Friday, November 12, 2010

மியான்மரில் தொடர்கிறது மோதல்: 20,000 பேர் தாய்லாந்தில் தஞ்சம்

மியான்மரில் ராணுவ வீரர்களுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதலுக்குப் பயந்து மியான்மரில் இருப்பிடத்தை காலி செய்து கொண்டு 20,000 பேர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியில் இந்த மோதல் நடக்கிறது. ராணுவ வீரர்களும், போராட்டக் குழுவினரும் சரிநிகராக சண்டையிட்டு வருகின்றனர். இதில் இரு தரப்பினரும் துப்பாக்கி உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.

எல்லைப் பகுதியில் ராக்கெட்டுகள் சீறி வருவதாலும், துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து வருவதாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அச்சம் அவர்களை தொற்றிக்கொண்டுள்ளது.

இதனால் வேறுவழியின்றி சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதில் பெரும்பாலோர் பெண்கள், சிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் அவர்கள் தாய்லாந்துக்குள் வருவதைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது என்று தாய்லாந்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் இருந்து அகதிகளாக வருபவர்களுக்கு தாய்லாந்து புகலிடம் அளித்து வருகிறது. எல்லைப் பகுதியை ஒட்டி அவர்களுக்கு தாற்காலிக முகாம்களை அமைத்துக் கொடுத்துள்ளது.

எல்லைப் பகுதியில் நிலவும் சூழலை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தாய்லாந்து அரசு செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

புகலிடம் தேடிவரும் மியான்மர் மக்களுக்கு உதவும் பணியை மனிதாபிமான அமைப்புகளுடன் சேர்ந்து தாய்லாந்து மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மியான்மர் மக்கள் சோகம்: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மியான்மரில் பொதுத் தேர்தல் நடந்ததால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தல் விவகாரத்தில் ராணுவம் நடந்து கொண்டவிதத்தால் மக்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

மியான்மரில் ஜனநாயகம் மலரும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. ராணுவ ஆட்சி மறைமுகமாகத் தொடரப்போவது உறுதியாகிவிட்டது என்று நினைத்து அவர்கள் மனத்தை தேற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com