Monday, April 5, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்!– கிறேசியன்!(பாகம் -27)

பலவகையான வார்த்தைகளைப் பயன்படுத்தி சலீம் முயற்சித்து உண்மைகளைக் கண்டறிய பெரும்பாடுபட்டார். அனைவரும் தெரியாது என்றே கூறினர். அவகைப் பிடித்து வந்து உண்மையை எடுக்கிறேன் என்று கூறிச் சென்றார் சலீம்.

அந்த ஈ.பி.ஆர்.எல்.எப். இளைஞர் திருகோணமலையைச் சேர்ந்தவர். இருபாலைப்பகுதியைத் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. அப்படியிருந்தும் அவர் தப்பிச் சென்றது ஓர் அதிசயமான துணிச்சலான செயல்தான். நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். எனக்குக் கூட அப்படி ஓர் எண்ணம் வரவில்லை. யாழ்ப்பாண இடங்களைத் தெரியாத அந்த இளைஞன் இங்கே இருந்து தப்பிக்க முடிவெடுத்தது ஓர் சரியான முடிவாகத்தான் இருக்கும்.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பணம் வந்து தன்னை மீட்டுச் செல்ல தனது உறவினர்களால் முடியாது என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார். எங்களுக்கென்றாலும் எங்கள் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றனர். அவர்கள் எப்படியும் புலி விலங்குகளுக்கு தொல்லைகள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் எங்களை விடுவிக்க குறைந்த அளவு வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு அப்படி எந்தக் குறைந்த அளவு நம்பிக்கை கிடையாது. எனவே இந்த இளைஞன் எப்படியும் இறச்சிக்கடைக்கு அனுப்பப்பட்டு கொல்லப்படுவார் என்பதை அறிந்து இப்படி ஓர் முயற்சியில் இறங்கி தப்பித்துள்ளார். அதிஸ்ரத்தை நம்பி காத்திருக்காமல் முயற்சித்துப் பார்ப்போம் என்று துணிந்த அந்த இளைஞன் பாராட்டப்படாமல் இருக்க முடியவில்லை. அந்த இளைஞனைக் கடைசிவரை புலிகளால் பிடிக்க முடியவில்லை! இந்த நிகழ்வுக்குப் பிறகு புலிகளது வீராவேசப் பேச்சுக்கள் குறைந்தன. ஆனால் சித்திரவதை செய்யும் ஆற்றலை அதிகரித்தனர்.

தப்பித்து ஓடிய இளைஞனை மனதில் வைத்துக்கொண்டு பிடித்து வரும் புதிய இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர் புலிகள். காலுக்கு மட்டும் விலங்கு மாட்டினால் போதாது. இவர்கள் எல்லோருக்கும் கைகளுக்கும் விலங்கு மாட்ட வேண்டும் என்று சின்னக்கேடி வற்புறுத்தினார். சலீமுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, அவர் அதற்கு சம்மதிக்கவில்லை!

கைகளில் விலங்குடன் இருக்கும் நடராஜ் அவர்கள் இரவு வேளையில் தினமும் ஏதாவது பழைய சினிமாப் பாடல்களைப் பாடுவார். இந்த இளைஞன் தப்பி ஓடிய மூன்று நான்கு நாட்கள் கழித்து அவரது பாடலை ஆரம்பித்தார். “சட்டி சுட்டதடா கை விட்டதடா” என்ற பாடல் வரியில் “ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கிவிட்டதடா” என்று உரத்தக் குரலில் பாடினார். காவலுக்கு நின்ற புலிக்கு கோபம் வந்தது. எங்களத் தானே சொல்கிறாய் என்று நடராஜ் அவர்களை இழுத்து வெளியில் போட்டு அடித்தனர்.

நடராஜ் அவர்களும் விடுவதாக இல்லை. ஓமடா உங்களைத்தான் சொன்னேன்! அந்தப் பொடியன் வீரனடா. நீங்கள் விலங்கு போட்டு அடிக்கும் கோழைகளடா! என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருந்தார். இவர்களை அடிப்பதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. எந்த விபரீதம் நேர்ந்தாலும் தான் நினைப்பதைச் சொல்லி முடிக்கும் மனபலம் அங்கிருந்தவர்களில் நடராஜ் அவர்களுக்கு மட்டுமே இருந்தது!

சின்னக்கேடியுடன் நிழல் போல வரும் திசை என்பவருக்கு ஒரு விசேச குணம் ஒன்று உண்டு. அவர் எப்போது உள்ளே வந்தாலும் இரண்டு சகோதரர்களை சுவரின் மீது சாய்ந்து நிற்கும்படி கூறி அவர்களது மார்பில் கைகளால் குத்துவார். மார்புப்பகுதி சற்றுத் தூக்குதலாக இருந்தால் கண்டிப்பாக திசை குத்துவார். நேராக நெஞ்சில் குத்தமாட்டார். கைகளை முகத்துக்கு மேலே தூக்கி மேலிருந்து கீழாகக் குத்துவார் இரண்டு கைகளாலும். ஓர் கோமாளித்தனமான குத்துக்களாக இருக்கும் அவரது குத்துகள். அவருக்கு அதில் ஓர் பேரின்பம் இருந்தது. அங்கு இருந்த 15 மாதங்களில் இருபது தடவைக்கு மேல் இவ்விதமான குத்துக்களை நான் பெற்றுள்ளேன்.

நீண்ட நாட்களாக இந்தச் சிறையில் நடப்பவற்றை நான் கவணித்துக்கொண்டிருந்தேன். பலர் வருவதும் அடி உதைகள் என்று வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுக்கொண்டிருந்தனர். என்னை விசாரணைக்கென்று அழைக்கவே இல்லை. எதற்காக வைத்துக்கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வி என்னுள்ளேயே எழுந்தது. இதுபற்றி நான் யாரிடத்திலும் கேட்க முடியாது. அப்படி கேட்டுவைத்தால் வம்பை விலைக்கு வாங்கியதாகிவிடுமோ என்ற பயமும் இருந்தது. அதனால் எனது வாயை நானே கட்டுப்படுத்திக் கொண்டேன்.

என்னுடன் இருந்தவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இந்த முகாமில் எந்தவித மருந்தும் கிடையாது. காய்ச்சல் தலைவலி, வயிற்றோட்டம் எது வந்தாலும் உணவு இல்லாமல் பட்டினி கிடந்துதான் நோயைக் குணப்படுத்த வேண்டும். இங்கே இருந்த ஒரே மருந்து வின்ரோஜன்தான். இரண்டு சகோதரர்களுக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டது. காலை மாலை இருவேளை தவிர ஏனைய நேரங்களில் எந்தக் காரணம் கொண்டும் கழிவறைகளுக்கு அனுமதிக்க மாட்டார்கள். துணுக்காயில் அதற்காக சொப்பின் பைகள் கொடுத்தனர். இங்கு எதுவும் இல்லை.

ஒரு சகோதரனுக்கு இரவு வயிற்று வலி ஏற்பட்டு மலம் கழிக்க வேண்டும் என்று அவதிப்பட்டார். எவ்வளோவோ மன்றாடிக் கேட்டும் புலி விலங்குகள் இரங்கவில்லை. அந்தச் சகோதரனை அடக்கிக் கொள்ள முடியவில்லை அப்படியே சறத்துடன் மலம் கழித்துவிட்டார். எனது அறையில் அப்போது ஆறுபேர் இருந்தோம். நிலத்திலும், அவரது சறத்திலும் கொட்டிவிட்டது. கழுவுவதற்காக தண்ணீர் கேட்டோம். தரமறுத்துவிட்டனர். மறுநாள் காலைவரை உறக்கமில்லாமல் அதனுடனேயே அனைவரும் இருந்தோம். காலையில் தண்ணீர் எடுத்து வந்து நிலத்தையும் கழுவி அவரது சறத்தையும் கழுவினோம்.

இதே போன்று அருகில் இருந்த அறையிலும் ஒருநாள் நடந்தது. நல்லவேளை எனக்கு இப்படி ஓர் நிலை ஏற்படவில்லை என்று நினைத்திருந்த வேளை எனக்கும் அந்தத் தண்டனை தானாக வந்தது.

ஒருநாள் இரவு 1 மணியளவில் எனது வயிறு முறுகியது. அதனைத் தொடர்ந்து வெளியேறும் உணர்வு அதிகரித்தது. காவலுக்கு நின்ற புலியிடம் கதைத்துப் பார்த்தேன். வாயை மூடிக்கொண்டு கிடவடா என்று ஆலோசனை வழங்கினார். ஏற்கனவே எனது அறை நாற்றம் எடுத்தது நினைவுக்கு வந்தது. எப்படிச் சமாளிப்பது என்று பல ஆராட்சிகள் செய்தேன் எதுவும் தென்படவில்லை. இறுதியாக ஓர் முடிவுக்கு வந்தேன்.

எனது சறத்தைக் கழித்துப் பயன்படுத்துவதென்று முடிவெடுத்தேன். அதன்படி சறத்தைக் 2ஓ1ஃ2 அடி அளவில் பல்லால் கடித்துக் கிழித்து எடுத்து அதனை இரண்டாக மடித்து அதன் மீது மலம் கழித்தேன். அதற்கு முன்னர் கூடஇருந்தவர்களை மறுபக்கம் திரும்பி அமரும்படி கூறி மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுத்தான் கழிவை அகற்றினேன்! முன்னர் ஏற்பட்டது போன்று கட்டுப்பாட்டை இழந்து அறையில் நாற்றம் ஏற்படுத்தவில்லை. கழித்த மலத்தை அப்படியே சுருட்டி ஓர் மூலையில் வைத்துவிட்டு உறங்கினேன். முதலில் அறையினுள் மனம் இருந்தாலும் பின்னர் மனம் போய் அனைவரும் உறங்கினோம்.

மறுநாள் காலை கதவைத் திறக்க வந்த புலிக்காவலாளி ஏனடா இரவு கூப்பிட்டனி என்று கேட்டு காலால் உதைத்தார். இவரது பெயர் பாபு. இவர் பூனகரியைச் சேர்ந்தவர். ரொயிலற் வந்தது அதனால்தான் கூப்பிட்டேன் என்று பதில் கூறியதற்கு மீண்டும் ஒரு உதை விட்டார். இவை பழகிப்போன உதைகள்தானே எங்களுக்கு! இந்தச் சம்பவம் நடந்து பத்து மாதங்களும் நான் அந்த கிழிந்துபோன சறத்துடன்தான் வாழ்ந்தேன்.

சிங்களவர் கூட இந்த அளவுக்குத் தமிழர்களை வதைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. சிங்களவரது சிறையிலிருந்து பலரை நான் விசாரித்துப் பார்த்தேன். ஆண்டுகணக்காக கால்களுக்கு விலங்கிட்டு, கைகளுக்கு விலங்கிட்டு, குழிகள் வெட்டி அதனுள் இறக்கிவைத்து, தினமும் அடித்துச் சித்திரவதை செய்து தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்ததாக யாரும் சொல்லவில்லை.

மனித உரிமைகளை எப்படியெல்லாம் மீறக்கூடாதோ, அவை அனைத்தையும் மீறிச் செயற்படுத்தி காண்பித்தனர் புலிகள். விடுதலை என்றால் என்னவென்று தெரியாத, படிக்காத, படிக்கவிரும்பாத நபர்கள் எல்லாம் ஆட்சி செய்யப் புறப்பட்டால் வாழும் வீட்டுக்குள் மிருகங்கள் போல் மலம் கழிக்கத்தான் வேண்டும். தமிழ் இனத்துக்கு பெருமை என்று நினைத்தவர்கள் பலர். ஆனால் நடந்தவை சிறுமைகள் என்பது யாருக்கும் தெரியாத விடயமாகும்.

தொடரும்…

குறிப்பு – சிறிய திருத்தம்:- கடந்த 01-04-2010 அன்று வெளிவந்த பாகம் 25 ல் நாவாந்துறை கோவில் திருவிழா 29-04-1996 என்று வெளிவந்துள்ளது. அது தவறானது. தட்டெழுத்துப் பிழையின் காரணமாக நடந்தது. 29-04-1986 என்பதே சரியானதாகும்.)

1 comments :

Manoharan April 7, 2010 at 9:25 AM  

dont worry about more comments.many peoples are reading youroriginal statement silently.this historical statement as Adolp Hitlor period must be publish as Book for study for everybody.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com