Friday, August 27, 2010

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு நிபந்தனைகளற்ற ஆதரவு வழங்குவோம். முஸ்லிம் காங்கிரஸ்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவர் இருமுறைகளே பதவி வகிக்கமுடியும் என்ற வரையறையை முடிவுக்கு கொண்டுவருமுகமாக அரசியல் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இம்மாற்றத்தினை மேற்கொள்ள பாரளுமன்றில் 2/3 பெரும்பாண்மை தேவை. இம்மாற்றத்திற்கு ஜனாதிபதிக்கு நிபந்தனைகள் அற்ற ஆதரவினை வழங்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் மாற்ற இலக்கை அரசு அடைவதற்கு எவ்வித சலுகைகளையும் தமது கட்சி எதிர்பாராது முழு ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்ததேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் 4 ஆசனங்களை பெற்று 2 தேசியப் பட்டியல் ஆசனங்களுடன் 6 ஆசனங்களை கொண்டுள்ளது. தற்போது தனது வழமையான பல்டியை ஆரம்பித்துள்ள அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கடந்த 25ம் திகதி கண்டியில் ஜனாதிபதியை சந்தித்து பேசியிருந்தனர். இன்று கட்சி தாவல் தொடர்பாக இறுதி பேச்சினை நாடாத்திய ரவூப் ஹக்கீம் ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் அரசு முன்வைத்திருக்கும் அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பில் தாம் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகமான தருஸலாத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஒருவர் மூன்று முறைகள் பதவி வகிப்பதற்கான அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவளிப்பதனால் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் , அவ்வாறான பாதிப்புக்கள் உருவாகும்போது பேசித்தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் யாப்பின் 17வது திருத்தச்சட்டத்திற்கு மாற்றீடாக கொண்டுவரப்படவுள்ள திட்டத்திற்கும் தமது கட்சி ஆதரவு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பாலித ரங்க பண்டார , லக்ஸ்மன் செனவிரத்ன , அப்துல் காதர் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி தாவுகின்றனர். ஐ.தே.கட்சியிலிருந்து பிரகாஷ் கணேசன் , பி. சிகாம்பரம் ஆகியோர் ஏற்கனவே அரசின் பக்கம் தாவியமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்று நிகழ்வொன்றில் பேசிய ஜனாதிபதி ஐவருக்கே இடமுண்டு என்ற நிலையில் தற்போது 9 பேர் தாவுகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com