Wednesday, March 3, 2010

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, ஏப்பிரல் 8 அன்று நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில், வாழ்க்கைத் தரத்தின் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் ஆழமடைந்துவரும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காகப் போட்டியிடுகின்றது. சோசலிச சமத்துவக் கட்சி சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அன்றி, உழைக்கும் மக்களின் அவசர தேவைகளை இட்டு நிரப்ப ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை அமுல்படுத்தும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராடுகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி தலைநகர் கொழும்பு, யுத்தத்தால் சீரழிந்த யாழ்ப்பாணம், மத்திய தேயிலைத் தோட்ட பிராந்தியமான நுவரெலியா மற்றும் தெற்கில் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், குடும்பப் பெண்கள், தொழில் அற்றவர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் நிபுணர்களுமாக மொத்தம் 58 வேட்பாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி நிறுத்தியுள்ளது. தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் காக்க தமது முழு இளமைக் காலத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவர்களான விலானி பீரிஸ், எஸ். சந்திரசேகரன், எம். தேவராஜா மற்றும் ரட்னசிறி மலலகம ஆகியோர் தலைமை வேட்பாளர்களாவர்.

கூர்மையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் மத்தியிலேயே இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது. கடந்த மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த போதிலும், வாழ்க்கைத் தரம் தொடர்ந்தும் சீரழிந்து வருவதோடு சமூக பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்து வருகின்றன. "சமாதானத்தையும் சுபீட்சத்தையும்" கொண்டுவருவதாக வாக்குறுதியளித்த ஜனாதிபதி இராஜபக்ஷ, ஊடக விமர்சகர்களின் வாய்களை மூடவும், வேலை நிறுத்தங்களை தடை செய்யவும் அரசியல் எதிரிகளை கைது செய்யவும் ஜனநாயக விரோத வழிமுறைகளை நாடியுள்ளார். கடந்த ஆண்டு அவர் சம்பள உயர்வு கோரி தொழிலாளர்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையை தடை செய்தார். ஜனவரி 26 நடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், அரசாங்கம் பிரதான எதிர்க் கட்சி வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தது. அவர் ஒரு சதிப் புரட்சிக்கு திட்டமிட்டார் என்ற உறுதியற்ற, பொய்யாகப் புணையப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்கள், பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் முதுகில் ஏற்றிவிடுவது என்ற அடிப்படை பிரச்சினையில் உடன்பாடு கொண்டுள்ளனர். தேர்தலின் பின்னர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என உழைக்கும் மக்களை நம்பவைத்து ஏமாற்றும் முயற்சியில் முழு அரசியல் ஸ்தாபனமும் ஈடுபட்டுள்ளது. பொருளாதார பிரச்சினைகள் கிடையாது மற்றும் இலங்கை "ஆசியாவின் அதிசயமாக தோன்றி வருகின்றது" என்ற பொய்யை அரசாங்கம் பரப்பி வருகின்றது. ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய எதிர்க் கட்சிகள் நெருக்கடிகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட போதிலும், அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் வீணடிப்புகளுக்கு முடிவுகட்டினால் மட்டுமே தீவு ஏறத்தாழ ஒரு சுவர்க்கமாக மாறும் என்ற பொய்யை கூறித் திரிகின்றன.

தொழிலாள வர்க்கம் கொடூரமான அதிர்ச்சியை எதிர்கொள்ளவுள்ளது என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. 2008ல் வெடித்த முதலாளித்துவத்தின் பூகோள பொருளாதார நெருக்கடி அதன் இரண்டாவது கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. நாட்டுக்கு நாடு, கூட்டுத்தாபனங்களை பிணை எடுப்பது மற்றும் கம்பனிகளுக்கான ஊக்குவிப்பு பொதிகள் ஊடாக, அரசாங்க கணக்கில் ரில்லியன் கணக்கான டொலர்கள் எடுக்கப்பட்டதால் குவிந்துள்ள கடனை தாங்க முடியாதுள்ளது. இப்போது கிரேக்கத்தில் நடப்பது போல், நெருக்கடிக்கு வழி வகுத்த நிதி ஊக வாணிப கூத்துகளுக்கு உழைக்கும் மக்கள் பொறுப்பாளிகளாக இல்லாவிட்டாலும், இந்தக் கடன்கள் இப்போது அவர்கள் மீதே திணிக்கப்படுகின்றன.

இலங்கை இந்த பூகோள பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் இருப்பதற்கு மாறாக, குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. கொழும்பில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்ட நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் தீவின் பெரும்பகுதி அழிவுக்குள்ளாகியுள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷ தனது குற்றவியல் யுத்தத்துக்கு செலவிடுவதற்காக நாட்டை முழுவதும் அடகு வைத்துள்ளதன் விளைவாக, அரச கடன் இப்போது 4 ரில்லியன் ரூபாய்களுக்கும் மேலாக அல்லது மொத்த தேசிய உற்பத்தியில் 90 வீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூலையில், பூகோள கடன் நெருக்கடியின் மத்தியில், அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கக் கூடிய கடுமையான அந்நிய செலாவனி பற்றாக்குறை நெருக்கடியை தவிர்ப்பதன் பேரில், அவர் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.6 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறத் தள்ளப்பட்டார்.

மத்திய வங்கியின் உடந்தையுடன், அரசாங்கம் வேண்டுமென்றே நாட்டின் நிதி நிலைமையை மூடி மறைக்கின்றது. இராஜபக்ஷ தேர்தல் முடியும்வரை வரவு செலவுத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளார். வரவு செலவு பற்றாக்குறையின் அளவு பற்றி இதுவரை புதிய தரவுகள் கிடையாது. அது 11.3 வீதம் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கின்றது. அது 2011ம் ஆண்டில் 5 வீதமாக குறைக்கப்பட வேண்டும் என கோரும் சர்வதேச நாணய நிதியம், அரசாங்கம் அதன் இலக்குகளை அடையாததன் காரணமாக, வழங்கவிருந்த புதிய கடன் தொகையை கொடுக்காமல் வைத்திருக்கின்றது.

வரவு செலவுத் திட்டத்தை அரைவாசிக்கும் மேலாக வெட்டிக்குறைப்பதற்கான அறிகுறிகள் ஏற்கனவே கிரேக்க நாட்டில் ஒப்புவிக்கப்பட்டுள்ளன. கிரேக்க அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி, பொதுச் சேவைகளுக்கான கொடுப்பணவை 20 வீதத்தில் குறைத்து, சராசரி ஓய்வு பெறும் வயதை இரண்டு வருடங்கள் அதிகரித்து, பெறுமதி சேர் வரியை விதித்து மற்றும் எண்ணெய், மது மற்றும் புகையிலை மீதான வரியையும் அதிகரித்துள்ளது. இலங்கையில், வேலையற்ற இளைஞர்களின் தொகை ஏற்கனவே உத்தியோகபூர்வமாக 35.4 வீதமாக இருப்பதுடன், 15 வீதமான மக்கள் உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதுடன், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ள நிலைமையின் கீழ், "கிரேக்க தீர்வை" இங்கு அமுல்படுத்துவதானது அழிவுகரமானதாக இருக்கும்.

இராஜபக்ஷ தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுக்கும் தனது எண்ணத்தை பிரகடனம் செய்துள்ளார். அவர் உழைக்கும் மக்களின் எந்தவொரு எதிர்ப்பையும் ஈவிரக்கமின்றி நசுக்க, புலிகள் மீதான 26 ஆண்டுகால யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ்-அரச வழிமுறைகளை பயன்படுத்துவார் என சோசலிச சமத்துவக் கட்சி எச்சரிக்கின்றது. யுத்தத்தின் போது, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களையும் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களையும் தேசிய பாதுகாப்பை கீழறுப்பதாக ஜனாதிபதி கண்டனம் செய்தார். அவரது "தேசத்தை கட்டியெழுப்புதல்" என்ற வயிற்றிலடிக்கும் நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை எதிர்க்கும் எவரையும் தேசப்பற்றில்லாதவர்கள் என பழி சுமத்த அவர் தயங்கப்போவதில்லை.

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர், வேலைத் தளங்கள், ஊடகம், இராணுவம் மற்றும் பொலிசின் உயர்மட்டத்தினர் உட்பட பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு மற்றும் எதிர்க் கட்சிகளுக்கு எதிரான பாய்ச்சலை பரந்தளவில் முன்னெடுத்தது. ஆயினும், அரசியல் உள் மோதலின் கொடூரத் தன்மை ஒருபுறம் இருக்க, அரசாங்கத்துக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் இடையிலான வேறுபாடு, குறிப்பாக கூர்மையடைந்து வரும் பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான பகைமைகளுக்கு மத்தியில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையை எந்தப் பக்கம் திசையமைவுபடுத்துவது என்ற தந்திரோபாய பண்பைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியும் சீனா மற்றும் இந்தியா போன்ற புதிய சக்திகளின் எழுச்சியும், உலக அரசியலில், குறிப்பாக தெற்காசியாவில் கடுமையான ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஆப்கானிஸ்தானில் யுத்தத்தை உக்கிரமாக்குவதும் மற்றும் அமெரிக்காவுக்காக பாகிஸ்தானில் யுத்தத்தை உக்கிரமாக்குவதும், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கின் பிராதான மூலோபாய பிராந்தியத்தில் அமெரிக்க செல்வாக்கை விரிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டதாகும். எரி சக்தி மற்றும் வளங்களுக்காக மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் தங்கியிருக்கும் சீனா, இந்து சமுத்திரம் ஊடான தனது வர்த்தக பாதையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்தியா இந்தப் பிராந்தியத்தை அதன் சொந்த செல்வாக்குப் பகுதியாக கருதுகிறது.

இலங்கை இந்த போட்டியினுள் மேலும் மேலும் இழுபட்டுச் செல்கின்றது. தனது இனவாத யுத்தத்தின் போது ஆயுத, நிதி உதவிகளுக்கும் மற்றும் அரசியல் ஆதரவுக்கும் சீனாவை நாடிய இராஜபக்ஷ, அதற்குப் பிரதியுபகாரமாக, ஹம்பந்தொட்டையில் ஒரு தீர்க்கமான புதிய துறைமுகத்தை கட்டியெழுப்புவது உட்பட பொருளாதார மற்றும் மூலோபாய வாய்ப்புகளை வழங்கினார். சீனாவின ஆதரவின் மீது நம்பிக்கை வைத்து, இராணுவத்தின் யுத்தக் குற்றங்கள் பற்றிய சர்வதேச விமர்சனங்களை "மேலைத்தேய சதி" என இராஜபக்ஷ மறுதலித்தார். மறுபக்கம், பொன்சேகா ஜனாதிபதி தேர்தலின் போது, இலங்கையின் பாரம்பரிய நேச நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை நோக்கி சாய்வதாகக் காட்டிக்கொண்டார். "சர்வதேச சமூகத்தில் இருந்து" அந்நியப்பட்டுவிட்டதாகவும் ஐரோப்பிய ஒன்றிய சலுகையை ஆபத்தில் தள்ளவிட்டுள்ளதாகவும் அவர் இராஜபக்ஷவை விமர்சித்தார்.

பொன்சேகா மற்றும் எதிர்க் கட்சிகள் மீதான இராஜபக்ஷவின் பாய்ச்சல், தொழிலாள வர்க்கத்துடன் மோதுவதற்கான தயாரிப்பில், தனது நிலைமையை பலப்படுத்திக்கொள்வதை இலக்காகக் கொண்டதாகும். யுத்தம் முடிவடைந்த போதும், அவர் ஏறத்தாழ சகல பாராளுமன்றக் கட்சிகளினதும் ஆதரவில் அவசராகல சட்டத்தை அமுலில் வைத்திருந்தார். தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் யுத்த காலத்தில் நூற்றுக்கணக்கானவர்களை கொன்று தள்ளிய அரசாங்க சார்பு கொலைப் படைகள், தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.

அவரது முதலாவது பதவிக் காலத்தில், இராஜபக்ஷ பாராளுமன்றத்தை ஒரு இறப்பர் முத்திரையாக தரம் குறைப்பதற்கு தனது விரிவான நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் அதிகரித்தளவில் உறவினர்கள், நெருங்கிய ஆலோசகர்கள், உயர்மட்ட ஜெனரல்கள் மற்றும் அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்கலாக ஒரு அரசியல்-இராணுவ குழுவின் ஊடாகவே இயங்கி வந்தார். பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி இராஜபக்ஷ பிரதானமாக ஆர்வம் காட்டுவது, தன் விருப்பப்படி அரசியலமைப்பை மாற்றி, தனது பொலிஸ்-அரச ஆட்சியை பலப்படுத்திக்கொள்ளத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்ளவே ஆகும்.

குறிப்பாக, இராஜபக்ஷ அரசாங்கத்தின் தமிழ் சிறுபான்மையினரை நசுக்கும் இனவாத யுத்தம் மற்றும் இலங்கை முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவதற்கான அதன் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற ஒவ்வொரு அடிப்படை பிரச்சினையிலும், அரசாங்கத்துடன் உடன்பாடு கொண்டுள்ள எதிர்க் கட்சிகளான யூ.என்.பி. அல்லது ஜே.வி.பி. மீது தொழிலாளர்கள் எந்தவொரு நம்பிக்கையும் வைக்கக் கூடாது. ஐக்கிய தேசிய முன்னணியும் ஜே.வி.பி. யும், இராஜபக்ஷவின் யுத்தத்தை முன்னெடுத்த ஜெனரல் பொன்சேகாவை, கூட்டுத்தாபன கும்பல்கள் கோரும் வேலைத் திட்டங்களை அமுல்படுத்தக்கூடிய ஒரு மாற்று எதேச்சதிகாரியாக ஜனாதிபதி தேர்தலில் முன்கொண்டுவந்து ஆதரித்தன. இத்தகைய வலதுசாரி கட்சிகளுடன் வெட்கமின்றி அணிதிரண்டுகொண்ட முன்னால் இடதுசாரிகளான நவசமசமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியின் உதவியின்றி, ஐ.தே.மு. மற்றும் ஜே.வி.பி. யால் இராஜபக்ஷவுக்கு ஒரு ஜனநாயக பதிலீடாக காட்டிக்கொள்ள முடியாது.

கால் நூற்றாண்டு கால கொடூரமான உள்நாட்டு யுத்தம், சகல வடிவிலான தேசியவாதம் மற்றும் இனவாதத்தின் பிற்போக்குப் பண்பை அம்பலப்படுத்தியுள்ளது. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த தமிழர்-விரோத பகைமைகளை கிளறிவிட்டதோடு, அவையே 75,000க்கும் அதிகமான உயிர்களைப் பலிகொண்ட குற்றவியல் யுத்தத்துக்கும் பொறுப்பாகும். ஆயினும், தமிழ் வெகுஜனங்களின் நலன்களை அன்றி, தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்யும் புலிகளின் தமிழ் பிரிவினைவாத வேலைத் திட்டம், முன்னேற்றமான மாற்றீடு அல்ல. புலிகளின் இராணுவத் தோல்வியானது, மொத்தத்தில் அதன் அரசியல் வங்குரோத்தின் விளைவேயாகும். அது தமிழர்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்கும் இயலுமை கொண்ட ஒரே சமூக சக்தியான தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அறைகூவலும் விடுக்க இயல்பாகவே இலாயக்கற்றதாகும்.

தொழிலாளர்கள் அவசியமான படிப்பினைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். பாராளுமன்ற ஒருங்கிணைவு மற்றும் திட்டமிடல்கள் என்ற அரசியலின் ஊடாக தொழிலாளர்களின் நலன்களை காக்க முடியாது. கம்பனிகளின் இலாபங்களுக்காக அன்றி, தொழிலாள வர்க்கத்தின் சமூகத் தேவைகளை அடைய முழு சமுதாயத்தையும் மறுகட்டமைப்புச் செய்யும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில், அவர்கள் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும். அத்தகைய போராட்டத்துக்கான அடிப்படை தேவை எதுவெனில், தமது பொது வர்க்க நன்மைக்கான போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே ஆகும். தீவின் யுத்தத்தால் சீரழிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து சகல துருப்புக்களையும் திருப்பியழைக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோரிக்கை விடுக்கின்றது.

உழைக்கும் மக்களுக்கு கல்வியூட்டவும், வாழ்க்கைத் தரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது நெருங்கிக்கொண்டிருக்கும் தாக்குதல்களைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கவும் மற்றும் பல தசாப்தங்களாக நசுக்கப்பட்டு வந்துள்ள வர்க்கப் போராட்ட வழிமுறைகளை உயிர்பெறச் செய்யவுமே ஏப்பிரல் 8 நடக்கவுள்ள தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுகின்றது. உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காக்க வேலைத் தளங்கள், தொழிலாள வர்க்கம் வாழும் பகுதிகள் மற்றும் நகரங்களிலும் கிராமங்களிலும் நடவடிக்கை குழுக்களை அமைக்க ஊக்குவிப்பதற்காக எமது வேட்பாளர்கள் இந்த பிரச்சாரத்தை பயன்படுத்திக்கொள்வார்கள். அத்தகைய நடவடிக்கைக்கு, வங்குரோத்து இலாப முறையுடன் தொழிலாள வர்க்கத்தை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சகல அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களில் இருந்து அரசியல் ரீதியில் முழுமையாக பிரிவது அவசியமாகும்.

தொழிலாள வர்க்கம் அடிப்படை உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும்: முதலாளித்துவ முறை தோல்வியடைந்துள்ளதோடு, புதிய மற்றும் மிகவும் கொடூரமான யுத்தங்கள், அழிவுகரமான காலநிலை மாற்றங்கள் மற்றும் வெகுஜனங்கள் மத்தியிலான சமூக வறுமை போன்றவற்றை தவிர மனித குலத்துக்காகக் கொடுக்க அதனிடம் ஒன்றும் இல்லை. தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, - ஸ்ரீலங்கா-ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை- ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டத்தில் கிராமப்புற வெகுஜனங்களை அணிதிரட்டிக்கொள்ள போராடுவதன் மூலம் மட்டுமே, இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் தமது மிகவும் அடிப்படையான உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள முடியும். நாம் எமது வேலைத் திட்டத்தை படிக்குமாறும், எமது அரசியல் பிரசுரங்களை விநியோகித்து, எமது வேட்பாளர்கள் உரையாற்ற கூட்டங்களை ஏற்பாடு செய்து, எமது பிரச்சாரத்துக்கு நிதி வழங்கி மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்துகொள்வதன் மூலம் எமது பிரச்சாரத்துக்கு செயலூக்கத்துடன் ஆதரவளிக்குமாறு, தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com