Saturday, March 13, 2010

இலங்கையின் அனுமதியில்லாமல் ஐ.நா விசாரணை நடத்த முடியாது. பிரதமர்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றது என்கின்றது அமெரிக்கா.
இலங்கை மீது சுமத்தப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்ததுவதாயின் அவர்களுக்கு நாம் அனுமதிவழங்கவேண்டும் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பொரளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர், இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி ஐ.நா. எந்த விசாரணைகளையும் நடத்த முடியாது எனக் கூறியதுடன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு சிலரின் நடவடிக்கைகளே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாற்றியுள்ளது. அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சகத்தினால் வருடந்தோறும் வெளியிடப்படும் மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையின் 2009 ஆம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

இதில் மேற்கூறிய குற்றச்சாற்று இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் தற்போதும், கடத்தல் மற்றும் காணாமல் போகும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன.

இந்த செயல்களில் ஈடுபடும் அரசாங்க ஆதரவு குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் பல்வேறு வழிகளிலும் கைது செய்யப்படுகின்றவர்கள் துன்புறுத்தப்படல், மனிதாபிமானம் அற்ற வகையில் பலவந்தப்படுத்தப்படல், மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படல் போன்றனவும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்கள் தமக்கான சுதந்திரம் இன்றி நெருக்கடியான சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மிகவும் அசாதாரணமான ஒரு பிரதேசத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களின் சுதந்திரம், உரிமை என்பன முற்று முழுதாக மீறப்பட்டுள்ளன. அத்துடன் சட்டத்துக்கு புறம்பான கைதுகளும், தடுத்து வைப்புகளும் அரசாங்கத்தினால் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல், தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களால் அவர்கள் தமக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்படும் போதும், அவை கைவிடப்படுகின்றன.

அத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் நீதிபதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். எனினும் இலங்கையில் பெரும்பாலும் அவ்வாறு நடைபெறுவதில்லை.

இதற்கிடையே பல்வேறு சந்தர்பங்களில், இலங்கை ஜனாதிபதியினால் இராணுவத்தில் இருந்து தப்பி சென்றவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டங்கள் பொது மக்களின் பாவனைக்கு இல்லாது போயுள்ளமைக்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் சட்டவிரோத செயல்கள், அதாவது காணி உள்ளிட்ட சொத்துக்கள் அபகரிக்கப்படல், மற்றும் சுரண்டப்படல், குடும்ப விவகாரங்களில் தலையிடல் போன்ற பல்வேறு முறையற்ற செயல்கள் இடம்பெறுகின்றன என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comments :

Anonymous ,  March 13, 2010 at 9:30 PM  

It's understandable that the entire system of democracy declined owing to the inevitable circumstances,which Srilanka suffered more than 30 years.The government should reconsider to bring
back the country with a full swing of real democracy for which every peace loving citizen is looking for

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com