Friday, March 5, 2010

யு.எஸ். ராணுவத் தலைமையகம் பென்டகனில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்: சுட்டவர் பலி

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் நுழைவாயிலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் திருப்பிச் சுட்டதில், மர்ம நபர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.

அந்த மர்ம நபரால் சுடப்பட்டு காயமடைந்த இரு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட நபர் அமெரிக்கர் என்று தெரிய வந்துள்ளது. பென்டகன் வளாகத்திற்குச் செல்லும் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக, பென்டகன் நுழைவாயிலை அடைந்தார் அந்த நபர்.

அப்போது அங்கு நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் நுழைவாயிலைத் தாண்டிச் செல்ல வழங்கப்படும் பாஸைக் காட்டுமாறு கேட்டனர். இதையடுத்து தனது கோட் பைக்குள் கையை விட்ட அந்த நபர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து அருகில் நின்றிருந்த மற்ற பாதுகாப்பு அதிகாரிகள், அந்த மர்ம நபரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் சுருண்டு விழுந்தார். அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அமெரிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்கியபோது பென்டகனும் தாக்கப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் அது புதுப் பொலிவுடன் இயங்கத் தொடங்கியது. நான்கு மாதங்களுக்கு முன்புதான் அமெரிக்க ராணுவத்தின் போர்ட் ஹூட் முகாமில் ஒரு டாக்டர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தி சிலரது உயிரைப் பறித்தார்.

இந்த நிலையில் பென்டகனுக்குள் ஊடுறுவ முயன்ற ஒரு நபர் சுட்டதில் 2 பேர் காயமடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இது தீவிரவாத முயற்சி போல தோன்றவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஜான் பேட்ரிக் பெடல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரது வயது 36.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பென்டகனுக்குள் செல்லும் ஐந்து நுழைவாயில்களும் மூடப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு நடந்த நுழைவாயில் தவிர மற்ற நான்கும் திறக்கப்பட்டன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com