Tuesday, March 2, 2010

வஞ்சம் தீர்க்கும் அரசியல் எம்மிடம் கிடையாது : ஜனாதிபதி

நாட்டில் என்ன தான் அபிவிருத்தி இடம்பெற்றாலும் மக்களின் வாழ்க்கை தரமும், நற்பண்புகளும் மேம்படாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எந்தப் பயனுமே இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மாலையில் பெல்மதுல்லையில் தெரிவித்தார். பெல்மதுல்ல ரஜமஹா விகாரையில், நடைபெற்ற அறநெறிச் சந்திப்பில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில் இவ்வைபவத்தில் பங்குபற்றுவதையிட்டு நான் பெரிதும் சந்தோஷப்படுகின்றேன். இந்த விகாரைக்கு நான் தொழில் அமைச்சராக இருந்தபோது முதலாவதாக இங்கு வந்தேன். அப்போது இங்கு தொழிற் பயிற்சி நிலையமொன்றையும் திறந்து வைத்தேன். அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த சமயமும் வந்து சென்றேன். இப்பகுதிக்கும் எமக்கும் நீண்ட காலமாக நல்ல தொடர்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் எனது வெற்றிக்காக தேரர்கள் பாரிய பங்களிப்பும் செய்திருக்கின்றார்கள்.

இந்த நாடு அச்சுறுத்தல்களுக்குள்ளான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பெளத்த தேரர்கள் முன்வந்து நாட்டை அந்த அச்சுறுத்தல்களிலிருந்து மீட்டெடுத்திருக்கின்றார்கள். இது வரலாறாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தால் நாட்டின் நிலைமை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை விபரிக்கவே முடியாது. நாம் ஜனநாயகத்தையும் பாதுகாப்புகள் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின் றோம். எம்மிடம் வஞ்சம் தீர்க்கும் அரசியல் கிடையாது.

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதேநேரம் சுமார் முப்பது வருடங்கள் நாட்டுக்குப் பெரும் தலையிடியாக இருந்த பயங்கரவாதத்தை குறுகிய காலத்தில் ஒழித்துக்கட்டி துண்டாடப்பட்டிருந்த நாட்டை மீளவும் ஒன்றுபடுத்தியுள்ளோம். பாரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எமது பதவிக் காலத்தில் இங்கு ஆரம்பிக்க ப்பட்டிருக்கின்றன.

வீதி அபிவிருத்தி, மின்னுற்பத்தித் திட்டங்கள், துறைமுகங்களின் அபிவிருத்தி என பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதிலும் நாட்டில் என்ன தான் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அவற்றின் மூலம் மக்கள் மேம்பாடு அடையாவிட்டால் அந்த அபிவிருத்திகளால் எந்த பயனுமே இல்லை. மக்களின் உள்ளங்கள் மேம்பட வேண்டும். அது அவர்களை சிறந்த நற்பண்பாளர்களாக மேம்படச் செய்யும் அத்தோடு மக்களின் வாழ்க்கைத் தரமும் வளர்ச்சி அடையும். இவை எதிர்கால சமுதாயத்திற்குச் சுபீட்சத்தைப் பெற்றுக் கொடுக்கும்.

மக்களின் உள்ளங்களை மேம்படுத்தவென தேரர்கள் பாரிய பங்களிப்பு செய்கிறார்கள். இருப்பினும் இந்நாட்டினருக்கும், வெளிநாட்டவருக்கும் பெளத்த மதம் குறித்த தெளிவை ஏற்படுத்த வேண்டிய தேவை நிலவுகின்றது. இதனை அவரவர் மொழிகளிலேயே செய்ய வேண்டும். இதற்கு வெளிநாட்டு மொழிகளின் அறிவு அவசியம். அதனால் வெளிநாட்டு மொழி அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு பிரிவெனா கல்வி பெரிதும் உதவும். இதனூடாக பெளத்த மதத்தை பரப்ப முடியும். இத்திட்டத்திற்கு நாம் பங்களிப்பு செய்யத் தயாராகவுள்ளோம்.

அரசியல்வாதிகள் எப்போதும் முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழவேண்டும். அவர்கள் மக்களின் வாழ்க்கை தர மேம்பாட்டுக்காகப் பாடுபடவேண்டும். அந்த வகையில் இரத்தினபுரி மாணிக்கக் கல் நிறைந்த பூமி என்றாலும், இங்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் சீவிக்கின்றார்கள்.

இவ்வாறான மக்கள் வாழும் பிரதேசங்கள் ஏற்கனவே அடையாளப்பத்தப்பட்டுள்ளன. இம்மக்களின் வாழ்வாதாரத்தை பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com