Saturday, March 20, 2010

நீதிமன்றத்தில் ஹெட்லி திடுக்கிடும் வாக்குமூலம்.

மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய சதிகாரனான அமெரிக்க தீவிரவாதி ஹெட்லி, பாகிஸ்தானில் இயங்கிய லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றது அம்பலமாகியுள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் தீவிரவாதி ஹெட்லியே இந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான்.

பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லி கடந்த ஆண்டு அக்டோ பர் மாதம் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் முக்கிய சதிகாரனான கோல்மேன் ஹெட்லியிடம் எப்பிஐ அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் அவனைப் பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

பாகிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா நடத்தும் பயங்கரவாத முகாம்களில் பங்கேற்று பயிற்சி பெற்றவன் ஹெட்லி என்பது அம்பலமாகியுள்ளது. 200203ம் ஆண்டில் லஷ்கர்-ஏ-தொய்பாவின் 5 பயிற்சி முகாம்களில் இவன் பங்கேற்றது சிகாகோ நீதிமன்றத்தில் நேற்று அமெரிக்க அட்டர்னி தாக்கல் செய்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2002ம் ஆண்டு பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இவன் லஷ்கர்-ஏ-தொய்பாவின் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு ஆயுதங்களை பயன்படுத்துவது, தீவிரவாத சதிச் செயல்களை அரங்கேற்றுவது போன்றவற்றில் பயிற்சி பெற்றுள்ளான். இதேபோல 2003ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களிலும் லஷ்கர்-ஏ-தொய்பாவிடம் இவன் பயிற்சி பெற்று இருக்கிறான்.

2002ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரப், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மண்ணிலிருந்து லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவித்தார்.

ஆனால் அதனையும் மீறி அந்த காலக்கட்டத்தில் ஹெட்லி லஷ்கர்-ஏ-தொய்பா முகாம்களில் பயிற்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பாவுக்காக இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட இந்த சதிகாரனின் கூட்டாளியான ராணாவும் எஃப்பிஐ-ஆல் கைது செய்யப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com