Thursday, October 14, 2010

இனப்பிரச்சினை தொடர்பில் மன்மோகன் - மஹிந்த பேச்சுவார்த்தையாம். வை.கோ கைது.

டெல்லியில் இன்று நடைபெறும் காமன்வெல்த் போட்டி நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய அரசின் அழைப்பை ஏற்று இன்று காலை 10.45 மணியளவில் இந்தியா புறப்பட்டு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இனப்பிரச்சினை தொடர்பாக விவாதிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சந்திப்பின்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இதுவரை மீள்குடியமர்த்தப்படாமலுள்ள மக்கள் மற்றும் நிரந்தர அரசியல் தீர்வு விடயமாக பேசப்படுமென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களுடன் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய வைகோ இன்று கைது செய்யப்பட்டார். கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ம.தி.மு.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதையும் மீறி ம.தி.மு.க., இந்து மக்கள் கட்சி தொண்டர்கள் நூற்றுக் கணக்கானோர் கருப்பு கொடியுடன் அங்கு திரண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்தனர்.

மேலும் 4 உருவ பொம்மைகளை எரிக்க முயன்ற போது போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தொண்டர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, அர்ஜூன் சம்பத் உள்பட 143 தொண்டர்களை கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com