Wednesday, October 13, 2010

தாய்லாந்தின் குற்றச்சாட்டுகளை மறுத்தது கம்போடியா

பேங்காக் தாய்லாந்து அரசாங் கத்தை எதிர்க்கும் சிவப்புச் சட்டை இயக்கத்தினர், தாய்லாந்து பிரதமர் உள்ளிட்ட உயர் தாய்லாந்து அதிகாரிகளைக் கொலை செய்வதற்குக் கம்போடியாவில் பயிற்சி அளிக்கப்பட்டதாகத் தாய்லாந்தில் கூறப்படும் குற்றச் சாட்டுகளுக்கு கம்போடியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் சென்ற வாரம் 11 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர் களையும் சேர்த்து மொத்தம் 39 பேருக்கு “அண்டை நாட்டில்” சித்தாந்த போதனையும் சண்டைப் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக மூத்த தாய்லாந்து பாதுகாப்பு அதிகாரி திங்கட்கிழமை குற்றம் சாட்டினார்.

சிறப்பு விசாரணைப் பிரிவின் மூத்த விசாரணை அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் பாயாவ் தொங்சென் செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டபோது, அண்டை நாட்டின் பெயரைக் குறிப் பிடவில்லை. ஆனால், பயிற்சித் தளத்தை அடைய ஆடவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படும் பாதையை அவர் வர்ணித்தார். அவரது வர்ணனை கம்போடிய எல்லைக் கடப்பைச் சுட்டிக்காட்டியது.

இந்தக் குற்றச்சாட்டை கம்போடியா மறுக்கிறது.
“நாங்கள் எதற்காக இதைச் செய்யவேண்டும்? இவர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் கம்போடி யாவுக்கு எந்தவித நன்மையும் ஏற்படாது” என்று கம்போடிய அரசாங்கப் பேச்சாளர் கியூ கன்ஹரித் செவ்வாய்க்கிழமை கூறினார்.

“இந்தக் குற்றச்சாட்டைக் கம்போடியா வன்மையாக நிராகரிக்கிறது” என்றும் அவர் சொன்னார். கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உறவில் பல ஆண்டுகளாகவே பூசல் நிலவுகிறது. எல்லைத் தகராறு இதற்கு முக்கிய காரணம். கம்போடிய எல்லையில் உள்ள ஒரு பழங்காலக் கோயில் தொடர்பில் கம்போடியாவுக்கும் தாய்லாந் துக்கும் இடையில் பூசல் நீடிக்கிறது. சென்ற ஆண்டு இந்தப் பூசல் இன்னும் மோசமடைந்தது.

இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டன. அத்துடன் கம்போடியப் பிரதமர் ஹூன் சென் தக்சினை பொருளியல் ஆலோசகராக நியமித்தது முதல் இரு நாட்டு உறவில் விரிசல் அதிகரித்தது. தாய்லாந்தின் குற்றச்சாட்டால், ஏற்கனவே குழப்பத் திலிருக்கும் அரசியல் போராட்டம் மேலும் பாதிப்படையக்கூடும்.

முன்னாள் தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ரா 2006ம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில் வெளியாக்கப்பட்டது முதல் தாய்லாந்தில் அரசியல் குழப்பநிலை நிலவி வருகிறது. தாய்லாந்து அரசியலில் ராணுவம் தலையிடுவதற்கு சிவப்பு சட்டையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசாங் கத்திற்கு எதிராக அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பேங்காக்கில் பாதுகாப்பு வலுப் படுத்தப்பட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com