Wednesday, March 3, 2010

ஆஸ்திரேலியாவில் மீன் மழை: மக்கள் வியப்பு

ஆஸ்திரேலியா வின் லஜாமனு நகரத்தில் மீன் மழை பெய்ததை மக்கள் விசித்திரமாக பார்த்து ரசித்தனர். ஆஸ்திரேலியாவின் வறட்சியான வடக்குப் பகுதியில், ஆயிரத்துக்கும் குறைவான மக்களே வசிக்கும் சிறிய நகரம் லஜாமனு.

தனாமி பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த வறண்ட நகரத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்துக்கு மாறான தட்பவெப்பம் நிலவி வந்தது. கடந்த இரு நாட்களாக இந்த நகரத்தில் மழை பெய்தது. அப்போது விசித்திரமாக மழைத் துளிகளுடன் மீன்கள் வந்து விழுந்ததாக நகர மக்கள் தெரிவித்தனர்.

நகரின் பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கான மீன்கள் வந்து விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 14 இன்ச் அளவுக்கு இந்த மீன்கள் இருந்தன. 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் மழை நீரில் மீன்கள் வந்து விழுந்ததை பார்த்திருப்பதாக இப்பகுதியில் உள்ள வயதான முதியோர் கூறினர்.

சில நேரங்களில் பலத்த சூறாவளிக் காற்றின் போது, ஆற்று நீரில் உள்ள மீன்கள் உறிஞ்சப்பட்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வீசப்படுவது பொதுவாக நடக்கக்கூடியது தான் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com