Tuesday, March 30, 2010

தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து நித்தியானந்தா விலகல்.

தனது தியானபீட தலைமை பொறுப்பில் இருந்து தான் விலகுவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா உல்லாசத்தில் இருந்த வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோ காட்சிகளில் தோன்றி தனது தரப்பு விளக்கத்தை அளித்து வருகிறார்.

இதுவரை 3 முறை வீடியோவில் தோன்றி பேசியுள்ள நித்யானந்தா இப்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார். அதில், தியான பீட பொறுப்பில் இருந்து நான் விலகுகிறேன் என்று அறிவித்துள்ளார் நித்யானந்தா.

வீடியோவில் நித்யானந்தா கூறியிருப்பதாவது:

நித்யானந்தா தலைமை தியான பீடத்தில் இருந்தும், அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்தும் நான் விலகுகிறேன். தியான பீடம் எப்போதும் போல தொடர்ந்து செயல்படுவதற்கு வசதியாக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். தொடர்ந்து அமைதி வழியில் எனது ஆன்மீக பணியை மேற்கொள்ள உள்ளேன்.

இதற்காக இமயமலைக்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபட உள்ளேன். புதிதாக வரும் ஆசிரம நிர்வாகிக்கும் சீடர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இதுவரையில் எனக்கு ஆதரவு அளித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் இப்போதைக்கு அவர் பெங்களூர் பக்கமே வர மாட்டார் என்று தெரிகிறது.

அவர் மீது தமிழகத்திலும் பெங்களூரிலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலையில், முன் ஜாமீன் கேட்டு நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கடந்த ஒரு மாதமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் நித்யானந்தா இப்போது இமயமலைப் பக்கம் போவதாய் அறிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com