Tuesday, October 5, 2010

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் ஜென்ஸ் சாட்சியம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது திட்டமிட்டவகையில் புனையப்பட்டதாக கூறப்படும் வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேற்படி சர்ச்சைக்குரிய விடயத்தினை வெளியிட்ட ஊடகவியலாளரான பிரெட்றிக்கா ஜென்ஸ் நேற்று மூவர் கொண்ட சட்டத்தரணிகள் குழுமம் முன் சாட்சியமளித்துள்ளார்.

அவரது சாட்சியம் அரசதரப்பு சட்டத்தரணியினால் நெறிப்படுத்தப்பட்டது. அதன் முழுவிபரம் வருமாறு.

அரச சட்டத்தரணி : உங்களுடைய தொழில்

முதலாவது சாட்சி : ஊடகம்

அரச சட்டத்தரணி : தொழிலை எங்கு ஆரம்பித்தீர்கள்?

முதலாவது சாட்சி : சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் 1992 ஆம் ஆண்டு சுயாதீன நிருபராக ஊடகத்துறைக்குள் நுழைந்தேன் 1995 ஆம் ஆண்டு வரை அறிக்கையிட்டேன், நேர்காணலும் செய்தேன்.

அரச சட்டத்தரணி : சண்டே லீடருக்கு எவ்வாறு சென்றீர்கள்?

முதலாவது சாட்சி : லசந்த விக்ரமதுங்க (முன்னாள் சண்டே லீடர் பிரதம ஆசியர்) என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்தார். அவர் எனது நண்பரும் கூட.

அரச சட்டத்தரணி : சண்டே லீடர் பத்திரிகையில் நுழைந்த பின்னர்?

முதலாவது சாட்சி : முதல் முறையாக யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். அன்டன் பாலசிங்கத்தை நேர்காணல் செய்வதற்கு (புலிகளின் மதியுரைஞர்)

அரச சட்டத்தரணி : ஏன்? அவரை நேர்காணல் செய்தீர்கள்?

முதலாவது சாட்சி : லசந்தவிற்கு அது தேவையாக இருந்தது. அவருடைய நேர்காணலுடன் எனது ஊடகப்பணியும் ஆரம்பமானது.

அரச சட்டத்தரணி; எத்தனை வருடங்கள் கடமையாற்றினீர்கள்?

முதலாவது சாட்சி : இரண்டு வருடங்கள் கடமையாற்றினேன். பின்னர் முழுநேர ஊடகவியலாளராக இணைந்து கொண்டேன். பின்னர் 1996 ஆம் ஆண்டு தொலைபேசியில் தொடர்பு கொண்ட லசந்த முழு நேர பத்திரிகையாளராக இணைந்து கொள்ளுமாறு ( சண்டே லீடரில்) கேட்டுக் கொண்டார். நானும் இணைந்து கொண்டேன்.

அரச சட்டத்தரணி : லசந்த என்றால் யார்?

முதலாவது சாட்சி : சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசியர் லசந்த விக்ரமதுங்க( அமரர்) .

அரச சட்டத்தரணி : 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பத்திரிகையில் நீங்கள் என்ன பதவியை வகித்தீர்கள்? உங்களுடைய பொறுப்பு உங்களுக்கு முன்னர் அந்த பதவியை வகித்தவர் யார்?

முதலாவது சாட்சி : பிரதம ஆசியராக. ஒவ்வொரு வாரமும் பத்திரிகையை வெளிக்கொணரவேண்டியது எனது பொறுப்பாகும். எனக்கு முன்னர் அந்தப் பதவியை லசந்த விக்கிரமதுங்க வகித்தார்.

அரச சட்டத்தரணி: எதிரியை (சரத் பொன்சேகாவை) முதன் முதலில் எங்கு சந்தித்தீர்கள்? இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு பிரதானியாக அவர் பதவி வகித்தமை உங்களுக்குத் தெரியுமா?

முதலாவது சாட்சி : யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த வேளையில் கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்தார். அப்போதே அவரை முதன் முதலில் சந்தித்தேன். ஒரு பத்திரிகையாளராகவே அவரை நான் சந்தித்தேன். அவர் அந்த பதவிகளை வகித்தமை எனக்குத் தெரியும்.

அரச சட்டத்தரணி : நீங்கள் பிரதம ஆசிரியாக இருந்த போது தானே 2009 டிசம்பர் 13 ஆம் திகதி பத்திரிகை வெளியானது. அன்றைய தலைப்பு செய்தியின் கீழ் இருக்கும் செய்தியையும் நீங்கள் தானே எழுதினீர்கள்?

முதலாவது சாட்சி :ஆம்

அரச சட்டத்தரணி : அந்த பிரதான செய்தியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயம் வேறு தரப்பினரால் முன்னரே தெரிவிக்கப்பட்ட ஒன்றா?

முதலாவது சாட்சி : சில விடயங்கள் முன்னரே தெரிவிக்கப்பட்டும் இருக்கின்றன.
உதாரணமாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரத்ன கூறிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

அரச சட்டத்தரணி : எந்தவொரு நபராவது உங்களுக்கு நேர்காணலில் வழங்கிய விடயமா? செய்தியின் தலைப்பில் இருக்கின்றது? அதில் கோட்டா என்று குறிப்பிட்டிருப்பது யாரை?

முதலாவது சாட்சி : ஆம் , முன்னாள் இராணுவ தளபதியான சரத்பொன்சேகாவினால் வழங்கப்பட்ட நேர்காணலின் பிரகாரமே தலைப்பு செய்தி தயாரிக்கப்பட்டது. கோட்டா என்பது பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரான கோட்டபாய ராஜபக்ஷவாகும்.

அரச சட்டத்தரணி : சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக இருந்தமையை நீங்கள் அறிவீர்களா? 2010 ஜனவரி 03 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான அவளுடைய கதை எனும் தலைப்பிலான கட்டுரையை நீங்களா எழுதினீர்கள்?

முதலாவது சாட்சி : ஆம், வேட்பாளர் என்பதை நான் அறிவேன்? அந்த கட்டுரையையும் நானே எழுதினேன்.

அரச சட்டத்தரணி : சரத்பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதற்கு உங்கள் நிர்வாகம் தீர்மானம் எடுத்தது உண்மையா? எப்போது அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது?

முதலாவது சாட்சி : நிர்வாகம் தீர்மானம் எடுத்தமை எனக்குத் தெரியும்? எனக்கு ஞாபகம் இருக்கின்ற வகையில் 2009 நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத ஆரம்பத்திலாகும்.

அரச சட்டத்தரணி : எதிரி ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது அவருடன் நேரடியாக கதைத்து நேர்காணலுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொண்டீர்களா? இன்றேல் எவ்வாறு?

முதலாவது சாட்சி : அவரின் தனிப்பட்ட உதவியாருடன் பேசி நேரத்தை ஒதுக்கி கொண்டேன். கொழும்பிலுள்ள அவருடைய தேர்தல் காரியாலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டனர். நேர்காணல் வழங்குவதற்கு 9 ஆம் திகதியே நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. எனினும் லால் விக்ரமதுங்கவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் முதல் நாளான 8 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொண்டார் .

அரச சட்டத்தரணி : 9 ஆம் திகதி நேர்காணலை கோரியிருந்தீர்கள். ஆனால் 8 ஆம் திகதி வருகை தருமாறு அழைத்தனர். அப்படியாயின் நீங்கள் முதல்நாளே ஏன் சென்றீர்கள்?

முதலாவது சாட்சி : எமது பத்திரிகை நிர்வாகம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரமே நான், துசித்த குமார, ரத்பீஸ் விஜயவர்தன லால் விக்ரமதுங்க ஆகிய நால்வரும் சென் றிருந்தோம். சரத்பொன்சேகாவை தனியாக சந்தித்து பேசுவதற்கே லால் விக்ரமதுங்க வருகை தந்திருந்தார்.

அரச சட்டத்தரணி : எவ்வாறான நேர்காணலை செய்வதற்குச் சென்றீர்கள்? எத்தனை பேர் சென்றீர்கள்? துசித்த மற்றும் ரத்பீஸ் என்போர் யார்? எதிரியின் காரழயாலயத்திற்கு எத்தனை மணிக்கு சென்றீர்கள் ?

முதலாவது சாட்சி : வாழ்க்கை தகவல்கள், அரசியல் பிரவேசம் ஆகியவற்றை கேள்வி பதிலாக எதிர்ப்பார்த்து சென்றேன். நான்கு பேர் சென்றிருந்தோம். அன்று மாலை 5.20 மணிக்கு எதிரியின் காரியாலயத்தில் இருந்தோம். துசித்த என்னுடன் கடமையாற்றும் மற்றுமொரு ஊடகவியலாளர் ரத்பீஸ் புகைப்பட பிடிப்பாளர்.

அரச சட்டத்தரணி : பின்னர் என்ன? நடந்தது

முதலாவது சாட்சி : ஒரு மணிநேரம் காத்திருந்தோம். அவர் பிரசார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அன்று மாலை 6.30 மணிக்கு நேர்காணலை ஆரம்பித்தேன். வாழ்க்கை, 40 வருட இராணுவ சேவை. தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் அரசியல் பிரவேசம் ஆகியவை தொடர்பில் கேள்விகளை கேட்டதுடன் இறுதியாக இறுதி யுத்தத்தில் என்ன நடந் தது என்பது தொடர்பிலும் வினவினேன்?

அரச சட்டத்தரணி : இறுதி யுத்தம் தொடர்பில் (எதியிடம்) கேட்க வேண்டும் என்று முன்னதாக தீர்மானித்து கொண்டுதான் சென்றீர்களா?

முதலாவது சாட்சி :தீர்மானித்து கொண் டே தான் சென்றேன்? எங்களுடன் வருகை தந்த லால் விக்ரமதுங்க லசந்தவை கொலை செய்தது யார்? என்பது தொடர்பில் அவர டம் கேட்டுக்கொண்டிருந்தார் நேர்காணலின் இடையில் என்னிடம் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு இருவரும் சென்று விட்டனர். பின்னரும் நேர்காணல் தொடர்ந்தது.

அரச சட்டத்தரணி :அங்கிருந்தீர்கள் எனினும் அந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை .
நேர்காணலுக்காக என்ன? என்ன? எடுத்து சென்றீர்கள்?

முதலாவது சாட்சி : சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை, பேனை மற்றும் பதிவு புத்தகத்தை எடுத்து சென்றேன்.

அரச சட்டத்தரணி : இறுதி கேள்வி என்ன? அவர் என்ன பதிலளித்தார்.

முதலாவது சாட்சி : விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்ததாகவும் ஆனால் அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் என்ன நடந்தது? அதற்கு எதிரி பதிலளிக்கையில், சரணடைய வருகின்ற புலிகளை சரணடைய விடவேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ 58 ஆவது படையணியின் கட்டளையிடும் தளபதியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிற்கு தொலைபேசியின் மூலமாகத் தெரிவித்ததாக யுத்தம் முடிவ டைந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் தான் தெரிந்து கொண்டதாக பதிலளித்தார்.

குறிக்கிட்ட சரத்பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி நலீன் லது ஹெட்டிகே எதியின் பதில் தொடர்பில் தனக்கு எதுவுமே தெரியாது என கூறியமர்ந்தார்.

அரச சட்டத்தரணி : வேறு எதாவது கூறினாரா?

முதலாவது சாட்சி :ஆம், நோர்வே மற்றும் வேறு வெளிநாட்டு குழுவினர் பசில் ராஜபக்ஷவுடன் (அமைச்சர் பஷில் ராஜபக்ஷ) தொடர்பு கொண்டு புலிகளின் முக்கியஸ்தர்களான புலித்தேவன், நடேசன், சுதா மாஸ்டர் ஆகியோர் சரணடைவதற்கு தயாராக இருப்பதாக கூறியதுடன் இதுதொடர்பில் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தொலைபேசியில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவிற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக பதிலளித்தார்.

அரச சட்டத்தரணி : குழப்பநிலையான செய்தியென்று நீங்கள் அக்கணத்தில் சிந்தித்தீர்களா?

முதலாவது சாட்சி : நிச்சயமாக, யுத்த குற்றத்திற்கு கட்டளையிட்டுள்ளார். இது சட்ட விரோதமானது. அடுத்த வாரத்திற்கான பிரதான தலைப்பு செய்தி, என தீர்மானித்தது டன் நேர்காணலை தனியாகவும், இந்த செய்தியை தனியாகவும் எழுதுவதற்கு நான் அந்த பொழுதிலேயே தீர்மானித்தேன்.

அரச சட்டத்தரணி : உங்கள் தலைப்பையும் தீர்மானத்தையும் அந்தபொழுதிலேயே எதிரிக்கு அறிவித்தீர்களா? எப்போது தெரிவித்தீர்கள்? வேறு யாருக்காவது தெரிவித்தீர்களா?

முதலாவது சாட்சி : இல்லை, டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் முழுச் செய்தியையும் வாசித்துக் காட்டினேன். செய்தியில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்தவேண்டுமா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவே நான் தொலைபேசியில் தெரிவித்தேன். மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, பசில் ராஜபக்ஷ மற்றும் இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார ஆகியோருக்கு தொலைபேசியில் தெரிவித்தேன்.

அரச சட்டத்தரணி : எதிரியின் நிலைப்பாடு என்ன?

அரச சட்டத்தரணி : எதிரியின் அறையில் இருக்கும் போது யாருடனாவது தொடர்பு கொண்டீர்களா? ஏன்?

முதலாவது சாட்சி :மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் தொடர்பு கொண்டேன். உண்மைத்தன்மையை அறிந்து கொள்வதற்கே அவ்வாறு செய்தேன்.

அரச சட்டத்தரணி : 58 ஆவது படையின் கட்டளையிடும் தளபதி என்ன கூறினார்.

முதலாவது சாட்சி : ஒரு கணம் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஜெனரல் சரத்பொன்சேகா வேறு என்ன கூறினார் எனக்கேட்டார். சரத்பொன்சேகா கூறிய சகல விடயங்களையும் அவருக்கு தெரிவித்தேன். இராணுவத்தின் அனுமதி கிடைக்கும் வரை அறிக்கையிட வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டார். இராணுவ பேச்சாளரான உதயநாணயக்காரவிடம் தொடர்பு கொண்டு மேற்படி விடயம் தொடர்பில் சவீந்திர சில்வாவுடன் பேசியதாக தெரிவித்த நான் இராணுவத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் கேட்டேன்.

இராணுவ தளபதியுடனும் சவீந்திர சில்வாவுடனும் கதைத்துவிட்டு கூறுவதாக பதிலளித்தார். எனினும் பின்னர் கருத்து தெரிவிப்பதிலிருந்து விலகி நின்றார்.

அரச சட்டத்தரணி : பின்னர் என்ன நடந்தது?

முதலாவது சாட்சி; : பசில் ராஜபக்ஷவி டம் பேசினேன். புலிகளின் முக்கிய தலைவர்கள் என்போர் சரணடைவதற்கு தயாராக இருந்ததாகவும் அதற்கு நோர்வே முயற்சித்ததாகவும் கூறப்பட்டமை தொடர்பில் கேட் டேன். ஆம் என பதிலளித்த அவர் வேறு எதனையும் கூறவில்லை.

அரச சட்டத்தரணி : பதிவு புத்தகம் எதற்காக பயன்படுத்துகின்றீர்கள் எதனை பதிவீர்கள்?

முதலாவது சாட்சி : எங்களுடைய பதிவிற்காகவும் மீள திரும்பி பார்ப்பதற்குமே பதிவு புத்தகத்தை பயன்படுத்துகின்றேன். முழுமையாக பதிவு செய்யமாட்டேன். முக்கியம் என நான் நினைத்தால் பதிவு செய்து கொள்வேன்.

அரச சட்டத்தரணி : சரத்பொன்சேகா கூறிய முழுவதையும் பதிவுசெய்து கொண்டீர்களா?

முதலாவது சாட்சி : நேர்காணலின் ஆரம்பத்தை துசித்த பதிவு செய்து கொண்டார் இறுதிக் கேள்வியை நான் கேட்கும் போது அவர் அங்கிருக்கவில்லை. அதனால் இறுதிகேள்விக்கான பதிலை நானே பதிந்து கொண்டேன்.

அரச சட்டத்தரணி : பதிவு புத்தகத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் கேட்டனரா?
அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்தீர்களா?
வாக்குமூலம் கொடுத்தீர்களா?

முதலாவது சாட்சி : ஆம், பதிவு புத்தகத்தை பிரதி எடுத்துக் கொண்டு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கையளித்தேன். வாக்குமூலம் கொடுத்தேன் என்றார்.

விசாரணை நிறைவில் அரச தரப்பு சட்டத்தரணி முதலாவது சாட்சியின் அம்மாவிற்கு நாளை (இன்று) சத்திரசிகிச்சை மேற்கொள்ளவிருப்பதனால் வழக்கை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மேற்படி வழக்கு விசாரணை நாளை புதன்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் முதலாவது சாட்சியை மன்றில் ஆஜராகுமாறும் பணித்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com