Friday, January 7, 2011

ஐ.நா. பாதுகாப்பு குழு‌வி‌ல் இட‌ம் பெற இந்தியா அவசரப்படக் கூடாது: சீனா

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இடம்பெற இந்தியா அவசரப்படக்கூடாது என்று சீனா கருதுகிறது.
ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவை சீரமைத்து விரிவாக்க வேண்டும் என இந்தியா,ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மாற்றங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் இவை கூறிவருகின்றன. ஆனால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவை விரிவாக்குவதில் சீனாவுக்கு எந்த அவசரமும் இருப்பதாகத் தெரியவில்லை.

சீன அரசின் கருத்தை வெளியிடும் அதிகாரபூர்வமான நாளிதழ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐ.நா.வில் சீர்திருத்தங்கள் ஒரே இரவில் ஏற்பட்டு விடாது. அவை சில ஆண்டுகளிலும் ஏற்படாது. செயற்கையாக ஒரு காலக்கெடுவை ஏற்படுத்திக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. ஐ.நா.வில் சிக்கல் நிறைந்த விஷயங்களைத் தீர்க்க நிறைய கால அவகாசமும் பொறுமையும் தேவை எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்தியாவைக் குறிப்பிடாமல் 'சிறிய, நடுத்தர அளவு நாடுகளுக்கு' பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த நாளிதழ் கருத்து தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பாதுகாப்புக் குழுவில் இடமளிக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. ஆனால் அவசரப்படுவது சிறுபிள்ளைத்தனம் என்றும் தெரிவித்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ர‌ஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com