Tuesday, July 27, 2010

வவுனியா வர்த்தகர் கடத்தப்பட்டமையை கண்டித்து கடையடைப்பு. சிறிரெலோ மீது சந்தேகம்.

வவுனியாவில் சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் கடத்துப்பட்டு கப்பம் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் இன்று ஒரு நாள் அடையாள கடையடைப்பை நடத்திவருவதாக வவுனியா பொலீஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து நிலைமைகள் வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் இச்சம்வம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கடையடைப்புக்கான அழைப்பு விடுத்த வவுனியா வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சுதந்திரமான சுமுகமான நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மீண்டும் அமைதியைக் குலைத்து அசாதாரண சூழ்நிலை ஏற்படும் வகையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த 23.07.2010 வெள்ளிக்கிழமை இரவு எமது வர்த்தகர்களில் ஒருவர் கப்பம் கோரி இனந்தெரியாதவர்களினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார். யுத்தம் முடிவடைந்த நிலையில் நீண்ட காலத்தின் பின் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதைவிட நகருக்கு வெளியே பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பல களவு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் வர்த்தகர்களும் பொது மக்களும் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ வழியேற்படுத்துவதோடு இப்படியான செயல்களில் ஈடுபடும் தீய சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு தரப்பினரை வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை நடத்த தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை பூரணமான கடையடைப்பு செய்து அனைத்து வர்த்தக உரிமையாளர்களும், ஊழியர்களும் எமது வர்த்தகர் சங்க அலுவலகத்தின் முன்பாக கூடி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையில் அமைதியான முறையில் இரண்டு மணித்தியாலங்களை எமது எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு வர்த்தகர்களும், வர்த்தக ஊழியர்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதே நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர அமரசிறி சேனாரத்தின் வவுனியா வர்த்தகர்களின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் அங்கு உரையாற்றுகையில் உங்களை சார்ந்த ஒரு வியாபாரி கடத்தப்பட்டமை குறித்து எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளீர்கள். இவ்வாறான எதிர்ப்பை அன்று செய்திருக்கவேண்டும். கப்பப் பணம் செலுத்திய பின்னர் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்விடயத்தில் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஒருவாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யமுடியும். எதற்கும் பொதுமக்களாகிய உங்களிடமிருந்து தகவல்கள் வரவேண்டும் என தெரிவித்துள்ளார்:

சட்டம் எல்லோருக்கு ஒரே மாதிரியானது. வியாபாரி கடத்தல் சம்பவத்தின் பின்னர் நாளாந்தம் வவுனியாவின் பாதுகாப்பு நிலமை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கவேண்டுமென பொலிஸ் மா அதிபர் எமக்கு விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்தோடு வியாபாரிகளுடைய பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்துமாறும் கேட்டுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

அதேநேரம் சம்பவம் நெடுங்கால குரோதம் காரணமாக இடம்பெற்றதாக தகவல்கள் கசிந்துள்ளது. கட்தப்பட்டவர் ரெலோ அமைப்பின் முன்னாள் உறுப்பினரான கனடாவில் வசிக்கும் செட்டி என்பவரின் மைத்துனர் எனவும் , செட்டி 80 களின் களின் இறுதிப்பகுதியில் ரெலோவிற்கு சொந்தமான பலகோடி பணத்தையும் சொத்துக்களையும் சுருட்டிக்கொண்டு சென்றவர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வன்னிப் பகுதியில் செயற்பட்டுவரும் சிறி ரெலோ எனப்படும் சிலர் செட்டியை பழிவாங்கும் நோக்கில் இச்செயலை செய்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் லண்டன் , ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்து சென்று வன்னியில் தங்கியுள்ளனர். இவர்கள் அரச படைகளில் உள்ள சில பொறுப்புணர்சி அற்ற அதிகாரிகளின் உதவியுடன் இவ்வாறான பல தீய செயற்பாடுகளை செய்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வர்த்தகர் கடத்தப்பட்டபோது ஞானி எனப்படும் சிறிரெலோ உறுப்பினர் கூட இருந்தமையும் கடத்தல்காரர்கள் ஞானியையும் வானில் ஏற்றிச் சென்று சற்று நேரத்தில் விடுவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்:


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com