Sunday, September 5, 2010

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பிளேர் மீது ஷூ, முட்டை வீச்சு!

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து பிரதமராக இருந்தபோது, ஈராக் போருக்கு ஆதரவளித்தது உள்பட தாம் மேற்கொண்ட கொள்கை முடிவுகளுக்கு நியாயம் கற்பித்தும், பல்வேறு நிகழ்வுகளின் நினைவுகளையும் தொகுத்து 'எனது பயணம்' My journey என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் பிளேர்.

இந்த புத்தகத்தை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் பிளேர். இதன் ஒரு பகுதியாக அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகருக்கு நேற்று சென்றார் பிளேர். அவர் அங்கு வருவதை அறிந்து, ஈராக் போரில் ஆதரவளித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிளேர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.

'கைகளில் ரத்தக் கறையுடன் வரும் பிளேரே திரும்பி போ!' என்று அவர்கள் முழக்கமிட்டுக்கொண்டிருக்கும்போது, பிளேர் காரில் வந்திறங்கினார். அவர் காரிலிருந்து இறங்கியதுமே அங்கு திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், பிளேர் மீது ஷூ மற்றும் முட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வீசினர்.

இருப்பினும் அவை பிளேர் மீது படவில்லை. பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்திற்கு அழைத்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே பிபிசிக்கு பேட்டியளித்துள்ள பிளேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான படையெடுப்புதான், இஸ்லாமிய அடிப்படைவாதம் அதிகரிக்க காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுவதை நிராகரித்துள்ளார்.

அத்துடன் பிற்போக்குத்தனமான மற்றும் மூடத்தனமான இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் உலக பாதுகாப்புக்கே மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் அதில் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com