Sunday, April 25, 2010

அமைச்சரவையின் எண்ணிக்கை 42ஆக அதிகரிக்கப்படலாம்- புன்னியாமீன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது புதிய அமைச்சரவையை மேலும் சில உறுப்பினர்களை நியமிப்பதன் மூலம் விரிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 23ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 37 பேரும், பிரதியமைச்சர்கள் 39 பேரும் நியமிக்கப்பட்டனர்.பாதுகாப்பு, நிதி, துறைமுகங்கள், நெடுஞ்சாலை அமைச்சுப் பொறுப்புகள் ஜனாதிபதி வசமுள்ளன. கடந்த அரசில் அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் என 109 பேர் இடம்பெற்றிருந்தனர். கடந்த ஆட்சிக் கால அமைச்சரவையை நோக்குமிடத்து இவ்வெண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும்கூட, இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இவ்வெண்ணிக்கையும் அதிகமானதே என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடந்த அரசாங்கத்தில் பொதுசன ஐக்கிய முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் ஆட்சிப்பலத்தை தக்கவைத்துக் கொள்ள அமைச்சரவை எண்ணிக்கையை எல்லையில்லாது அதிகரித்துச் சென்றது. கடந்த அரசாங்கத்தில் ஒரு சிலரைத் தவிர அனைவரும் அமைச்சர்களே என்ற நிலை காணப்பட்டிருந்தது. தற்போது அமைச்சரவை எண்ணிக்கை ஓரளவு குறைக்கப்பட்டாலும்கூட, ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் பிரதியமைச்சர்களாக இருந்தவர்கள் அந்த பதவிகளையும், வசதி வாய்ப்புக்களையும் எதிர்பார்த்து அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தவும் இடமுண்டு. இருப்பினும், இந்நெருக்கடிகள் அரசாங்க அறுதிப் பெரும்பான்மையை குறைப்பதாக அமைந்துவிடக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும், கடந்த அரசாங்கத்தில் முக்கியமான பங்களிப்பு வழங்கிய ஒரு சிலர் விடுபட்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக புதிய அரசியலமைப்பொன்றை முன்வைக்க வேண்டுமென்பதில் மற்றும் இலங்கையில் இனப்பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதிலும் தீவிரமாக செயற்பட்டு வந்த பேராசிரியர் திஸ்ஸவிதாரணவை குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புமிடத்து இவரை அமைச்சராக நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தமொன்று ஜனாதிபதிக்கு ஏற்படலாம்.

மேலும். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு. ஜயரத்ன பிரதமராக நியமிக்கப்பட்டட போதும்கூட, கண்டி மாவட்டத்தில் பிரதான 1 இலட்சம் விருப்பு வாக்குகளுக்கு மேல் பெற்ற கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, எஸ்.பி. திசாயநாயக்க ஆகியோருக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை. கடந்த அரசாங்கத்தில் முக்கிய செயற்பாட்டு உறுப்பினராக காணப்பட்ட சரத் அமுனுகமவுக்கு இதுவரை அமைச்சரவைப் பொறுப்பு வழங்கப்படவில்லை.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற மீள் வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒழுக்காற்று நடவடிக்கை முடிவடையும் வரை கண்டி மாவட்டத்தில் அமைச்சரவை பதவிகள் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், இவ்விசாரனை முடிவடைந்த பின்பு கண்டி மாவட்டத்துக்கு சில அமைச்சரவை பொறுப்புக்களை ஜனாதிபதி வழங்க வேண்டியேற்படும்.

அதேபோல மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏதாவொரு வகையில் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டே வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஆறுமுகம் தொண்டமானுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த கால்நடை அபிவிருத்தி அமைச்சுப் பதவியை அவர் ஏற்றுக் கொள்ளாமையினால் ஆறுமுகம் தொண்டமானும் அமைச்சுப் பதவிக்கு இன்னும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் இவருக்கும் அமைச்சுப் பொறுப்பு எதிர்வரும் நாட்களில் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, அமைச்சரவையின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க வேண்டிய நிலை இருப்பது ஜனாதிபதிக்கு தவிர்க்க முடியாதவொரு விடயமாகவே காணப்படும்.

மறுபுறமாக ஆளும்.ஐ.ம.சு.முன்னணி 144 உறுப்பினர்களை தற்போது தன்வசம் வைத்துள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள இன்னும் 6 உறுப்பினர்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு தேவை. எதிர்வரும் வாரங்களில் எதிர்க்கட்சிகளிலிருந்து இந்த உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அறுதிப் பெரும்பான்மை பலத்திற்கோ மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொள்வதற்கோ இடையில பாரிய வித்தியாசம் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் சேரக்கூடிய உறுப்பினர்களுக்கும் கௌரவத்திற்காக சில அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் ஊகங்கள் கூறுகின்றன.

எவ்வாராயினும் இ.தொ.கா.வைச் சேர்ந்தவர் ஆறுமுகம் தொண்டமான், கலாநிதி சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வல, மகிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி.திஸாநாயக்க, பேராசிரியர் திஸ்ஸவிதாரண ஆகியவர்களில் 5 பேர் புதிய அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. இவர்களில் ஒருவர் பிரதியமைச்சராகலாம் என்றும் அனுமானிக்கப்படுகிறது. எனவே, எதிர்வரும் காலங்களில் அமைச்சரவை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படக்கூடிய நிகழ்தகவே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com