Saturday, March 27, 2010

முஸ்லிம்கள் தமிழருக்கு வாக்களிப்பது ஹறாமானால் ரிசாட்டுக்கு தமிழர் வாக்களிப்பார்களா?

பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் திகதியிடப்பட்ட காசோலைகள் மற்றும் உறுதி மொழிகள் என தேர்தல் அன்பளிப்புக்கள் மக்கள் கதவுகளை தட்டுவதுடன், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்கள் மற்றும் பிரதேச மக்களுக்கு பலதரப்பட்ட நிவாரணப் பொருட்கள் அமைச்சர் ரிசாட் பதுர்தீன் அவர்களால் கடந்த சில வாரங்களாக வாரிவழங்கப்பட்டு வருகின்றது.

வன்னிப்போரில் சிக்குண்டு வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்காக உலகநாடுகள், சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள், உள்ளுர் நிறுவனங்கள் என்பவற்றால் நிவாரணமாக கொடுக்கப்பட்ட பொருட்களை கிடப்பில் போட்டுவைத்த அமைச்சர் ரிசார்ட் அவற்றை தனது தேர்தல் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு போரில் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படாதவர்கள் என்ற எவ்வித பாகுபாடுமின்றி பகிர்ந்தளிப்பதாக தெரியவருகின்றது. குறிப்பாக இப்பொருட்கள் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு தேர்தல் அன்பளிப்பாகச் சென்றடைகின்றன.

வன்னியில் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் ரிசாட் பதுர்த்தீன் இஸ்லாமனவனோ இஸ்லாமானவளோ தமிழ் வாக்காளர் ஒருவருக்கு வாக்களிப்பது ஹறாம் எனப் பாடம் கற்பிக்கும் அதேநேரம் வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு தங்களுக்குகே சொந்தமான பொருட்களை வழங்கி விட்டு அவர்களிடம் விருப்பு வாக்கு கேட்டுச் செல்லும் அளவிற்கு வன்னி மக்களை இழிச்சவாயர்கள் என எடைபோட்டுள்ளாரா எனக் கேட்கத் தோன்றுகின்றது. தமிழ் மக்களை அர்ப்ப சொர்ப்ப லாபங்களை காட்டி விலைக்கு வாங்கிக்கொள்ளமுடியும் என இவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசானை இவர்கள் திருப்பித் தாக்கும் காலம் வெகுவிரைவில் இல்லை எனலாம்.

தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கும் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதைப்பதற்குமாக அரசினால் மிகவும் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் விடயங்களுக்கு வன்னியில் செயல்வடிவம் கொடுப்பவராக அமைச்சர் ரிசாட் பதுர்த்தீன் காணப்படுகின்றார். அமைச்சரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு வன்னியில் அரசசேவையில் உள்ள பல தமிழ் அதிகாரிகள் துணை நிற்கின்றனர். இவ் அதிகாரிகள் சமூக நலன் என்பதை எள்ளளவும் கருத்தில் கொள்ளாதவர்களாக தமது சுயலாபங்களுக்காக செயற்பட்டுவருகின்றனர். இவ் அதிகாரிகள் புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுக்கு தங்களை விசுவாசமானவர்களாக காண்பித்து மக்களை சுரண்டினர். தற்போது புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்துடன் உள்ள மோசடிப் பேர்வழிகளுடன் இணைந்து சுரண்டத் தொடங்கியுள்ளனர். இவ் அதிகாரிகள் அமைச்சருக்கு வழங்கிய ஒத்தாசையினாலேயே குறுகிய காலத்தில் அவரால் குருநாகல் பிரதேசத்தில் 40 கோடி பெறுமதியில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றினை நிறுவ முடிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க கடந்த காலங்களில் புலிகளுக்காக கொடிபிடித்த பல்கலைக்கழக சமூகத்தினர் எனப்படுவோர் தற்போது ரிசாட்டுக்கு கொடிபிடித்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகின்றது. தேர்தலில் வெற்றிபெற்றால் அரச நிர்வாக சேவையில் உயர்இடங்களில் தொழில் வழங்கப்படும் என அளிக்கப்பட்டுள்ள உறுதி மொழியை ஏற்று மேற்படி இளைஞர்கள் ரிசார்டுக்காக தேர்தல் பிரச்சாரங்களை செய்கின்றனர். சிறுவயதிலேயே எவ்வித கொள்கைப்பிடிப்பும் இல்லாமல் தமது சுயநலன்களுக்காக தாவித்திரியும் இவ்விளைஞர்கள் எதிர்காலத்தில் சமூகத்திற்காக எதைச் செய்யப்போகின்றார்கள்? இவர்கள் அரசியல் செல்வாக்கினூடாக தொழில்களைப்பெற்று எமது பிரதேசத்தில் அரச நிர்வாக சேவையில் இணைந்து கொண்டார்களாயின் இவர்கள் சேவை எவ்வாறு இருக்கும்? குரங்கின் கைப்பூமாலைதான்.

எனவே எதிர்வரும் பொது தேர்தலில் வன்னி மாவட்டத்திலிருந்து தமிழர் தரப்பிற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு வைக்கப்பட்டுள்ள பொறியை தமிழ் மக்கள் மிகவும் அவதானதுடன் நோக்கிச் செயற்படவேண்டும். இன்று வன்னியில் காணப்படும் நிலைமை முற்றாக மாறவேண்டுமாயின் அதன் அதிகாரம் அதனை சிறந்த முறையில் செய்யக்கூடியவர்கள் கைக்கு செல்லவேண்டும்.

தியாகராஜா - பூவரசங்குளம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com