Wednesday, August 4, 2010

முதலைக்கு நெத்தலி சாவால் விட்ட கதையே வீரவன்சவின் உண்ணா விரதம். பொன்சேகா

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு எதிராக அமைச்சர் வீமல் வீரவன்ச மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டமானது முதலைக்கு நெத்தலி சவால் விட்டதை போன்றதாகும் என முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா கிண்டல் செய்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தொடர்ந்து பேசியதாவது:

ஐ.நா. விவகாரத்தை இராஜதந்திர ரீதியில் அணுகவேண்டும். ஆனால், பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டு, சைலன் (குளுகோஸ்) பாட்டிலுடன் அரசாங்க ஆதரவில் இங்கு மட்டுமே உண்ணாவிரதம் நடத்தப்பட்டதுடன் சேறும் பூசிக் கொள்ளப்பட்டது என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தியதால் 10 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது. விமான போக்குவரத்துக்கு 6 மில்லியனும், போக்குவரத்துக்கு 2 மில்லியனும், சாப்பாட்டுக்கு 2 மில்லியனும் செலவிடப்பட்டது. இதில் பயன் ஏதும் இருக்கின்றதா?

அத்துடன் 20 இலட்சம் ரூபாய் செலவில் பெந்தோட்டையில் அமைச்சர்கள் ஆட்டம் போடுகின்றனர். இவையெல்லாம் யாருடைய பணம்,நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிதியில்லாத நிலையில் இவையெல்லாம் தேவையா?

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போனது தொடர்பாக உண்மையை தெளிவுபடுத்த அமைச்சர்கள் தயார் எனினும், அமைச்சர் பதவிகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றனர்.

களத்தில் போராடி யுத்தத்தை வெற்றி கொண்ட தளபதி நான், குளிரூட்டப்பட்ட அறைக்குள் இருந்து கொண்டு அதனைச் செய்யவில்லை. இவற்றிற்கு நானே பொறுப்பு என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com