Tuesday, July 27, 2010

கருணாநிதியிடம் மூக்குடைபட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு!

எதற்காக வருகிறார்கள்… என்ன செய்தியைக் கொண்டு செல்கிறார்கள்… ம்ஹ¨ம், தெரியவில்லை. ஆனால், மாதம்தோறும் ஏதாவது ஒரு நாள் திடீரென்று டெல்லியில் முகாமிடும் இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள்… பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர்கள் எனப் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தவறுவது இல்லை. பலன்?

டெல்லியில் இருந்து கொழும்புவில் இறங்கும்போது தமிழ் எம்.பி. ஒருவருக்கு மூக்கில் சின்னக் கொப்பளம். பேண்டேஜ் போட்டிருந்தார். விமான நிலையத்தில் அவரைச் சந்தித்த பிரமுகர் ஒருவர் ஏதோ கேட்க, ‘இந்தியாவில் இருந்து மூக்குடைபட்டு வருகிறோம்’ என்றாராம் அந்த எம்.பி. நிலைமை அப்படித்தான் இருக்கிறது! இந்நிலையில், சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகிய ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்கள், கடந்த 20-ம் தேதி சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். ஒரு மாதத்துக்கு முன்பே நடந்திருக்க வேண்டிய நிகழ்வு இது.

முதல்வர் கொடுத்த தேநீர் இதமாக இருந்தாலும், இந்த சந்திப்பு சற்று சூடாகவே இருந்தது. ஈழத்தில் அரசியல் போராட்டம் முடிந்து ஆயுதப் போராட்டம் உச்சத்துக்குப் போய் மீண்டும் பூஜ்ஜியத்துக்கு வந்துள்ள நிலையில்… செல்வநாயகம், அமிர்தலிங்கம் காலத்து சங்கதிகளை நினைவுகூர்ந்து வழக்கமாகச் சொல்லும் கருணாநிதி, இந்த சந்திப்பில் கறார் குரலை எழுப்ப… கூட்டமைப்பினர் அதை எதிர்பார்க்கவில்லை!

‘இனத் துரோகி’ பட்டம் சூட்டும் எதிர்க்கட்சி அரசியலுக்கு இடையில், கோபாலபுரத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்திருக்கின்றன. ”நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ… எனக்குத் தெரியாது. நான் இந்தியாவின் எதிர்க் கட்சித் தலைவர் இல்லை. இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். நீங்கள் நினைப்பதை எல்லாம் நான் இங்கு பேச முடியாது. தமிழர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ… அதைத்தான் செய்ய முடியும்.

இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!” என்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கோத்ததுபோல இருந்திருக்கின்றன, தமிழக முதல்வரின் வார்த்தைகள்.

”இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பார்த்தசாரதி நடுநிலையுள்ள பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டார். அதைப்போன்ற பிரதிநிதியாக ஒருவரை நான் அனுப்பிவைக்க பிரதமரைக் கேட்டுள்ளேன். அது நிச்சயம் நடக்கும். நீங்கள் சாணக்கியத்துடன், சாதுர்யத்துடன் அரசியல் பண்ணுங்கள்!” என்றும் கூட்டமைப்பினரிடம் முதல்வர் கூறியிருக்கிறார்.

”புலிகள் இல்லை, போர் இல்லை. வேரோடு வீழ்ந்துகிடக்கும் வாழ்க்கையை மீட்க உலக சக்திகள் யாரோடும் உறவாட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கிறது. இந்தியா எம்மாதிரியான நடவடிக்கை எடுத்தாலும் நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்!” என்று இவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ”அந்த நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள்!” என்றாராம் முதல்வர்.

கொழும்புக்குப் புறப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவிடம் பேசினோம். ”முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக இந்தியாவில் பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், போருக்கு முன்பு மக்கள் எங்கு வசித்தார்களோ, அங்கு மீள்குடியேற்றப்படவில்லை. வவுனியா, யாழ்ப்பாண முகாம்களில் இருந்தவர்கள் அவரவர் ஊர்களுக்கு அருகில் மீண்டும் முகாம்களில்தான் வைக்கப்பட்டுள்ளார்கள். உயர் பாதுகாப்பு வலயம் எனக் கூறி, தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.

முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் 10 ஆயிரம் ஏக்கர் தமிழர் மண்ணை அரசாங்கம் கையகப்படுத்தி உள்ளது. இந்த இடங்களில் நிரந்தர ராணுவ முகாம்களும் ஒரு லட்சம் ராணுவத்தினர் குடும்பத்துடன் தங்க வீடுகளும் அதிவேகமாக அமைக்கப்படுகின்றன. தமிழர் பகுதிகளில் நிர்வாகத்தை ராணுவமயம் ஆக்குவது ஓர் ஆபத்து. அதைவிட அபாயமானது, 10 லட்சம் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசமான வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நான்கு லட்சம் சிங்களர் குடியேறவுள்ளனர்.

ஏற்கெனவே, சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில், சிங்களர்களைக் குடியேற்றி, தமிழர்களை மேலும் சிறுபான்மையினர் ஆக்குவதுதான் அரசாங்கத்தின் திட்டமாகத் தெரிகிறது. அதாவது, படிப்படியாக தமிழர்கள் நாடாளுமன்ற, மாகாண சபைகளுக்குத் தேர்வுசெய்யப்படுவது குறைந்து ஒருகட்டத்தில் சிங்களர் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளாக ஆகும் நிலை ஏற்படும். போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்ற வேண்டிய அளவுக்கு இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்துவதும் உடனடியாகச் செய்யப்பட வேண்டும்.

நாங்கள் ஜனநாயக அமைப்பு என்ற வகையில் இந்தியாவுடன் பேசியே ஆக வேண்டும். ராஜபக்ஷேவை அழைத்துப் பேசிய டெல்லி, எங்களையும் கூப்பிட்டுப் பேசி இருக்கிறது. இந்தியாவின் நிலைப்பாடுபற்றி எங்களிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது.

எங்களைப் பொறுத்தவரை, நடுக் கடலிலே கைவிடப்பட்டு கட்டுமரம் கிடைக்காதா என்ற நிலையில் இருக்கிறோம். இந்திய அரசின் உதவியைக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் இதுதான். ‘இந்திய அரசுடன் பேசுவதுபோலவே இலங்கை அரசுடனும் தொடர்ந்து பேசுங்கள்; அதே சமயம் உங்கள் நிலையை விட்டுக்கொடுக்க வேண்டாம்’ என்று டெல்லி எங்களுக்குச் சொல்லியிருக்கிறது.

இவற்றை முதல்வர் கருணாநிதியிடம் சொல்வதற்காகவே நாங்கள் சென்னை வந்தோம்” என்றார் மாவை சேனாதிராசா. ”எட்டி எட்டி உதைக்கிற காலைக்கூட இறுக்கமாகப் பற்றிக்கொள்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை!” என்று இலங்கைத் தமிழ்த் தலைவர் ஒருவர் சொல்வதுதான் இன்றைய பரிதாபகரமான யதார்த்தம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com