Tuesday, March 23, 2010

முட்டாளைப் பார்த்து ஏன் பயப்படுகின்றீர்கள்? ஜனாதிபதிக்கு அனோமா கடிதம்.

அண்மையில் சிங்கப்பூர் ஸ்ரேய்ட ரைம்ஸ் பத்திரிகைக்கு மஹிந்த ராஜபக்ச அளித்த பேட்டி தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவின் மனைவி அனோமா கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். அக்கடிதத்தில் 10 மாதங்களின் முன்னால் உலகின் சிறந்த இராணுவத் தளபதி எனது கணவர் என புகழாரம் சூட்டிய உங்கள் வாயால், தற்போது எனது கணவன் ஓர் முட்டாள் என தெரிவிக்கப்பட்டிருப்பதையிட்டு மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளளேன். அவ்வாறு அவர் முட்டாளாக இருந்தால் அவர் மீது ஏன் இத்தனை பீதி கொண்டு பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்.

அக்கடித்தத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிங்கப்பூரில் வெளியாகும் 'ஸ்ரெய்ட் டைம்ஸ்' பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டி விபரம் இலங்கை ஊடகங்களில் வெளியானதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் பேட்டியில் எனது அன்புக் கணவரான பொன்சேகா அரசியல் அனுபவமில்லாத முட்டாள் எனத் தெரிவித்திருப்பதைக் கண்டு நானும், எனது குடும்பமும் கவலையும், வேதனையும் அடைந்தோம். இவ்வாறு கூறியிருப்பதை பார்த்து, பத்து மாதங்களுக்கு முன்னர் அவர் உலகின் மிகச்சிறந்த இராணுவத் தளபதி என்று புகழாரம் சூட்டியது நீங்கள் தானா என்று நான் வியப்படைகின்றேன்.

அன்று போர் வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் வெற்றிக் கேக்கை வெட்டுவதற்கு உரிமையானவர் ஜெனரல் சரத்பொன்சேகாவே என்று பகிரங்கமாகக் கூறி, அவரைக்கொண்டே கேக்கை வெட்டியதையும் மறந்துவீட்டீர்களா? இன்று யுத்த வெற்றியின் சூடு தணிவதற்குள் அவை அனைத்தும் மறக்கப்பட்டவையாகிப் போயுள்ளன.

எனது கணவர் நீங்கள் சொல்வது போன்று அரசியல் தெரியாதவர் என்றால், அவ்வாறான ஒருவருக்குப் பயந்து சட்டவிரோதமாக கைது செய்து தடுத்துவைத்துப் பொய்க்குற்றச்சாட்டுகள் சுமத்தியிருப்பது எதற்காக எனக் கேட்க விரும்புகின்றேன். இதனை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

எனது கணவருடன் அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து, தங்களுக்கும் அரசுக்கும் எதிராக அரச விரோதச்சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆதரவாளர்கள் சகலரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சதிக்குற்றச்சாட்டு பொய்யானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீங்கள் கடந்த தேர்தலில் மேற்கொண்ட மோசடிகள் எனது கணவரால் நிரூபிக்கப்பட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீங்கள் படுதோல்வியை தழுவ நேரிடும் என்ற பயத்திலேயே அவரை சட்டத்திற்கு விரோதமாக தடுத்து வைத்துள்ளீர்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.

மேலும், எனது கணவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உங்களிடம் பத்திரிகையாளர் கேட்டபோது நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலளிக்க தவறியுள்ளீர்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்து அரந்தலாவை பிக்குகளைப் படுகொலை செய்த, ஸ்ரீ மகாபோதி முன்பாக பக்தர்களைச் சுட்டுக்கொன்ற, தலதா மாளிகை போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க வழிபாட்டுத் தலங்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்திய கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர், ஜோர்ஜ் மாஸ்ரர் போன்றோருக்கு உயர் பதவிகளும் வசதி வாய்ப்புகளும் வழங்கியுள்ளதுடன், புலிகளின் பிரதானிகளின் ஒருவரான கே.பி க்கும் இன்று உங்கள் தயவு கிடைத்துள்ளது. இந்நிலைமைகள் பார்க்கும்போது, புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி, தனது குடலை தனது கரங்களில் சுமந்து, மரணத்தின் வாசலுக்கு சென்றுவந்த எனது கணவர், இந்நாட்டுக்காக சிந்திய இரத்தத்தை இலகுவாக மறந்துள்ள நீங்கள், எனது கணவருக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று கூறுவதைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை.

இந்நாட்டின் மக்கள் 2010ம் ஆண்டு தமது தமிழ்-சிங்களப் புத்தாண்டை ஒன்றுபட்ட இலங்கையில், பயங்கரவாத அச்சுறுத்தல் அற்ற நிலையில், கொண்டாட வழிசமைப்பேன் என எனது கணவர் இந்நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றியிருக்கின்றார். அதன் பலனை இன்று நீங்களும், உங்கள் குடும்பமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் நீங்கள் எமது குடும்பத்திற்கு அதனை அனுபவிக்க மறுத்திருப்பது துரதிஸ்டவசமானது.

இன்று எனது கணவருக்கு நீங்கள் இழைக்கும் கொடுமைகள் உங்கள் மனச்சாட்சியை என்றாவது உறுத்தாமல் விடாது என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றேன். அத்துடன் எனது கணவர் உங்களிடமிருந்து மன்னிப்பு எதிர்பார்க்க மாட்டார் என்பதை மாத்திரம் உங்கள் மனதில் உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் எந்த தவறுகளையும் அவர் செய்யவில்லை. உங்களிடம் மன்னிப்பு கேட்பதற்கு.

என அக்கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com