Sunday, March 7, 2010

இராணுவ நீதிமன்றமும் அதன் செயற்பாடுகளும்

கோர்ட் மார்ஷல் என்பது பலரும் அறிந்த பெயர். இராணுவ நீதிமன்றம் என்பது இதன் தமிழ்ப் பெயர். இராணுவம் என்பது எல்லா நாடுகளிலும் ஒரு பெரிய சக்திவாய்ந்த அமைப்பாக செயல்படுகிறது. ஏனெனில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பாரிய பொறுப்பு இராணுவத்தினுடையது. இந்த இராணுவம் ஜனநாயக நாடுகளில்தான் ஆளும் அரசுகளுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்கிறது. இது ஒரு பரந்த, வலுவான, வித்தியாசமான நிறுவனமாக இயங்குவதால் இதை வழிநடத்தவென தனியான சட்டங்கள் உள்ளன. தனிப் பொலிஸ், தனி வாகன இலக்கத் தகடுகள், தனி ஆஸ்பத்திரி, தனி நீதிமன்றம், தனி மறியல்சாலை என இராணுவத்துக்கு எல்லாமே தனிதான். இது உலக வழக்கம். யுத்தம் செய்பவர்களை தனியாகத்தானே வைத்திருக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அவர் தன் பதவிக் காலத்தில் செய்திருக்கக் கூடிய குற்றங்களை விசாரிக்கும்பொருட்டு இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் கோர்ட் மார்ஷல் அல்லது இராணுவ நீதிமன்ற விசாரணை பற்றி பலரும் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் இராணுவ நீதிமன்றம் என்றால் என்ன என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். சுல்பிகார் அலி பூட்டோவை, சதாம் உசைனை விசாரித்த மாதிரியான ஒரு தலைப்பட்ட நீதிமன்றமாக இருக்குமா? அதன் முன் நிறுத்தப்படுபவருக்கு மீட்சியே கிடையாதா? கோர்ட் மார்ஷலுக்கு அகப்படுபவர் மரண தண்டனைக்கு உள்ளாவது படு நிச்சயமா? என்றெல்லாம் பல கேள்விகள் விடையின்றி எழுந்து திரிகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில்தர வேண்டியது ஒரு ஜனநாயக அரசின் பொறுப்பு. இராணுவமும் தெளிவுபடுத்தத்தான் வேண்டும்.

எனவே இன்று அனைவராலும் பரவலாக பேசப்படும் இராணுவ நீதிமன்றம் தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு ஒன்றை இராணுவம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

1991ம் ஆண்டு தொடக்கம் 1998ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் இராணுவ நீதிமன்றின் முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த பாதுகாப்பு படைகளுக்கான முன்னாள் நீதிபதி, அட்வகேட் ஜெனரல் ஓய்வுபெற்ற பிரிகேடியர் எம். ஜே. சமரகோன் இச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார்.

இராணுவ நீதிமன்றம் என்றால் என்ன?
நீதிமன்றங்கள் பல வகைப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. ஒருவர் இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தண்டனை வழங்குவதற்கும் அநீதிக்கு உள்ளான ஒருவர் உரிய தீர்வை பெற்றுக் கொள்வதற்கும் இந்த நீதிமன்றங்கள் சட்ட ரீதியாக உதவுகின்றன.

ஒரு நாட்டின் சாதாரண பிரஜை தொடக்கம் அரசாங்கத்தில் உயர் பதவியை வகிக்கும் ஒருவர் வரை நாடிச் செல்வது சிவில் நீதிமன்றங்களையே. ஆனால் இராணுவ நீதிமன்றம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

இங்கு குற்றம் செய்திருக்கக் கூடிய படையினர்கள் மாத்திரமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். சேவையிலுள்ள படைவீரர், அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற படைவீரர், அதிகாரி அல்லது இராஜினாமா செய்த அதிகாரி இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரித்து உரிய தீர்ப்பை வழங்குவதற்காகவே இந்த இராணுவ நீதிமன்றம் (Court Martial) நியமிக்கப்படுகிறது.

இந்த நீதிமன்றின் செயற்பாடுகள் சிவில் நீதிமன்றின் செயற்பாடுகளை விட மாறுபட்டதாகவும், சட்டத்தையும், ஒழுக்க விதிமுறைகளையும் முற்றிலும் கடைப்பிடிப்பதாகவும் அமைந்திருக்கும்.

இராணுவ நீதிமன்றின் அதிகாரம்

சிவில் நீதிமன்றத்தை போன்றே இராணுவ நீதிமன்றத்திலும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சாதாரண தண்டனை தொடக்கம் இராணுவ சட்டத்தின் 133வது பிரிவின் கீழ் வாய்மூல எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் உயர்பட்ச தண்டனையாக குறித்த நபருக்கு மரண தண்டனை வழங்கவும் முடியும்.

இந்த நீதிமன்றம் எவ்வாறு யாரால் நியமிக்கப்படும்?

இராணுவ நீதிமன்றம் மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். சட்டவிதிமுறைகளுக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவை இராணுவ நீதிமன்ற நீதிவான்களாக நியமிப்பார்.

இதற்கு மேலதிகமாக செயற்படத்தக்க நிலையில் மேலதிக (Waiting Members) உறுப்பினர்களும் நியமனம் செய்யப்படுவர்.

இதேவேளை, நியமிக்கப்படும் மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்கள் தொடர்பிலோ அல்லது அவர்களில் எவரேனும் ஒருவர் தொடர்பிலோ விசாரணைக்குட்படுத்தப்படும் சந்தேக நபர் அதிருப்தி அல்லது குறைபாடுகள் காணும் பட்சத்தில் தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பித்து அவர்களை மாற்றும்படி கோரலாம்.

சந்தேக நபர் முன்வைக்கும் ஆட்சேபனைகளில் உண்மை இருக்கும் பட்சத்தில் வேறு மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

எவ்வாறானவர்கள் நியமனம் செய்யப்பட முடியும்?

குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தரத்திற்கு (Rank) சமமானவராக தற்போது சேவையில் இருக்கும் ஒருவரே இந்த இராணுவ நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட முடியும்.

அவ்வாறு சமமான தரத்தைக் கொண்ட அதிகாரி ஒருவர் தற்போது சேவையில் இல்லாத பட்சத்தில் அந்த தரத்தைவிட குறைந்த தரத்தைச் (Law Rank) சேர்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க முடியும்.

எந்த அடிப்படையில் கைது செய்ய முடியும்

குற்றம் இழைத்ததாக கூறப்படும் ஒருவர் மூன்று சட்ட விதிமுறைகளுக்கு அமைய கைது செய்யப்படலாம்.

1. இராணுவச் சட்டம் (Army Act)

2. இராணுவ ஒழுக்க விதிகள் (Army Disciplinary Regulations)

3. இராணுவ நீதிமன்ற ஒழுக்க விதிகள் (Army Court Martial Regulations)

யார் கைது செய்வது, முறைப்பாடு அவசியமா

இராணுவத்திலுள்ள ஒருவர் குற்றம் செய்யும் பட்சத்தில் அவரை மற்றொரு இராணுவ வீரரோ அதிகாரியோ கைது செய்ய முடியாது. மாறாக (Military Police) இராணுவ பொலி ஸாரால் மாத்திரமே கைது செய்யப்பட முடியும். கைதுசெய்ய போகும் இராணுவ பொலிஸார் குற்றவாளியி டம் கைது செய்வதற்கான காரணத்தின் அடிப்படையை மாத்திரம் கூறினால் போதுமானது.

ஒருவருக்கு எதிராக இராணுவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படும் பட்சத்தில் அல்லது சேவையிலுள்ள அல்லது ஓய்வுபெற்ற ஒருவர் இராணுவ சட்டத்திற்கு முரணாக நடந்துள்ளார் என்பதாக இனங்காணப்பட்டால் அவர்களை கைதுசெய்யும் அதிகாரம் இராணுவ பொலிஸாருக்கு உண்டு.

கைது செய்வதற்கான கால எல்லை

* சேவையிலுள்ள ஒருவர் குற்றம் இழைத்து மூன்று வருடங்களுக்கு உட்பட்ட காலத்திற்குள் மேற்குறிப்பிட்ட இராணுவ சட்ட விதிகளுக்கு அமைய கைது செய்யப்படலாம்.

* சேவையிலிருந்து ஓய்வுபெற்ற படைவீரர், அதிகாரி அல்லது இராஜினாமா செய்த அதிகாரி, ஒருவரை சேவையிலிருந்து ஓய்வு அல்லது இராஜினாமா செய்த ஆறு மாத காலத்திற்குள் கைது செய்ய இராணுவ சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளது.

எந்த நேரத்திலும் கைது செய்வதற்கான குற்றங்கள்

1. தேசத் துரோகம்

2. இராணுவத்தை ஏமாற்றுதல்

3. இராணுவத்திலிருந்து தப்பி ஓடுதல்

மேற்படி குற்றச் செயல்களில் எவற்றை செய்தாலும் சரி அவர்களை எந்த நேரத்திலும் கைது செய்யலாம். கைதுசெய்யப்பட்டவுடன் எடுக்கப்படும் நடவடிக் கைகளும், கால எல்லையும் இராணுவ பொலிஸாரி னால் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு எதிரான சாட்சியங்கள் பதிவு செய்யப்படும். அந்த சாட்சிகள் தொடர்பில் ஆராயப்பட்ட (Summary of Evidence) சாட்சியங்களின் தொகுப்புகள் தயாரிக்கப்படும். சாட்சியங்களும், சாட்சியங்களின் தொகுப்புகளும் தயாரிப்பதற்கு ஒரு நாள் தொடக்கம் பல மாதங்கள் தேவைப்படலாம். இதற்கான கால எல்லை கிடையாது. சாட்சியங்களின் தொகுப்புகள் தயார்படுத்தி பூர்த்தியான பிறகு அவை இராணுவ நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும். குற்றஞ் சுமத்தப்பட்டவ ருக்கு வழங்கப்படும் சலுகைகள்

குற்றஞ் சுமத்தப்பட்ட நபர் ஒருவருக்கு சிவில் நீதிமன்றத்தில் வழங்கப்படுவதை போன்று பல்வேறு சலுகைகள் இராணுவ நீதிமன்றத்திலும் வழங்கப்படுகின்றது.

* குற்றஞ் சுமத்தப் பட்ட நபர் தனக்காக வாதாடுவ தற்கு தான் விரும்பும் சட்டத்தரணி ஒருவரை தெரிவு செய்ய முடியும்.

* விசாரணைகளின் போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணைகளும் செய்ய முடியும்.

* தனக்காக வாதிடுவதற்காக தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக தனது நண்பர் ஒருவரையும் முன்மொழிய முடியும்.

* (Court of Appeal) அல்லது (Supreme Court) உச்ச நீதிமன்றுக்கும் செல்லலாம்.

தீர்ப்பு

சிவில் நீதிமன்றில் நீதியரசர் அல்லது நீதவான் அந்த வழக்கு தொடர்பாக ஆராய்ந்து இறுதியாக தீர்ப்பை வழங்குவார்.

மூன்று அல்லது ஐந்து பேர் கொண்ட நீதிமன்றிலும் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும் இறுதி முடிவை நீதியரசர் அல்லது பிரதேச நீதவான் எடுப்பார்.

இராணுவ நீதிமன்றத்தை பொறுத்த மட்டில் நியமிக்கப்படும் மூன்று அல்லது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவே இறுதி முடிவை எடுக்கும்.

அந்தக் குழு ஒன்றாக இணைந்தே தண்டனையை அறிவிப்பார்கள்.

இந்த நீதிமன்றில் உள்ளவர்கள் (Judge Advocate General) நீதிபதி, அட்வகேட் ஜெனரல் என்றே அழைக்கப்படுவர்.

தினகரனுக்காக ஸாதிக் ஷிஹான்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com