருவராக ராஜிநாமா செய்துவருகின்றனர்.

தான் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும், எல்லா சுகங்களையும் தன்னுடைய குடும்பமே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கும் கடாஃபி, மக்களில் சிலரை வெளிநாட்டுச் சக்திகள் குழப்பி தவறாக வழிகாட்டிக் கொண்டிருப்பதாகச் சாடுகிறார். ஒரு சில இளைஞர்கள் மட்டும் வெளிநாட்டு கைக்கூலிகளாகச் செயல்படுகின்றனர் என்றும் பெரும்பாலான மக்கள் தன்னுடைய தலைமையைத்தான் ஏற்றுக்கொண்டு விசுவாசமாக இருக்கின்றனர் என்றும் கூறி வருகிறார்.

மேற்கத்திய நாடுகளின் தவறான வழிகாட்டலால் அவர்களுடைய தூண்டுதலால் லிபியாவின் நலனுக்கு ஊறு செய்யும் செயலில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களுடைய தவறுகளால் நாடு சிதறுண்டுபோய்விடும் என்பதற்காகவே அவர்களைத் தண்டிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

லிபிய நாட்டு மக்களின் கலாசாரத்துக்கும் மொழிக்கும் இனத்துக்கும் தான்தான் பாதுகாப்பு என்று கூறியிருக்கும் கடாஃபி மேற்கத்திய நாடுகளில் நிலவும் நுகர்வுக் கலாசாரத்தின் பாதிப்பால் மக்கள் சொந்த நாட்டிலேயே கலவரத்தில் ஈடுபட்டு சேதம் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

அரபு மக்களின் ஒற்றுமையைப் பேணி பாதுகாக்கும் தன்னுடைய தலைமை நாட்டுக்கு அவசியம் தேவை என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

மக்களை அடக்க அளவுக்கதிகமாக பலப்பிரயோகம் நடந்திருப்பதைக் கண்டித்து லிபிய நாட்டின் நீதித் துறை அமைச்சர் முஸ்தபா அப்துல் ஜலீல் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக அல் ஜஸீரா தொலைக்காட்சி தெரிவிக்கிறது.

லிபிய ராணுவம் விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் இருந்தபடியே சுடுவதுடன் சிறிய வெடிகுண்டுகளையும் மக்கள் மீது வீசிக் கொல்வது குறித்து ஐக்கிய நாடுகள் சபை ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் வெளியிட்டிருக்கிறது. நிராயுதபாணிகளான மக்களை எந்தக் காரணமும் இன்றி எந்த ஓர் அரசும் கொல்லக்கூடாது, ஆர்ப்பாட்டம் செய்யவும் எதிர்ப்பு தெரிவிக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு என்ற சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிராக லிபிய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை உலக சமுதாயம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் லிபிய அரசு திருந்தி தனது அடக்குமுறையைக் கைவிடாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு எச்சரித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கடாஃபியிடம் தொலைபேசியில் திங்கள்கிழமை 40 நிமிஷம் பேசினார். தனக்குக் கிடைத்த தகவல்களைக் கூறி, அடக்குமுறையைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன் பிறகு தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் பேசிய கடாஃபியின் மகன் சயீஃப் அல் இஸ்லாம், அரசை எதிர்க்கும் கடைசி ஆண், பெண் இருக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் (சுட்டுத் தள்ளுவோம்) என்று எச்சரித்தார்.

லிபிய வரலாற்றில் முக்கியமான கட்டம் நெருங்கிவிட்டது. கடாஃபியின் கடைசிக் காலம் நெருங்கிவிட்டது. அடக்குமுறை ஆட்சிக்கு முடிவுகாலம் வந்துவிட்டது என்பதையே இந்த அடக்குமுறைகள் காட்டுகின்றன, இதற்கெல்லாம் நாங்கள் பயந்துவிடமாட்டோம் என்று மக்களில் ஒருவர் கெய்ரோ நகர பத்திரிகைக்கு அளித்த ரகசிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

1 comments :

Anonymous ,  February 23, 2011 at 6:59 AM  

It is like Tamil people and LTTE dictatorship in wanni last days

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com