Monday, November 8, 2010

வன்னி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி : வடக்கின் 120 கல்லூரிகள் தரமுயர்வு.

வன்னிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் சகல பாடத்துறைகள் சார்ந்த ஆசிரியர்களுக்கும் சம்பந்தப்பட்ட கல்வி வலயங்களால் கணினிப் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிநெறிக்கான கருத்தரங்கும் செயற்பட்டறையும் தொடர்ச்சியான வதிவிடப் பயிற்சியாக பதினெட்டு நாட்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.

துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த ஒரு தொகுதி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சிநெறி கடந்த 3ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. சுழற்சிமுறையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்குபற்றும் ஆசிரியர்ககளுக்கு 3 நாள் விடுமுறை வழங்கப்படுகிறது.

ஆசிரியர்களின் சுயவாண்மை விருத்திக்கும் வகுப்பறைக் கற்பித்தலுக்கும் இது மிகவும் உறுதுணை வாய்ந்த செயற்திட்டமெனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட் டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசாலைகளே இந்த திட்டத்தின் கீழ் தர முயர்த்தப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தரமுயர்த்தப்படவுள்ள பாடசாலைகளின் பெயர்களை பட்டியல் இடுவது தொடர்பாக ஆராயும் இறுதி கலந்துரையாடல் நாளை காலை இடம்பெறவுள்ளது.

ஆளுநரின் தலைமையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கலந்து ரையாடலில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் பி. விக்ணேஷ்வரன், பாடசாலை அதிபர்கள், உட்பட உயர் அதிகாரிகளும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com